

எஸ்.எஸ்.லெனின்
உலகமெங்கும் ஊரடங்கின் பெயரால் மக்கள் வீடடைந்து கிடைக்கிறார்கள். தொலைக்காட்சி அலைவரிசைகளில் கரோனா பீதி செய்திகளுக்கு நிகராக, பார்த்துச் சலித்த திரைப்படங்களும், மறுபிறவியெடுக்கும் அழுகாச்சி தொடர்களும் பொழுதுபோக்கின் பெயரில் குவிந்திருக்கின்றன. இந்தப் பேரிடர்களுக்கு மத்தியில் ஆபத்பாந்தவனாய் ஆசுவாசம் தருபவை ‘ஆன்லைன் ஸ்ட்ரீமிங்’ தளங்கள் மட்டுமே.
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக எழுச்சி கண்டிருக்கும் இந்தத் தளங்கள், தற்போதைய ஊரடங்கை வாய்ப்பாகக் கொண்டு புதிய பார்வையாளர்களை ஈர்த்துவருகின்றன. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட் ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட தளங்களில் கொட்டிக்கிடக்கும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றில் மூழ்கி முத்துக்குளித்து தமக்கான ரசனைகளைக் கண்டடைவதே தனி அனுபவமாகும்.
கூடு தாவும் புதுப்படங்கள்
திடீர் ஊரடங்கால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த படங்கள் அனைத்தும் சுருண்டன. வரும் நாட்களில் ஊரடங்கு தளர்ந்தாலும் திரையரங்கு திறப்பு தள்ளிப்போகுமென்பதால், மேற்படிப் படங்களில் பெரும்பாலானவை வலைத்தளங்களுக்கு தாவியுள்ளன. அந்த வகையில் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஃபியா: சேப்டர் 1’, துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘நான் சிரித்தால்’ போன்றவை முறையே அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ‘ஜீ5’ தளங்களில் சுடச்சுட வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. மார்ச் மத்தியில் வெளியாகி ஊரடங்கால் முடங்கிய மற்றொரு திரைப்படம் ‘தாராள பிரபு’.
உயிரணு தானத்தை மையமாக்கொண்ட அந்தப் படம் அமேசானில் நேற்று (ஏப்ரல் 9) வெளியானது. இவற்றுடன் அண்மையில் தேசிய விருது பெற்ற தமிழ்ப் படமான ‘பாரம்’, கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான ‘மெரினா புரட்சி’ போன்ற சீரிய ஆக்கங்களும், சர்ச்சைக்கு உள்ளான ‘திரௌபதி’ படமும் அமேசானில் கிடைக்கின்றன. தமிழைப் போன்றே இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற இந்தியமொழித் திரைப்படங்களுக்கு இணையத் திரையில் ‘சப்-டைட்டில்’ இருப்பதால் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவற்றுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுபோன்ற ஆக்கங்களை அதிக அளவில் வைத்திருக்கும் அமேசான் தளத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய படங்கள் சில:
பலமொழி ரசனைகள்
இந்தி: பிரிவினைவாதப் பிரச்சினைகளால் காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்த மண்ணின் மக்கள் பின்னணியில் காதல் கதை யொன்றைப் பேசுகிறது ‘ஷிகாரா’. செயற்கைக் கருத்தருத்தலில் இரு தம்பதியரிடையே உயிரணு மாறிப்போவதால் நேரும் களேபரங்களை நகைச்சுவையாகச் சொல்லும் படம் ‘குட் நியூஸ்’ (Good newwz). அக் ஷய் குமார், கரீனா கபூர் நடிப்பில் வெளியான படம் இது. இவை, அமேசானின் புதிய இந்தித் திரைப்படப் பட்டியலில் அதிகம் பார்க்கப்பட்டு வருபவை.
தெலுங்கு: மகேஷ் பாபுவின் வழக்கமான ஆக் ஷனும் நகைச்சுவையும் கலந்த புதிய படம் ‘சரிலேரு நீக்கெவரு’. காணாமல் போன இளம்பெண்ணைத் தேடும் காவல் அதிகாரியின் பாதையில் அவரது கசப்பான கடந்த காலமும் இடறும் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘ஹிட்’. ‘96’ திரைப்படத்தின் ரசிகர்களுக்காக அதன் இயக்குநரின் தெலுங்கு ஆக்கமான ‘ஜானு’ காத்திருக்கிறது.
கன்னடம்: நாட்டை புரட்டிப் போட்ட பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்வைத்து காமெடி-திரில்லராகக் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது ‘மாயா பஜார் 2016’. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இடறும் இருவேறு காதல்களின் அழகையும் வலியையும் நெருக்கமாகத் தரிசிக்கத் தரும் ‘தியா’, காதலை இன்னொரு கோணத்தில் அணுகும் ‘லவ் மாக்டெய்ல்’, பதின்மத்துக் காதலைக் கொண்டாடும் ‘கண்டுமுட்டே’ (Gantumoote) போன்றவையும் கன்னடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
மலையாளம்: ஃபஹத் பாசில், நஸ்ரியா நடிப்பில் மதப் பிரச்சாரத்தைப் பகடி செய்யும் ‘ட்ரான்ஸ்’, பிஜுமேனன், பிருத்விராஜ் நடிப்பில் ஈகோவால் மோதும் இருவேறு அதிகார முனைகளை மையமாகக் கொண்ட ‘அய்யப்பனும் கோஷியும்’ ஆகியவை மலையாளத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றுடன் கடந்த வருட வெளியீடுகளான ‘லூசிஃபர்’, ‘ஹெலன்’, ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் 5.25’ படங்களும் அதிகம் பேசப்படுகின்றன.
விருது வரிசை: இசை வித்தகர் எல்டன் ஜானின் கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தை அவரது புகழ்பெற்ற பாடல்களுடன் சொல்லும், கோல்டன் குளோப் விருது வென்ற படமான ‘ராக்கெட்மேன்’, அண்மையில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய தென்கொரிய திரைப்படமான ‘பாரசைட்’, குவாண்டின் டாரண்டினோ இயக்கத்தில் பிராட் பிட், லியனார்டோ டி காப்ரியோ நடித்த மற்றொரு ஆஸ்கர் படமான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’, முந்தைய வருடத்தில் ஆஸ்கர் வென்ற ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’ உள்ளிட்ட விருது வரிசைகளும் அமேசானில் காத்திருக்கின்றன.
இதர தளங்கள்
திரையரங்களுக்கு அப்பால் இணையத்திரைக்காகவே பிரத்யேகமாகத் தயாராகும் பல நாடுகளின் திரைப்படங்களும் வலைத்தொடர்களும் நெட்ஃபிளிக்ஸின் தனிச்சிறப்பு. பெருவரவேற்புடன் கடந்த வாரம் நான்காம் சீஸனாக வெளியான ஸ்பானிய வலைத்தொடரான ‘மணி ஹெய்ஸ்ட்’ ஓர் உதாரணம். நெட்ஃபிளிக்ஸில் உள்ளூர் திரைப்படங்களுக்கும் பஞ்சமில்லை. பார்வையாளரின் முதல்சுற்று ரசனையை உரசி, நெட்ஃபிளிக்ஸே பரிந்துரைகளை வழங்கத் தொடங்கிவிடுகிறது.
விருது பெற்ற திரைப்படங்கள் இங்கே தனியாக அணிவகுத்துள்ளன. காதல், ஆக் ஷன், திரில்லர் என்று தேடல் சார்ந்தும் அவற்றைக் கண்டடையலாம்.
| குழந்தைகளின் குதூகலத்துக்கு.. குழந்தைகளுக்கான படைப்புகளில் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இடையே கடும்போட்டி உண்டு. ஆனபோதும் புதிதாகக் களம் கண்டிருக்கும் ‘டிஸ்னி பிளஸ்’ இந்தியாவில் ஹாட்ஸ்டாருடன் இணைந்து கலக்குகிறது. ஹாட்ஸ்டாரில் டிஸ்னியின் படைப்புகள் தனியாகத் தொகுக்கப்பட்டிருப்பதுடன் அவை தமிழிலும் கிடைக்கின்றன. இவற்றுடன் மார்வெல் படைப்புகளுடன் இதர சூப்பர் ஹீரோக்களின் வரிசைகளும் இங்கே குவிந்திருக்கின்றன. பொழுபோக்கின் ஊடே அமேசான், நெட்ஃபிளிக்ஸின் ஏராளமான ஆவணப் படங்கள் இளம் வயதினரின் அறிவு விருத்திக்கும் உதவியாகும். ஆனால், ஆன்லைன் தளங்களின் பிரத்யேகப் படைப்புகள் தணிக்கைக்கு அப்பாற்பட்டவை என்பதால், பெரியவர்களின் மேற்பார்வை அவசியம். |