‘அந்த நாள்’
‘அந்த நாள்’

‘நடு இரவில்’ 50 ஆண்டுகள் நிறைவு: வெற்றியின் உச்சத்தில் விலகியவர்!

Published on

திரை பாரதி

திரையுலகில் சகல துறைகளிலும் தனித்த அடையாளத்துடன் சாதிக்க முடியும் என்று காட்டியவர்கள் வெகுசிலர்தான். அவர்களில் முன்னோடிச் சாதனையாளர் வீணை எஸ்.பாலசந்தர். சென்னை மயிலாப்பூரில் பிறந்து, வளர்ந்தவர். அவரது திரைப் பயணமோ ஏழு வயதில் தொடங்கிவிட்டது.

அத்தனை சிறிய வயதில் பாலசந்தரின் பிஞ்சு விரல்கள் வீணையின் தந்திகளில் ஆடிய நடனத்தைப் பார்த்து, வங்கத்துப் படைப்பாளி சாந்தாராம், தான் இயக்கிய ‘சீதா கல்யாணம்’ (1934) என்ற தமிழ் பேசும் படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாகத் திரையில் அவரை அறிமுகப்படுத்தினார். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினாலும், வீணையை முழுவதுமாகக் கையில் ஏந்திக்கொண்ட கலைவாணியின் புதல்வராக மாறிப்போனவர், பதின்ம வயதிலேயே அகில இந்திய அளவில் கச்சேரி செய்யும் அளவுக்குப் புகழ்பெற்றார்.

21 வயதில் அடிவைத்தபோது அவரது அழகு, அறிவு, இசைத் திறமை மூன்றுக்கும் திரையுலகிலிருந்து இரண்டாம் வாய்ப்பு வந்து சேர்ந்தது. கிருஷ்ணா கோபால் இயக்கத்தில் ஜாவர் சீதாராமன் திரைக்கதையில் 1948-ல் வெளிவந்த ‘இது நிஜமா?’ படத்துக்குக் கதை எழுதி, இசையமைத்து, நடித்ததுடன் அல்லாமல், அதில் பாடவும் செய்தார். துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். அவ்வளவுதான் சினிமா அவருக்குக் காதலி ஆகிப்போனாள்.

அதன்பிறகு நடிகர், கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பல்துறை வித்தகராகத் திரையில் களம் கண்ட பாலசந்தர், ஏவி.எம் நிறுவனத்துக்காக இயக்கிய ‘அந்த நாள்’ விமர்சகர்களால் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டது. அந்தப் படம் சரியாகப் போகவில்லையே என்றெல்லாம் விம்மிக்கொண்டு பாலசந்தர் உட்கார்ந்துவிடவில்லை. சினிமாவில் நடித்துக்கொண்டே, அரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகும் அளவுக்கு வீணைக் கச்சேரிகள் கொடுத்துக்கொண்டிருந்தார். ஏனோ திரை இயக்கம், அவரை அமைதியாக இருக்கவிடவில்லை. 1958-ல் அவர் இயக்கிய ‘அவன் அமரன்’ தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சொந்தப் பட நிறுவனம் தொடங்கித் தனது சோதனை முயற்சிகளைத் துணிந்து எடுத்தார்.

‘நடு இரவில்’ படத்தில் எஸ்.பாலசந்தர்
‘நடு இரவில்’ படத்தில் எஸ்.பாலசந்தர்

60-களில் பீம்சிங்கும் ஸ்ரீதரும், குடும்பக் கதைகளின் மூலம் தமிழ் ரசிகர்களை யார் அதிகமாக அழவைப்பது என்று போட்டிபோட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தச் சூழலை, ‘அவனா இவன்’, ‘பொம்மை’, ‘நடு இரவில்’ ஆகிய மூன்று துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் கதைப்போக்கையே மாற்ற முயன்றார். ஆனால், எஸ். பாலசந்தரின் இயக்கமும் ‘காட்சியாக்க’மும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்குக்குச் சற்றும் குறையாத ஆளுமையுடன் ஆனால், தமிழ் தன்மையுடன் இருந்தன.

சொந்தப் பணத்தில் செய்த சோதனை முயற்சிகளில், 1962-ல்‘அவனா இவன்’ வெளியாகிப் படுதோல்வி அடைந்தபோதும், சோர்ந்துவிடாமல் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மீண்டு வந்து கொடுத்த ‘பொம்மை’ 100 நாள் படமானது. அத்துடன், தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகைப் படங்களை ஆய்வு செய்ய நினைப்பவர்களுக்குப் பாடமாகவும் அந்தப் படம் ஆகிப்போனது. ‘பொம்மை’ யைத் தொடர்ந்து பாலசந்தர் கடைசியாக இயக்கிய படம் தான் ‘நடு இரவில்’ (1970). முதல் படம் வெற்றியாகவே இருந்தபோதும், யாரும் அதை வாங்க முன்வரவில்லை.

வேறு வழியின்றி சொந்தமாக வெளிட்டார். ரசிகர்கள் கொண்டாடிவிட்டனர். ‘நடு இரவில்’ படத்தின் இந்தி, ஹாலிவுட் மறு ஆக்க உரிமைகளையும் கேட்டு, பாலசந்தரை பட அதிபர்கள் மொய்த்தனர். துரதிஷ்டவசமாக, ‘நடு இரவில்’ படத்துக்குப் பின் வீணை எஸ்.பாலசந்தர் திரையிலிருந்து முற்றாக விலகிவிட்டார். வெற்றியின் உச்சத்தில் இருந்தபோது அவர் ஏன் விலகினார் என்பது இன்றுவரை விளங்காத மர்மம்!

படங்கள் உதவி: ஞானம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in