Published : 03 Apr 2020 09:42 am

Updated : 03 Apr 2020 09:43 am

 

Published : 03 Apr 2020 09:42 AM
Last Updated : 03 Apr 2020 09:43 AM

திரை வெளிச்சம்: அய்யோ பாவம்..! அறுவடைக் காலம்..!

screen-illumination

கா.இசக்கிமுத்து - ஜெயந்தன்

மிக அசாதாரணச் சூழ்நிலைகளில் மட்டுமே தமிழ்த் திரையுலகம் ‘லாக் டவுன்’களை எதிர்கொண்டி ருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மொழிகளின் படத் தயாரிப்புக் கேந்திரங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. அதன்பிறகும் கோடம்பாக்கத்தில் இயங்கிய சினிமா சங்கங்கள் ‘தென்னிந்திய’ அளவில் செயல்பட்டதால் வெடித்ததுதான் ‘பெப்சி - படைப்பாளி’ பிரச்சினை. அப்போது வெடித்த போராட்டத்தால் தமிழ் சினிமா மிகப் பெரிய ‘ஷட் டவு’னைச் சந்தித்தது.


அதன்பிறகு பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஊதியப் பேச்சுவார்த்தை பிசுபிசுத்தால், சில நாட்கள் தொடங்கி ஒருவாரம் வரை தற்காலிக வேலை நிறுத்தம் நடைபெற்றதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்க ஏகபோகத்தை எதிர்த்து விஷால் நடத்திக்காட்டிய வேலைநிறுத்தமும் பெரிய ‘ஷட் டவுன்’களில் ஒன்று. ஆனால், இந்த எல்லா முன்மாதிரிகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கரோனா ‘லாக் டவுன்’.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டு, பின்னணி தயாரிப்பு வேலைகளும் நடைபெறாத நிலை. கரோனா பேரிடர் முழுமையாகக் கடந்து சென்றுவிட்டது என்று தெரிந்தால் மட்டுமே, மக்கள் மெல்லத் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள். 50 சதவீதம் அளவுக்குப் பார்வையாளர்கள் வந்தால் மட்டுமே புதிய பட வெளியீடுகளைச் செய்யத் தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். இதனால், எத்தனை மாதங்களுக்குப் பிறகு மக்கள் திரையரங்குகளுக்குத் திரும்புவார்கள் என்பதையும் திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலை. இந்த அசாதாரணச் சூழ்நிலை மூலம் தமிழ்த் திரையுலகம் சந்திக்கவுள்ள இழப்புகளும் சவால்களும் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று திரையுலகப் பிரபலங்கள் சிலரிடம் விசாரித்தோம்.

மீண்டும் படப்பிடிப்பு

கரோனா ஆபத்து முடிந்து மீண்டும் படப்பிடிப்புகளைத் தொடங்கும்போது முதலில் ஏற்படும் பிரச்சினை பெரிய நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பிரச்சினையாகவே இருக்கும். காரணம், அன்றைய தேதியில் அவர்கள் வேறொரு படத்துக்குத் தங்கள் தேதிகளைக் கொடுத்திருப்பார்கள். இதனால் கால்ஷீட் ‘அட்ஜஸ்ட்’ செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிப் பல படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிச் செல்லும். இதில் ‘அதிகச் சிக்கலைச் சந்திக்கப்போவது, குணச்சித்திர நடிகர்கள்தாம்’ என்கிறார்கள் கால்ஷீட் மேலாளர்கள். ஏனென்றால், அவர்கள்தாம் ஒரு வாரம், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் எனப் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பார்கள். தொடர் படப்பிடிப்பின்போது எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்படலாம்.

அதேபோல், ஏற்கெனவே அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்திவந்தவர்கள், பாதியில் விட்டுவிட்டு வந்திருப்பதால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் அந்த அரங்குகளுக்கு வாடகை செலுத்திவருவார்கள். மீண்டும் விட்ட இடத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும்போது, அந்த ஸ்டுடியோ தளங்களை வேறொரு படக்குழு முன்பதிவு செய்திருக்கும் நாட்களாக அவை இருக்கலாம். இதுபோன்ற சிக்கலான நிலை வந்தால் விட்டுக்கொடுத்துச் செல்வதைத் தவிர, வேறு வழி இருக்காது.

புதிய வெளியீடுகள்

மீண்டும் பட வெளியீடுகள் தொடங்கும்போது, தற்போது வரிசையில் காத்திருக்கும் விஜயின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய பெரிய கதாநாயகர்களின் படங்களை வெளியிடவே திரையரங்கத் துறையினர் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கரோனாவை முன்னிட்டுத் திரையரங்குகள் திடீரென மூடப்பட்ட வேளையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘தாராள பிரபு’, ‘வால்டர்’ உள்ளிட்ட படங்களை எடுத்துவிடக் கூடாது என்று, இப்போதே கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் பெரிய நடிகர்களின் படங்கள் மே மாதம் வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.

பெரிய நடிகர்களின் படங்கள், நடுத்தரப் படங்கள், ஹாலிவுட் உள்ளிட்ட மொழிமாற்றுப் படங்கள், வெற்றிபெறும் சிறு முதலீட்டுப் படங்கள் ஆகியவற்றைத் திரையிடுவதன் மூலம், கேளிக்கை, ஜி.எஸ்.டி. கட்டியதுபோக சுமார் 950 திரையரங்குகள் ஈட்டும் டிக்கெட் வருமானம் மாதம் ஒன்றுக்குத் தோராயமாக 100 கோடி ரூபாய் என்கிறார்கள். இதில் ‘இணைய சேவைக் கட்டணம்’ என்ற பெயரில் ஆன்லைன் டிக்கெட் நிறுவனங்கள் அடித்துவரும் கொள்ளை தனியாக ரூ. 25 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். திரையரங்குகள் வரி கட்டத் தேவையில்லாத தின்பண்ட வியாபாரத்தின் மூலம் 25 முதல் 45 கோடி ரூபாய் வருமானம் பெறுகின்றனர் எனக் கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் சேர்த்தால் மாதத்துக்குச் சுமார் 150 கோடி முதல் 175 கோடிவரை பாக்ஸ் ஆபீஸ் வருமானம். அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இது கிடைக்காது என்கிறார்கள். இதை உறுதிசெய்கிறார் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம். “எவ்வளவு நஷ்டம் என்பதை இப்போது கணக்கிட முடியாது. கரோனா நிலவரம் சரியான பின்பு, மக்கள் மீண்டும் புத்துணர்வுடன் திரையரங்குக்கு வருவதற்கு ஆறு மாதங்களாகும். அந்த வகையில் 500 கோடி ரூபாய் இழப்பு என்பது சர்வசாதாரணமாக இருக்கும்” என்கிறார்.

விளைச்சல் உண்டு; அறுவடை இல்லை

கோடை விடுமுறை என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பொன் விளையும் அறுவடைக் காலம். மார்ச், ஏப்ரல், மே, ஜூன் முதலிரண்டு வாரங்கள் உள்ளிட்ட காலப்பகுதி என்பது ஆண்டின் மொத்த வசூலில் சுமார் 40 சதவீதம். விஜய், சூர்யா, ஜெயம் ரவி படங்கள் எனப் போதுமான பொழுதுபோக்கு சினிமாக்களின் விளைச்சல் தயாராக இருந்தும், அறுவடைக் காலத்தில் அவற்றை வெளியிட்டு வசூல் பெறமுடியாவிட்டால் தமிழ் சினிமாவில் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துவிடும் என்கிறார்கள் தமிழ்த் திரையுலக வர்த்தகக் கணிப்பாளர்கள்.

கரோனா பேரிடர் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசியதில் ‘வட்டி’ கட்ட வேண்டியது குறித்தே அதிகமும் புலம்பினார்கள். ஒருவர், “5 கோடியில் உருவாகும் ஒரு புதிய படத்தில் முதலீடு செய்துள்ள எனக்கு, எந்த வேலையுமே நடக்காமல் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய சூழல் இருக்கிறது. வட்டி மட்டுமே ரூ. 50 லட்சத்தைத் தாண்டுகிறது. எனக்கே இந்த நிலை என்றால், பெரிய முதலீட்டுப் படங்களில் முதலீடு செய்பவர்களின் நிலை என்னவென்று யோசித்துக்கொள்ளுங்கள். வட்டி கட்ட வேண்டும் என்பதைத் தாண்டி எனக்கு மே மாதம் பட வெளியீட்டின் மூலம் வரவேண்டிய வருமானம் தள்ளித்தான் கிடைக்கும்.

அந்த வருமானத்தை வைத்துத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். இப்போது எல்லாம் காலி” என்று தெரிவித்தார். இது பற்றித் தயாரிப்பாளர் தனஞ்ஜெயனிடம் பேசியபோது, “இதுபோல் தமிழ் சினிமாவில் நடந்ததே கிடையாது. வட்டித் தொகை, பட வெளியீடு எல்லாம் இனிமேல் என்னவாகும் என்பதைக் கணிக்கவே முடியவில்லை. ஆனால், உயிருடன் ஒப்பிடுகையில் இதெல்லாம் முக்கியமில்லை. அதனால், உயிர்தான் முக்கியம் என அனைத்தையும் திரையுலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என்கிறார்.

இணையத் திரைக்குக் கொண்டாட்டம்

திரையரங்க வசூலுக்கு வேட்டு வைக்கும் சாளரமாக ,‘ஆன்லைன் ஸ்ட்ரீமிங்’ என அழைக்கப்படும் இணையத் திரை பார்க்கப் பட்டது. ஆனால், அது தற்போது பிரபலமான பிறகும், திரையரங்க வசூல் குறையவே இல்லை. தற்போது, இணையத் திரை குறித்து ஆர்வம் காட்டாமல் இருந்த திரையரங்கக் காதலர்கள் அதில் மூழ்கியிருப்பதால், அது போன்ற தளங்களுக்குத் தற்போது திருவிழாக் கொண்டாட்டமாகிவிட்டது.

இதனால் ‘டேட்டா’ பயன்பாடு எக்குத்தப்பாக அதிகரித்துவருவதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ‘ஸ்மார்ட் பைட்’களை விற்று உபரி விற்பனை வருவாயை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளோ இணையத் திரையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை ஒளிபரப்பிவருகின்றன.


திரை வெளிச்சம்அறுவடைக் காலம்தமிழ் சினிமாபெப்சிபடப்பிடிப்புபுதிய வெளியீடுகள்விளைச்சல் உண்டுஅறுவடை இல்லைதிரையரங்க வசூல்ஆன்லைன் ஸ்ட்ரீமிங்டேட்டாகரோனா ஆபத்துகொரோனா வைரஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x