Last Updated : 28 Aug, 2015 12:24 PM

 

Published : 28 Aug 2015 12:24 PM
Last Updated : 28 Aug 2015 12:24 PM

தாய்மையின் ராணி!- எம்.வி. ராஜம்மா

நேற்றைய தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய நடிப்பு காவிரி எம்.வி.ராஜம்மா. கர்நாடகம் வழங்கிய கணக்கற்ற நாயகிகளில், வெற்றிகரமான பிள்ளையார் சுழி! தமிழகத்தில் மதுரை பாய்ஸ் கம்பெனி, டி.கே.எஸ், தேவி, சக்தி, வைரம் நாடக சபாக்களைப் போன்று, மைசூரில் ‘குப்பி வீரண்ணாவின்’ குழு. அங்கே பட்டை தீட்டப்பட்ட நடிப்பு ரத்னம் எம்.வி. ராஜம்மா.

ஹெச். எல். என். சின்ஹாவின் சம்சார நவுகா நாடகம் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் மாதக் கணக்கில் நடந்தது. சம்சார நவுகா படமானபோது மிகச் சுலபமாகத் திரையுலகில் நுழைந்தார்கள் பந்துலுவும் - எம்.வி. ராஜம்மாவும்.1936ல் சம்சார நவுகா கன்னடத்தில் வெளியானது. சென்னை தேவி சினி காம்ப்ளெக்ஸ் உரிமையாளர் ராஜகோபால் தயாரித்தது. எம்.வி. ராஜம்மாவுக்குக் கிடைத்த முதல் ஊதியம் 900 ரூபாய்!

சம்சார நவுகாவின் வெற்றியால் எம்.வி. ராஜம்மா மதராஸப்பட்டினத்துக்குக் குடி பெயர்ந்தார். 1938ல் கல்கத்தாவில் உருவான ’யயாதி’ மூலம் எம்.வி. ராஜம்மா தமிழில் அறிமுகமானார். நாயகன் பி.யூ. சின்னப்பா.

ஆரம்பம் முதலே அநேக ‘முதல்’களில் முத்திரை பதித்தவர் எம்.வி. ராஜம்மா.

1.தமிழின் முதல் இரட்டை வேட டாக்கி உத்தம புத்திரன் - 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படைப்பு. வாய்ப்பின்றித் தவித்த பி.யூ. சின்னப்பாவுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்தத் தென்னக சினிமாவுக்கும் வெற்றி மகுடம் சூட்டியது.

பி.யூ. சின்னப்பாவின் ஜோடியாக வந்த எம்.வி. ராஜம்மா தமிழ்த் திரையின் ராசியான ஹீரோயின் ஆனார்.

உத்தம புத்திரனில் சிருங்காரமாகத் தோன்றிய எம்.வி. ராஜம்மாவின் வண்ணப்படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியிட்டது. அஞ்சல் அட்டை வடிவில் ஜப்பானில் அச்சிடப்பட்ட படங்கள் அவை. இலட்சக்கணக்கான வாலிபர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தப் படங்களை வாங்கினார்களாம்!

2. 1941-ல் எஸ்.எஸ். வாசன் நிதி உதவி செய்ய, டி. கே. எஸ். சகோதரர்களின் சமூக விழிப்புணர்ச்சி நாடகம் ‘குமாஸ்தாவின் பெண்’ படமானது. எஸ்.எஸ். வாசனை நிரந்தரமாக சினிமா தொழிலுக்கு அழைத்து வந்தது ‘குமாஸ்தாவின் பெண்’ணுக்குக் கிடைத்த அமோக வசூல்! தமிழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முதல் சமூகச் சித்திரம் இது என வரலாறு கூறுகிறது.

டைட்டில் ரோலில் நடித்த எம்.வி. ராஜம்மாவின் உருக்கமான நடிப்புக்குப் பட்டி தொட்டிகள் எங்கும் பிரமாதமான வரவேற்பு. அதே 1941ல் ஜெமினி ஸ்தாபனத்தின் முதல் தயாரிப்பு மதன காமராஜன் - எம்.வி. ராஜம்மா நடித்தது. திரையிட்ட இடமெல்லாம் நூறு நாள்கள் ஓடி, சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது.

3. 1943ல் வெளி வந்த ‘ராதா ரமணா’ மூலம் கன்னடத் திரை வரலாற்றில், சொந்தப் படம் தயாரித்த முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றார் எம்.வி. ராஜம்மா.

4. கிறிஸ்தவ மதக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு

தமிழில் வந்த சினிமாக்கள் சொற்பம். அவற்றில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்ற ஒரே படம் ஞான சவுந்தரி.

இது 1948-ல் எம்.வி. ராஜம்மாவின் மிக உருக்கமான நடிப்பில் உருவானது. சிட்டாடல் தயாரிப்பு. அதே நேரத்தில் எஸ்.எஸ். வாசனும் போட்டி போட்டுக்கொண்டு தன்னுடைய ஞான சவுந்தரியை வெளியிட்டார். எம்.வி. ராஜம்மா நடித்த ஞான சவுந்தரியே ஓஹோவென்று ஓடியது. ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்து அசந்த ஜெமினி ஸ்டுடியோவின் முதலாளி வாசன், தான் தயாரித்த படத்தைத் தீயிட்டுக் கொளுத்தும்படி உத்தரவிட்டார். ராஜம்மாவின் ஒப்பற்ற நடிப்புக்கு வாசன் கொடுத்த விலை பயங்கரமானது. உலகில் வேறு எந்தப் படைப்பாளியாவது தன் சினிமாவைத் தானே கொளுத்தியதாக வரலாறு உண்டா?

5. 1949-ல் எம்.வி. ராஜம்மா நடித்த வேலைக்காரி மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பேரறிஞர் அண்ணாவின் திரையுலகப் பயணத்தில் முதல் மைல் கல் இது.

6. தமிழின் முதல் இதிகாச புராண வண்ணச் சித்திரம் கர்ணன். கர்ணனின் அன்னை குந்திதேவியாகிப் பெண்களைக் குமுறி அழ வைத்தார் எம்.வி.ராஜம்மா.

ராஜம்மாவின் இதர சாதனைகள்:

தமிழைத் தொடர்ந்து எம்.வி. ராஜம்மாவுக்குத் தெலுங்குப் பட வாய்ப்புகளும் குவிந்தன. 1947ல் அவர் சித்தூர் வி. நாகையாவுடன் நாட்டியத் தாரகையாகச் சேர்ந்து நடித்த படம் ‘யோகி வேமனா’. ஏறக்குறைய ஹரிதாஸில், டி.ஆர். ராஜகுமாரி ஏற்ற ரம்பா மாதிரியான வேடம். ராஜம்மாவுக்குப் புகழ்க் கிரீடம் சூட்டியது.

1950ல் டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்த பாரிஜாதம் வெற்றிகரமாக ஓடியது. அதே ஜோடி நடித்த லைலா மஜ்னு தோல்வி அடைந்தது.

1952 ல் கே.ராம்நாத் இயக்கிய ‘தாய் உள்ளம்’ மதுரையில் வெற்றி விழா கொண்டாடியது. ஹீரோ ஆர்.எஸ். மனோகர். அறிமுக வில்லன் ஜெமினி கணேசன். அதில் நாயகி எம்.வி. ராஜம்மாவின் அபார நடிப்பு, தாய்க்குலங்களைத் திகைக்கச் செய்தது.

எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த ‘கொஞ்சும் புறாவே’, ‘கதையைக் கேளடா’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத கோமள கீதங்கள்.1961- எம்.வி. ராஜம்மாவின் நடிப்பில் உச்சக்கட்டம் கலைஞரின் படைப்பான தாயில்லாப் பிள்ளை. தயாரிப்பு இயக்கம் - இந்தியத் திரைச் சிற்பி எல்.வி. பிரசாத்.

டி.எஸ். பாலையாவின் மனைவியாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பாசத்தீயில் வெந்து மடியும் பிராமணத் தாயாக மாறுபட்ட வேடத்தில் எம்.வி.ராஜம்மா வாழ்ந்து காட்டினார்.

ஏ. பீம்சிங் - சிவாஜி கூட்டணியின் அத்தனை ‘பா’ வரிசைப் படங்களுக்கும் சவால் விட்ட ‘தாயில்லாப் பிள்ளை’

நூறு நாள்கள் ஓடியது. அந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாகத் ‘தாயில்லாப் பிள்ளை’யை கவுரவித்தது குமுதம் வார இதழ். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், வி.என். ஜானகி, ஜெயலலிதா எனக் கலையுலகின் ஆறு முதல்வர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நட்சத்திரம் எம்.வி. ராஜம்மா மட்டுமே!

எம்.வி. ராஜம்மா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகிய தமிழ் சினிமாவின் நான்கு தூண்களுக்கும் தாயாக எண்ணற்ற படங்களில் நடித்தவர். (எம்.ஜி.ஆரோடு வேட்டைக்காரன், தேடி வந்த மாப்பிள்ளை, சிவாஜியோடு

தங்கமலை ரகசியம், பாவமன்னிப்பு, அன்னை இல்லம், குங்குமம், முரடன் முத்து, செல்வம், ஜெமினியுடன் கைராசி, ஆடிப்பெருக்கு, எஸ்.எஸ்.ஆருடன் ஆலயமணி, சாரதா).

எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் குற்றாலக் குரலில்

’வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்

அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்’என்ற பாடல் எம்.வி. ராஜம்மாவை உங்கள் கண்களில் நிழலாட வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x