Published : 17 Apr 2020 09:36 AM
Last Updated : 17 Apr 2020 09:36 AM

தகழி 108-ம் பிறந்த நாள்: திரையில் ஒளிர்ந்த எழுத்து

ஜெயகுமார்

நவீன மலையாள இலக்கியத்தின் முகமாக மலையாளத்துக்கு வெளியிலும் அறியப்பட்டவர் தகழி சிவசங்கரப் பிள்ளை. ‘செம்மீன்’ எழுதப்பட்ட மொழி ‘மலையாளம்’ என ஐரோப்பிய உலகில் மலையாளத்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தவர் தகழி என இங்கிலாந்தைச் சேர்ந்த மொழியிலாளரான ரொனால்ட் ஏ ஆஷர் குறிப்பிட்டதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இது மட்டுமல்ல, பி.சுப்பிரமணியன், ராமு காரியத், கே.எஸ்.சேதுமாதவன் போன்ற மலையாள இயக்குநர்களையும் சுனில் தத், எம்.எஸ்.சத்யூ போன்ற இந்திய சினிமா ஆளுமைகளையும் ஆலப்புழைக்கு அருகில் உள்ள தகழி என்னும் சிற்றூருக்கு வரவழைத்தவர் தகழி.

ஆழப்புழை, கோட்டயம், பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய குட்டநாடு என அழைக்கப்படும் பகுதிதான் தகழியின் கதைகளுக்கான களம். ஞானபீட விருது ஏற்புரையில் தனது பாதத்தில் இன்னும் இருக்கும் குட்டநாடு வயல்வெளியின் சகதிதான், இந்த எழுத்துக்குக் காரணம் எனத் தகழி குறிப்பிட்டுள்ளார். தகழியின் படைப்புலகம் வர்க்க பேதத்தை, சமூகக் கற்பிதங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தக்கூடியது. தகழியின் நாயக, நாயகிகள் வர்க்க நிலையில் பின்தங்கியவர்கள்தாம்.

தகழி

படமான முதல் நாவல்

சட்டம் படிக்க திருவனந்தபுரம் வந்த பிறகுதான், தகழியின் புனைவெழுத்து துலங்கத் தொடங்கியிருக்கிறது. மலையாள இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கேசரி பாலகிருஷ்ணனின் மூலம் பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசான், ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கவ் போன்றவர்களின் கதைகள் தகழிக்கு அறிமுகமாயின. இவர்களில் மாப்பசான் கதைகள் அவரை மிகவும் கவர்ந்துள்ளன. 'மலையாள மாப்பசான்' என்ற அடைமொழியும் தகழிக்கு உண்டு.

தகழியின் முதல் நாவலான ‘தியாகத்தின் பிரதிபலம்’ 1934-ல் வெளிவந்தது. அவரது இரண்டாம் நாவல் வெளிவர 13 ஆண்டுகள் ஆயின. 1947-ல் புகழ்பெற்ற ‘தோட்டியுட மகன்’ வெளிவந்தது. ஆலப்புழையில் மலம் அள்ளும் தொழில்செய்யும் மூன்று தலைமுறைக்காரர்களின் கதை இது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தின் கதையின் மூலம் குலத் தொழில் முறை உண்டாக்கும் சிக்கல்களைச் சொல்லியிருப்பார்.

அடுத்த ஆண்டில் ‘ரண்டிடங்கழி’ (இரண்டுபடி) என்னும் நாவல் வெளிவந்தது. இந்த நாவல், கேரளத்தின் பழம்பெரும் ஸ்டுடியோக்களில் ஒன்றான ‘மேரிலேண்ட் ஸ்டுடியோ’வின் நிறுவனரான பி.சுப்பிரமணியம் இயக்கத்தில் 1958-ல் அதே பெயரில் படமானது. சிருதா, கொரன் ஆகிய இருவரைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்தக் கதை, குட்டநாட்டின் வர்க்க பேதத்தைச் சுட்டிக் காட்டியது.

பொறுப்பான பெண்ணும் வயல் வேலைகளில் திறமையானவளும் ஆன அவளைத் திருமணம் செய்யப் பலருக்கும் விருப்பம். தன் மகளுக்குக் கிராக்கி இருப்பதால், நல்ல பெண் பணம் (சீதனம்) கொடுப்பவனுக்கே கட்டித் தருவேன் என அவளுடைய தந்தை வரும் சம்பந்தங்களைத் தட்டிக் கழிக்கிறார்.

அவள் மீது மையல் கொண்ட கொரன், அந்த ஊரின் நிலக்கிழாரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவளை மணக்கிறான். திருமணம் ஆன பிறகு இருவரும் அந்த நிலக்கிழாரிடம் அடிமைப் பணி செய்யவேண்டியதாகிறது. கொரன் ஒரு கட்டத்தில் விழித்து, தொழிலாளர்களைத் திரட்டிப் போராடுகிறான். அவன் மீது திருட்டுப் பழி சுமத்தப்படுகிறது. அவனது போராட்டம் என்ன ஆனது, அதனால் அவன் எளிய வாழ்க்கை எப்படிச் சிதைகிறது என்பதைச் சொல்லும் கதை. ஆனால், இது படமாக வெற்றியைப் பெறவில்லை. தகழி, ‘தனக்கே இந்தப் படம் பிடிக்கவில்லை’ எனச் சொல்லியிருக்கிறார்.

பெருமை சேர்த்த ‘செம்மீன்’

1956-ல் வெளிவந்த தகழியின் ‘செம்மீன்’ நாவல் இந்திய சினிமாவுக்கே பெரும் கொடையாக ஆனது. இந்தக் கதையைப் படமாக்க ராமு காரியத் பல ஆண்டுகளாக முயன்றுவந்தார். ‘ரண்டிடங்கழி’ தந்த அனுபவத்தால், பெரும் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டே இதை படமாக்குவதற்கான அனுமதியை தகழி தந்துள்ளார். 1965-ல் வெளிவந்த 'செம்மீன்', தகழியின் சங்கல்பத்தை ஒத்திருந்தது. சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருது பெற்ற முதல் தென்னிந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றது. கான் பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது.

மீனவப் பெண் முறை தவறி நடந்தால், அவளுடைய கணவனைக் கடல் தாய் கொண்டு போய்விடுவாள் என்று அந்தச் சமூகத்தில் நிலவிய கற்பிதத்தைப் பின்னணியாகக் கொண்டது இந்தக் கதை. கருத்தம்மா, பாரீக்குட்டி, பழனி ஆகிய மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

ஒருவனைக் காதலித்து வேறு ஒருவனுடன் வாழ விதிக்கப்பட்ட பெண்ணின் மனச் சலனத்தை தகழி தத்ரூபமாகச் சித்தரித்திருப்பார். சமூகக் கற்பிதம் அவளுடைய வாழ்க்கையைக் கடல் காற்றைப் போல் சூறையாடுவதை உயிர்ப்புடன் விவரிக்கிறது இந்தக் கதை. இந்தப் படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் பேசும்போது ‘ஒரு பெண்ணை வளர்த்து, நல்ல மருமகனிடத்தில் ஒப்படைத்த திருப்தி என இந்தப் படத்துக்குப் பிறகு ராமு காரியத் மேல் வந்தது’ எனத் தகழி குறிப்பிட்டார். இதில் பழனியாக நடித்த சத்யனின் நடிப்பு தகழியைக் கவர்ந்தது.

1973-ல் படமான அவரது ‘ஏணிப்படிகள்’ நாவலின் கேசவப் பிள்ளை கதாபாத்திரத்தில் அவர் சத்யனைத்தான் கற்பனை செய்திருக்கிறார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தை மது ஏற்று நடித்தார். அதில் சாதாரணப் பின்னணியைக் கொண்டவன், தலைமைச் செயலகத்தில் பணிக்குச் சேர்வான். அங்கு பணிபுரியும் உயர் அதிகாரியின் உறவினர் பெண்ணைக் காதலில் வீழ்த்தி பதவி உயர்வு பெற்று கண்காணிப்பாளர், துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் என ஆவான்.

இதற்கிடையில் திருமணம் முடிந்து ஊரில் மனைவியை விட்டுவிட்டு, தன் ராஜாங்கத்தை நடத்துவான். அதிகார வர்க்கத்தின் அரசியலைச் சொன்ன இந்தக் கதையில் நடித்த மதுவுக்குக் கண்காணிப்பாளர் வரைதான் ஆக முடியும். தலைமைச் செயலாளர் எல்லாம் ஆக முடியாது என தகழி விமர்சனம் செய்திருக்கிறார். இந்தக் கதையைத் தழுவி 2006-ல் பிருத்விராஜ் நடிப்பில் ‘வாஸ்தவம்’ என்ற படமும் வெளிவந்தது.

மாற்றுப் படைப்பாளிகளின் எழுத்தாளர்

1971-ல் படமான ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ நாவலிலும் சத்யனே பிரதான வேடம் ஏற்றிருந்தார். இதில் தொழிலாளித் தலைவனின் தட்டுத்தடுமாறிய வாழ்க்கையைச் சொல்லியிருப்பார். சங்கப் பணிகள் எனச் சொல்லி வீட்டைக் கவனிக்காமல் இருக்கும் அவன், மனைவியையும் சந்தேகிப்பவனாக இருக்கிறான். பிள்ளைகள் கஞ்சிக்காகத் தினமும் அழும். தகழியின் எழுத்தில் கம்யூனிசச் சார்பு இருந்தாலும், இம்மாதிரியான விமர்சனங்களையும் அவர் துணிந்துவைத்தார்.

தகழியின் நாவல்கள் மட்டு மல்லாமல், அவரது சிறுகதைகளும் படமாக வெளி வந்துள்ளன. ‘வெள்ளப்பொக்கத்தில்’ கதை, இயக்குநர் ஜெயராஜ் இயக்கத்தில் படமாக வெளிவந்துள்ளது. குட்டநாட்டில் மழை வெள்ளத்தில் கணவன், மனைவி, நான்கு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் சிக்கிக்கொள்கிறது. இவர்களுடன் ஒரு பூனையும், ஒரு நாயும் இருக்கின்றன. காப்பற்ற படகில் ஏறும் அவசரத்தில் நாயை விட்டுவிடுவார்கள். வெள்ளத்தின் நடுவில் கைவிடப்பட்ட அந்த நாய், தான் இதுவரை கொண்ட மனித சிநேகம் தன்னைக் காக்கும் என விடாப்பிடியாகத் தன்னைக் கடந்து செல்லும் படகுகளை நோக்கிக் குரல் எழுப்புகிறது. இந்தக் கதை பேரிடர் காலத்து மனித மனத்தை விரித்துக் காட்டுகிறது. குட்டநாட்டின் இரு நூற்றாண்டுக் கதையைச் சொல்லும் தகழியின் ‘கயறு’ நாவலின் ஒரு பகுதியை ‘பயானகம்’ என்னும் பெயரில் ஜெயராஜ் படமாக எடுத்துள்ளார்.

அவரது நான்கு சிறுகதைகள் ‘நாலு பெண்ணுகள்’ என்னும் தலைப்பில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் படமாகியுள்ளது. பாலியல் தொழிலாளி, மனைவி, கன்னி, கைவிடப்பட்ட சகோதரி என நால்வகைப்பட்ட பெண்களின் வாழ்க்கையைத் துண்டுச் சித்திரம்வழி சொல்லும் கதைகள் அவை. ‘ஒரு பெண்ணும் ரண்டாளும்’ என்னும் தலைப்பில் தகழியின் இன்னும் நான்கு சிறுகதைகளை அடூர் படமாக்கியுள்ளார்.

500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 49 நாவல்கள், 12 திரைப்படங்கள் ஆகியவை தகழியின் பங்களிப்புகள். நாவல்களுக்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். தன் ஆற்றலில் மலையாள மொழிக்கும் சினிமாவுக்கும் உலக அரங்கில் கவனத்தை ஏற்படுத்தித் தந்தவர் தகழி. “இந்தச் சின்ன மொழியை வைத்து நான் இவ்வளவு பெரிய வேலைகள் செஞ்சிருக்கேன் பார்” எனக் கதையாசிரியர் ஜான் பாலிடம் விளையாட்டாகச் சொல்லிச் சிரித்திருக்கிறார் தகழி. அது உண்மையான கூற்று என்பதைக் காலம் நமக்குச் சொல்கிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x