இப்போது என்ன செய்கிறேன்? - வாசிப்பு ஒரு தவம்

இப்போது என்ன செய்கிறேன்? - வாசிப்பு ஒரு தவம்
Updated on
2 min read

கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டுக்குள் சிறைபட்டிருக்கும் இத்தருணத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், தெரியுமா? நாள்தோறும் பரபரப்பாக நகரும் மருத்துவமனைப் பணி இப்போது இல்லை. கைபேசியில் அழைக்கும் நோயாளி களுக்கு, ஆலோசனைகளைச் சொல்கிறேன். மற்றபடி என்னுடைய நாள் இப்போதும் சுறுசுறுப்பாகவே நகர்கிறது.

அதிகாலை 4 மணிக்குக் கண் விழித்தவுடன் ‘இந்து தமிழ் திசை’ உள்ளிட்ட நான்கு தமிழ் செய்தித்தாள்கள், ‘தி இந்து’ உள்ளிட்ட மூன்று ஆங்கிலச் செய்தித்தாள்களில் மூழ்கிவிடுவேன். முக்கியமான கட்டுரை, செய்திகளை வெட்டியெடுத்துச் சேகரித்துவைப்பேன். தொடர்ந்து வார இதழ்கள், மின்னிதழ்கள், புத்தகங்களை வாசிப்பேன்.

மூன்று பிரபல நாவல்கள் (சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ. தர்மனின் ‘சூல்’, ம.காமுத்துரையின் ‘குதிப்பி’, கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘ஞாயிறு கடை உண்டு’), அசோகமித்திரனின் ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்பு, மாலனின் ‘உயிரே உயிரே’ கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றை முதல்கட்டமாக வாசித்து முடித்திருக்கிறேன். இரண்டாம் கட்டமாக சுஜாதாவின் ‘ஜீனோம்’, ஜேம்ஸ் வாட்சனின் ‘DNA’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ ஆகியவற்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகமும் தனி ருசி.

தொட்டில் பழக்கம்

என்னைப் பொறுத்தவரை வாசிப்பு என்பது ஒரு தவம். இது பள்ளிப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண்டது. நான் பிறந்து வளர்ந்த புதுச்செந்நெல்குளம் கிராமத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் வில்லிபுத்தூருக்கு விடுமுறை நாட்களில் நடந்தே செல்வேன். அங்குள்ள ‘பென்னிங்டன் நூலக’த்தில் நாள் முழுவதையும் செலவிடுவேன். அன்று கண்ட வாசிப்பின் ருசியை, இந்த 61-ம் வயதிலும் ரசித்து உணர முடிகிறது.

ஊரடங்கில் வீட்டில் இருக்க வேண்டிய வேளையில் வாசிப்பு அனுபவம் எனக்கு நன்றாகவே பயன்படுகிறது. வீட்டில் 2000-க்கும் அதிகமான புத்தகங்களைக் கொண்ட நூலகம் உள்ளது. அவற்றில் 40 புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை. இந்த வேளையில் அவற்றைப் படித்துவிட வேண்டும் என்று உறுதியெடுத்துள்ளேன். வேகமாக வாசிப்பேன் என்பதால், ஊரடங்கு முடிவதற்குள் இந்தப் புத்தகங்களை வாசித்துமுடித்துவிடுவேன் என்று நம்புகிறேன்.

நடுநடுவில் மிகக் குறைந்த நேரத்துக்கு வாட்ஸ்-அப் பார்த்தாலும் வழக்கமாக இதழ்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டுரைகளை எழுதுவது, வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி-சின்ன சின்ன உடற்பயிற்சிகள், பழைய திரைப்படப் பாடல்களைக் கேட்பது, மனைவி - நண்பர்களுடன் பேச்சு என அயர்ச்சி இல்லாமல் நாள் ஓடிவிடுகிறது. தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்பதால் தேவையற்ற பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் வழியே இல்லை. இந்த ஊரடங்குக் காலம் ஆரோக்கியமான பொழுதாகவும் மனதுக்கு நிறைவு தருவதாகவும் கடந்து செல்கிறது.

வீண் பயம் தேவையில்லை

இந்தக் காலத்தில் என்னிடம் பலரும் கேட்கும் சந்தேகம், ‘இன்றைக்கும் 8 செய்தித்தாள்கள், பல வார இதழ்களை வாங்குகிறீர்களே, அவற்றின் மூலமாக கரோனா தொற்றிவிடாதா?’ என்பதுதான். செய்தித்தாள்களின் வழியாக கரோனா பரவும் என்று சொல்வதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி செய்தித்தாள்களின் மீது கரோனா கிருமி பட்டால், அதிகபட்சம் 5 நிமிடங்கள்தான் அது உயிர் வாழும்.

அதிலும் இப்போது எல்லா செய்தித்தாள்களும் பேக்கிங் செய்வதில் தொடங்கி விநியோகம்வரை கிருமிநாசினி பயன்படுத்தி, சுகாதார முறைகளைப் பின்பற்றுகிறார்கள். செய்தித்தாள் விநியோகிப்பவர்களும் முகக்கவசம், கையுறை அணிந்துவருகிறார்கள்; கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். நானும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறேன். அதனால் செய்தித்தாள்களின் வழியாக கரோனா பரவிவிடுமோ என்ற வீண் பயம் எனக்கில்லை. யாருக்கும் தேவையும் இல்லை! n டாக்டர் கு. கணேசன் n

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in