

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, மற்றும் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் வரிசையில் தற்போது மேலும் ஒரு தயாரிப்பாளர் நடிகராகக் களம் காண வந்துவிட்டார். அவர் ‘எக்ஸெட்ரா என்ட்டர்டெயின் மெண்ட்’ மதியழகன். அருண்விஜய் - ரித்விகா சிங் ஜோடியாக நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார். படத்தைத் தயாரிப்பதும் அவர்தான்.
சேரனின் வருத்தம்!
‘ஆட்டோகிராப்’ படமாகும் முன்னர் கதையைக் கேட்ட விஜய், அதில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. பின்னர், சேரன் நடித்துப் படம் வெளியானதும் படத்தைப் பார்த்த விஜய், போனில் மனம் திறந்து பாராட்டியதையும் தனது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதையும் சேரன் இப்போது பதிவிட்டிருக்கிறார். ‘விஜய் நடிக்க விரும்பியபோது, ‘தவமாய்த் தவமிருந்து’ படப்பிடிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் போகமுடியவில்லை. அதற்காக விஜயிடம் வருத்தம் தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆலியாவுக்கு ஆப்பு!
‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் தேஜா கதாநாயகர்களாகவும் ஆலியாபட் நாயகியாகவும் நடித்து வந்தனர். ஆனால், பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பெரும் சூறாவளியாக மாறியதில் ஆலியாவும் சிக்கிக்கொண்டிருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சுஷாந்த் பற்றி ஆலியா சொன்ன கருத்துகளை உள்ளடக்கிய காணொலி ஒன்று தற்போது வைரலாக, ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து ஆலியாவை நீக்காவிட்டால் அந்தப் படத்தைப் புறக்கணிப்போம்’ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். லட்சக் கணக்கான ஆலியாவின் ரசிகர்கள் அவரைச் சமூக வலைத்தளங்களிலிருந்து ‘அன்ஃபாலோ’ செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
அஞ்சாத படக்குழு!
கேரளத்தின் மலபாரில் 1921-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியில், பிரிட்டிஷ் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னோடி சுதந்திரப் போராட்ட வீரர் வரியம்குன்னத் குன்ஹா அஹமத் ஹாஜி. அவரது வாழ்க்கைக் கதையை, ஆஷிக்அபு - பராரி ஆகிய இருவரும் திரைப்படமாக இயக்க குன்ஹா அஹமத் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார். தற்போது கரோனா ஊரடங்கிலும் இந்தப் படத்தின் அறிவிப்பு கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. படக்குழுவோ, ‘சர்ச்சை சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்’ என்று அறிவித்துவிட்டது.