மீண்டும் வருகிறாள் ‘மஞ்சு’ - ஸ்ருதிஹாசன் பேட்டி

மீண்டும் வருகிறாள் ‘மஞ்சு’ - ஸ்ருதிஹாசன் பேட்டி
Updated on
3 min read

ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் சினிமாவின் போக்கில் அதிர்வுகளை உருவாக்கிய திரைப்படம், ருத்ரய்யா இயக்கத்தில் 1978-ல் வெளியான ‘அவள் அப்படித்தான்’. ‘மஞ்சு’ எனும் மையக் கதாபாத்திரத்தை முன்னிறுத்திய அந்தப் படத்தின் மறு உருவாக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கரோனா ஊரடங்கில் ஹைதராபாத்தில் வசித்துவரும் ஸ்ருதிஹாசனுடன் விரிவாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

‘அவள் அப்படித்தான்' படத்தின் மறு உருவாக்கத்தில், நடிக்கப் போகிறீர்கள் என்ற தகவல் உண்மையா?

உண்மைதான். ஆனால், ‘ஒரு ஐடியாவாக’ மிகவும் தொடக்க நிலையில் இருக்கும் அப்படம் பற்றி இப்போதே பேசுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ‘ஹலோ சகோ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்களை நான் பேட்டியெடுத்தேன். அந்த நிகழ்ச்சியை பத்ரி வெங்கடேஷ் இயக்கினார். மிகத் திறமையான இயக்குநர். அவர், ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். அவர்தான் மறு உருவாக்கம் பற்றிய விருப்பத்தை முன்வைத்தார். நான் ஒப்புக்கொண்டேன். அதற்கான தொடக்க வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

அந்தப் படத்தைச் சிறுவயதில் ஒருமுறை பார்த்தேன். என்னிடமும் தங்கை அக்ஷராவிடமும் அந்தப் படத்தைப் பற்றி அப்பா நிறையவே பேசியிருக்கிறார். அப்பா, ரஜினி அங்கிள், ஸ்ரீப்ரியா ஆண்ட்டி மூவரும் மிக பிஸியாக இருந்த காலத்தில், நல்ல சினிமாவுக்காகப் பங்களிப்பு செய்ய வேண்டும் என நேரம் ஒதுக்கி அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்த நாட்களை அவர் நேசித்திருக்கிறார். இப்போது பத்ரி சொன்னபிறகு மீண்டும் படத்தைப் பார்த்தேன். மஞ்சு எத்தனை புரட்சிகரமான கதாபாத்திரம் என்பதை எண்ணி வியந்தேன். திறமை, துணிவு, தன்னம்பிக்கை ஆகிய காரணங்களால் தன்னைத்தானே அவள் தற்காத்துக்கொண்டாள். தனது நிலையில் அவள் பிடிவாதமாக இருந்தாள். அவள் ஓர் அடையாளம்.

#மீடூ ஓர் இயக்கமாக உருவெடுத்த தற்காலத்தில் இந்தப் படம் மீண்டும் உருவாக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘அவள் அப்படித்தான்’ மஞ்சு எல்லாக்காலங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதற்கான அத்தாட்சிதான் #மீடூ இயக்கம். பெண்களுக்கு ஊக்கம் தந்திருக்கும் ஓர் இயக்கம். #மீடூவால் உலகில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. 42 ஆண்டுகளுக்கு முன்பே ‘அவள் அப்படித்தான்’ தேவைப்பட்டிருக்கும்போது, இப்போது அந்தப் படத்தின் தேவை இன்னும் அதிகமாகிவிடுகிறது அல்லவா?

மஞ்சு கதாபாத்திரத்தைப் போல் ஸ்ருதிஹாசனும் ‘ஸ்ரைட் ஃபார்வேட்’தானே?

அப்படித்தான் எல்லோரும் என்னைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ‘ஸ்ரைட் ஃபார்வேட்’ ஆக இருப்பது எனக்குப் பிடிக்காது. அப்படியிருந்தால் நமது ‘எனர்ஜி’ வீணாகும் என்று நினைப்பவள் நான். மஞ்சு கதாபாத்திரத்துக்கு நடந்ததுபோல் நிஜ வாழ்க்கையில் எனக்கு எதுவும் நடந்ததில்லை. ஆனால், நிறையப் பெண்களுக்கு நடக்கக்கூடியதுதான். அதைத் தள்ளி மிதித்து கடந்துபோய்தான் அவர்கள் வாழ்க்கையில் நின்றுகாட்டிவிடுகிறார்கள்.

உங்களுடைய தோற்றம், உயரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, ‘பொன்னியின் செல்வன்’ மாதிரியான வரலாற்றுப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையாமல் போக என்ன காரணம்?

வரலாற்றுக் கதாபாத்திரங்களில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். வாய்ப்பு வந்தால் விட்டுவிட மாட்டேன். ஆனால், எனது தோற்றப்படி என்னை மொத்தமாகத் தமிழ்ப் பெண் என்றும் சொல்லமுடியாது, வட இந்தியப்பெண் என்றும் சொல்லமுடியாது. வெளிநாட்டுக்குச் சென்றாலோ என்னை ‘இந்தியப் பெண்’ என்று யாரும் நம்புவதில்லை. இது எனது பலமா, பலவீனமா என்று தெரியவில்லை. இந்த இடத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி சொல்லவேண்டும். எனது இந்தத் தோற்றச் சிக்கலை மீறி, ‘7-ம் அறிவு’ படத்தில் சுபா னிவாசன் என்ற பொருத்தமான கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி, ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.

அமெரிக்க டிவி தொடரில் நடித்தது, சுயாதீன இசைப் பாடகியாக அங்கே நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கியிருப்பது எல்லாமே உங்களுடைய இந்தத் தோற்றத்தின் பயன்கள் எனலாமா?

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 17 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசை மாணவியாக ஒரு அமெரிக்கச் சிறுமியைப்போல வலம் வந்திருக்கிறேன். அதன்பின் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது டிவி தொடர், டிவி ஷோ, சுயாதீன இசை நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும்,

ஸ்ருதிஹசன் ஒரு இந்தியப் பெண்ணா, தமிழ்ப் பெண்ணா, அவள் பாலிவுட்டா, கோலிவுட்டா, கமல்ஹாசன் யார் என்றெல்லாம் அங்கேயிருக்கும் பார்வையாளர்களின் கண்களில் புலப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, என்னிடம் என்ன திறமை இருக்கிறது, என்ன இசை இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள். அதற்காவே அங்கே சுயாதீன இசையில் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டேன்.

தற்போது படங்களை அதிகம் ஒப்புக்கொள்வதில்லை போல் தெரிகிறதே?

இது நானே எடுத்துக் கொண்ட இடைவேளை. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால், கமர்ஷியல் படங்களிலும் கதையை நகர்த்திச் செல்லும் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்ற இடத்துக்கு வந்துவிட்டேன். அப்படித்தான் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ‘லாபம்’ படத்தில் விஜய்சேதுபதியுடனும் தெலுங்கில் ரவிதேஜாவுடன் ‘கிராக்’ படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களிலும் நான் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைத்தன. கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் ‘தேவி’ என்ற குறும்படத்தில் அதன் உள்ளடக்கத்துக்காகவும் படைப்பாக்க முயற்சிக்காகவுமே நடித்தேன்.

ஸ்ருதிஹாசனுக்கும் அப்பாவின் கட்சி அரசியலுக்கும் எந்த அளவுக்குத் தொடர்பு உண்டு?

அரசியல் பற்றி விவாதிக்கிற அளவுக்கு நான் அத்துறையில் அறிவை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. அவரது கட்சி அரசியலுக்கும் எனக்குமான தொடர்பு பூஜ்ஜியம் என்பேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in