

தொழில்நுட்ப உதவியுடன் 'சூரரைப் போற்று' படத்தின் பின்னணி இசைக்கோப்பு, தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் முதல் படத்துக்கான பாடல்கள் உருவாக்கம் என, கரோனா ஊரடங்கிலும் ஜி.வி.பிரகாஷ் செம பிஸி. பெண் குழந்தைக்கு அப்பாவாகியிருக்கும் அவரது பேச்சில் அவ்வளவு நிதானம். வசந்த பாலன் இயக்கியிருக்கும் 'ஜெயில்' படத்தில் நடித்து இசையமைத்திருக்கிறார். அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'காத்தோடு காத்தானேன்' பாடல் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷுடன் தொலைபேசியில் உரையாடியதிலிருந்து...
ஊரடங்கிலும் பிஸியாக இருக்கிறீர்களே..
ஒரே இடத்தில் இருந்து செய்யும் இசை தொடர்பான வேலைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், யாரையும் ஸ்டூடியோவுக்கு அழைத்துப் பாடவைக்க முடியாது. இந்த இடத்தில் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. அதனால் முடிந்தவரை இசைக்கோப்பு வேலைகளை முடித்துவருகிறேன். தனுஷ் - கார்த்திக் நரேன் படத்துக்கு மூன்று பாடல்கள் தயார்.
'சூரரைப் போற்று' படத்தின் பணிகளை முடித்துவிட்டேன். ஊரடங்கில் சொந்தக் கடமைகளைச் செய்வதும் முக்கியமல்லவா? முழுக்க இசைப்பணிகளிலேயே இருந்தேன் என்று சொல்ல முடியாது. இரவானால் சின்னப் பையன் மாதிரி வீடியோ கேம்ஸ் விளையாடுவேன். பிறகு என் குழந்தையைப் பார்க்க மனைவி வீட்டுக்குப் போய்விடுவேன். இந்த ஊரடங்கால் மனைவி மகளுடன் அதிக நேரம் செலவிட முடிந்ததில் சந்தோஷமும் நிறைவும் உண்டு.
‘ஜெயில்' பட அனுபவம் எப்படியிருந்தது?
எனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக 'ஜெயில்' இருக்கும். வசந்த பாலன் இந்தக் கதையைச் சொன்னவுடன், இப்படியெல்லாம் கூட நடந்திருக்கிறதா என்ற சிந்தனை ஓடியது. குடிசைப்பகுதி மக்களுக்கு எவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது எனக் கதை கேட்ட நாள் முழுவதும் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. முழுக்க கண்ணகி நகரிலேயே படமாக்கினோம். அங்குள்ள மக்கள் பார்க்கத்தான் கரடுமுரடாக இருப்பார்கள். ஆனால், மென்மையானவர்கள்; அன்பானவர்கள்.
முதலில் இசையமைப்பாளர், இப்போது நடிகர் என வசந்த பாலனுடன் பணிபுரிந்த அனுபவம்?
இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் வசந்த பாலன்தான். நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த நேரத்தில், எனது ஷோ ரீலைக் கேட்டு அது அவருக்கு ரொம்பப் பிடித்துப்போய் எனக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தார். அவர் வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால், இன்று இந்த ஜி.வி. இல்லை. இப்போது அவருடைய இயக்கத்திலேயே நடித்தது எனக்கு மிகப் பெரிய பாடம். ஒவ்வொரு காட்சியையும் அவர் சிரத்தை எடுத்துப் படமாக்குகிறார். ஒரு ரசனைமிக்க படைப்பாளி இப்படித்தான் வெளிப்படுகிறார். நடிகர்களின் கண் அசைவுகளைக் கூட உன்னிப்பாகக் கவனிப்பார். ஒவ்வொரு காட்சிக்கும் துல்லியமான நடிப்பை வாங்கி மெருகேற்றுவார்.
‘அசுரன்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பில் பிஸியாகிவிட்டீர்களே..
எனக்கு 'அசுரன்' வெற்றி மிக முக்கியமானது. ஒவ்வொரு காட்சியாகக் குறிப்பிட்டுப் பின்னணி இசையைப் பலரும் பாராட்டியதை இன்னும் மறக்கவில்லை. அதே போல், நண்பர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் எனச் சிலர் நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல; நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் இசையமைப்பாளராக எந்தவொரு படமும் என்னால் தாமதமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த ஊரடங்கில் 'வாடிவாசல்' படத்துக்கு எப்படியெல்லாம் இசையமைக்கலாம் என்று கற்பனை செய்து வருகிறேன். அதுவும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
நடிப்பு, இசை என இரண்டுக்கும் வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
அனைத்து விமர்சனங்களையும் படிப்பேன். அவற்றில் எவையெல்லாம் தவறு எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார்களோ அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அடுத்த படத்தில் சரிசெய்வேன். அதேநேரம் ‘இவனைக் கிண்டல் செய்ய வேண்டும்’ என்ற உள்நோக்கத்துடன் சிலர் செய்யும் விமர்சனங்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
இந்த ஊரடங்கின் மூலம் கற்றுக் கொண்டது என்ன?
எப்போதுமே வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் கிடையாது என நம்புவேன். எல்லா நாளும் ஒரே மாதிரி அமையாது. அன்றைய தினம் சந்தோஷமாக இருக்கிறோமா, நம்மைச் சுற்றியிருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா அதை மட்டும் எப்போதும் பார்த்துக்கொள்வேன். இந்த ஊரடங்கில் வரும் செய்திகள், தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிந்துகொண்டேன். இந்த உலகுக்கு நிறைய அன்பு தேவைப்படுகிறது.