

முப்பரிமாணத் தொழில் நுட்பத்தில் 2011-ல் வெளியாகி ஹாலிவுட்டைக் கலக்கிய படம் ‘ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
மேட் ரீவ்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அன்டி செர்க்கிஸ், கேரி ஓல்ட்மேன், ஜேசன் க்ளார்க், கேரி ரஸல் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
‘ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தின் தொடர்ச்சியாக ‘டானின்’ கதை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. மனிதக் குரங்குகள் தங்கள் நாகரிகத்தை முற்றிலும் புதிதாக உருவாக்கி, மனிதர்களின் நடமாட்டமே இல்லாமல் எப்படித் தங்களுக்கே உரிய உலகில் வாழ்ந்துவருகின்றன என்பதில் படம் ஆரம்பிக்கிறது. அவர்களது வாழ்க்கையில் மனிதர்கள் தலையீட்டால் எப்படி ஒரு யுத்தம் உருவாகிறது என்பதுதான் மீதி கதை. ‘ரைஸ்’ படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் அப்படியே இந்தப் படத்திலும் வருகின்றன. மனிதர்களைவிடப் பல மடங்கு திறமையான மனிதக் குரங்கை, மரபணு வைரஸ் மூலம் உருவாக்கிய விஞ்ஞானி கதாபாத்திரத்தில் ஜேம்ஸ் ப்ரான் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகளில் அன்டி செர்க்கிஸின் சீசர் 2000 மனிதக் குரங்குகள் இருக்கும் காலனிக்குத் தலைவராக உருவாகி இருக்கிறது. இதில் மனிதர்கள் நடித்திருந்தாலும் படம் முழுக்க முழுக்க மனிதக் குரங்குகளின் வாழ்க்கை பற்றி சீசரின் பார்வையில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற இருக்கும் 1, 200 ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை, நியூசிலாந்து விடா டிஜிட்டல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதில் மட்டுமே ஓராண்டு கவனம் செலுத்தி உருவாக்கி இருக்கிறதாம். ஜூலை 18-ம் தேதி வெளியாகும் இந்த ‘டான்’ படமும் “ரைஸ்” போலவே மிகப் பெரிய 3டி விருந்தாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.