Published : 19 Jun 2020 08:43 AM
Last Updated : 19 Jun 2020 08:43 AM

தனியிசை: சிம்பொனியில் மேலும் ஒரு தமிழர்!

தனது குழுவினருடன் கணேஷ் பி. குமார்

திரை பாரதி

மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் சிம்பொனி இசைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரது சிம்பொனிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்து, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருவாரூர் இளைஞரான ராஜன்சோமசுந்தரம், தேர்ந்தெடுத்த சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு சிம்பொனி இசைஅமைத்து வெளியிட்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த கணேஷ் பி. குமார் இந்தச் சாதனைப் பட்டியலில் தற்போது இடம் பிடித்திருக்கிறார். இவர், ‘ரைஸ்’ (Rise) என்னும் வாத்திய இசை சிம்பொனி, ‘தி ஜர்னி’ (The Journey) என்னும் தலைப்பில் இசையும் குரலும் இணைந்த சிம்பொனிப் பாடல் (Symphonic Poem) ஆகிய இரண்டு வடிவங்களிலும் மேற்கத்திய பாணியில் இசையமைத்திருக்கிறார். இவற்றை அமெரிக்காவின் நவோனா ரெகார்ட்ஸ் (Navona Records) என்னும் நிறுவனம் வரும் ஜூன் 26 அன்று ‘ஸ்பிரிட் ஆஃப் ஹ்யுமேனிடி’ (Spirit of Humanity) என்ற தலைப்பில், ஒரு ஆல்பமாக வெளியிடுகிறது.

‘இவ்விரு வடிவங்களிலும் முயன்று வெற்றிபெற்றிருக்கும் முதல் இந்திய இசையமைப்பாளர்’ என்று ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற சிம்பொனி இசை நடத்துநர் பெர்ன்டு ரஃப் (Bernd Ruf) கூறியிருக்கிறார். ’ரைஸ்’ பாடலுக்கு இசை நடத்துநராக இவர் நெறியாள்கை செய்ய, ஜெர்மனியின் புகழ்பெற்ற ஸ்டாட்ஸ்காப்பெல்லே (Staatskaapelle) சிம்பொனி இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள 91 வாத்தியக் கலைஞர்களைக் கொண்ட குழுவால் ‘ரைஸ்’ சிம்பொனி இசைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மார்குஸ் ஃபிஷர் (Markus Fischer) என்ற புகழ்பெற்ற மற்றொரு இசை நடத்துநர் நெறிப்படுத்த, 31 சிறந்த பாடகர்களைக் கொண்ட ஆபரா ஹாலெ பாடல் குழு (Choir of Opera Halle) பாட, ‘தி ஜர்னி’ இசைக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிம்பொனிகளும் ஜெர்மனி நாட்டின் ஹாலே (Halle) நகரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி இசையமைப்பாளர் கணேஷ் பி. குமார் நம்மிடம் பகிர்கையில் “சிம்பொனி இசையமைக்க வேண்டும் என்னும் என்னுடைய நீண்ட நாளைய கனவை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பை, ‘இசை மூலமாக உலக அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டும் நோக்கம்’ கொண்ட தஹர வித்யா அறக்கட்டளை (Dhahara Vidhya Foundation) எனக்கு வழங்கியது. ‘வாழ்க்கையின் சிறப்பு என்பது வாழ்நாளில் எங்கும் விழுந்து விடாமல் நடப்பதில் இல்லை; மாறாக, தடுக்கி விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து தொடர்ந்து நடைபோடுவதில்தான் உள்ளது’ என்ற உலகப் புகழ் தத்துவ மேதையான கன்ஃபூஸியஸின் (Confucius) வார்த்தைகளுக்கு ஏற்ப ‘ரைஸ்’ சிம்பொனிக்கு இசையமைத்தேன்.

அதேபோல், ‘தி ஜர்னி’ சிம்பொனிப் பாடலை, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, நவாநகர் மகாராஜ் ஜாம்சா ஹெப்திக் விஜய்சிங்ஜி (Maharaj Jam Saheb Digvijay Singhji) பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆற்றிய மகத்தான மனிதநேயச் செயல்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்” என்கிறார். இந்த சிம்பொனி ஆல்பத்தின் புரவலர் ஆனந்த் மாதவன். இவருடைய கொள்ளுப் பாட்டனார் வி.கிருஷ்ணசாமி ஐயர் தான் மகாகவி பாரதியாரின் பாடல்களை அச்சிட்டுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x