

பாலிவுட்டின் தற்போதைய குயீன் கங்கனாதான். ஆனால், இந்த உயரத்தை அடைந்த பிறகும், கங்கனாவால், தான் ஆரம்ப கால நடிகையாகப் போராடிக்கொண்டிருக்கும்போது மோசமாக நடத்தப்பட்டதை மறக்கவோ, மன்னிக்கவோ இயலவில்லை.
“நான் ஒரு நடிகையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது சிலர் என்னை மோசமாக நடத்தினார்கள். ஒரு நடிகை, எப்போதும் ஒரு நடிகரையோ, தயாரிப்பாளரையோ சார்ந்து இருப்பதாகவே கருதப்படுகிறார். ஒரு பெண்ணை மோசமாக நடத்துவதற்கு முன்னால் யாராக இருந்தாலும் வெட்கப்பட வேண்டும். ‘அவள் ஒரு பெண்தானே, அவளால் என்ன செய்துவிட முடியும்’ என்றுதான் பெரும்பாலானர்கள் எண்ணுகிறார்கள்” என பாலிவுட்டில் தனக்கு ஏற்பட்ட ஆரம்ப கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கங்கனா.
நான் காப்பியடிப்பவன்
சத்யஜித் ராயின் ‘பதேர் பஞ்சாலி’யைத் தன் வாழ்க்கை யின் ‘பைபிள்’ என்று சொல்கிறார் இயக்குநர் ஷூஜித் சர்கார். “நான் சத்யஜித் ராயின் பாணியிலேயே படமெடுக்கிறேன். அவரைக் காப்பியடிக்கிறேன். நான் அவரிடம் இருந்து என்ன காப்பியடிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால், எனக்கு அது தெரியும். என் எல்லாப் படங்களிலும் சத்யஜித் ராய் இருக்கிறார்” என்று சொல்கிறார் சர்கார்.
“என் வாழ்க்கையை பதேர் பஞ்சாலியைப் பார்ப்பதற்கு முன், ‘பார்த்தபின் என இரண்டாகப் பிரிக்குமளவுக்கு அந்தப் படம் என்னைப் பாதித்திருக்கிறது” எனத் தனக்கும் ‘பதேர் பஞ்சாலி’க்குமான உறவைப் பகிர்ந்துகொள்கிறார். ஷூஜித் சர்க்கார் பாலிவுட்டில் ‘பிக்கு, ‘விக்கி டோனார்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
துணிச்சலான படம்
அனுராக் பாசு இயக்கும் ‘ஜக்கா ஜாசூஸ்’ திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம். இது பற்றி விளக்கமளித்திருக்கிறார் நாயகி கத்ரீனா கைஃப். “ படத்தின் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்டது. சில கடினமான காட்சிகள் மட்டும் திரும்ப எடுக்கப்பட வேண்டியுள்ளது. இது ஒரு துணிச்சலான படம்” என்கிறார். இது அப்பாவைத் தேடும் இளம் துப்பறியும் நிபுணரின் கதை. படத்தின் நாயகன் ரன்பீர் கபூர்.