Published : 27 Mar 2020 09:10 am

Updated : 27 Mar 2020 09:10 am

 

Published : 27 Mar 2020 09:10 AM
Last Updated : 27 Mar 2020 09:10 AM

டிஜிட்டல் மேடை: ஒளியாய் வந்தாய்...

digital-platform

சு.சுபாஷ்

மிரட்டும் கொள்ளை நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள சுய சிறைகளில் அடைந்து கிடக்கிறார்கள் உலக மக்கள். தங்கள் மன அழுத்தத்துக்கு ஏதேனும் ஓர் ஆறுதல் தேடித் தவிக்கிறார்கள். சிறு நினைவோ, இசைத் துணுக்கோ, துளி வாசிப்போ, ஒரு திரைப்படமோ அந்த அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிக்கக் கூடும். பிப்ரவரி இறுதியில் வெளியான நெட்ஃபிளிக்ஸின் ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’ திரைப்படம் அந்த வரிசையில் வருகிறது.


நெருக்கடி காலத்தில் மனிதர்களைச் சூழும் விரக்தி, கழிவிரக்கத்துடன் கூடிய மன அழுத்தம், தற்கொலை மனப்பான்மை உள்ளிட்ட உளவியல் தடுமாற்றங்களை, பதின்மத்துக் காதலுடன் கலந்து பரிமாறி இருக்கிறார்கள்.

அதிகாலை நேரம். உடற்பயிற்சி ஓட்டத்துக்காக உயரமான பாலம் ஒன்றைக் கடக்கும் தியடோர் என்ற இளைஞன், அங்கே சக மாணவி வயலெட்டைச் சந்திக்கிறான். அவனைக் கவனிக்காத அந்தப் பெண், துயரத்தின் ரேகைகள் படித்த முகத்துடன் அந்தப் பாலத்தின் கைப்பிடி விளிம்பிலும், வாழ்வின் விளிம்பிலும் ஒரு சேர நிற்கிறாள். அந்தக் கைப்பிடியுடன் அவனும் சேர்ந்துகொள்கிறான். மெல்லப் பேச்சுக் கொடுத்து அவள் மனத்தை மாற்றுகிறான். அதிகம் பரிச்சயமில்லாத இருவருக்கும் இடையே அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் நட்பு மலர்கிறது.

பாலத்தில் நடந்த வாகன விபத்தில் சகோதரியை இழந்து கடும் மன அழுத்தத்தில் உழலும் வயலெட்டின் துயரமான நாட்களில், புதிய நட்பு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. என்றாலும், தன் மேல் அவனுக்கு ஏன் இந்த அக்கறை என்று அவள் யோசிக்கவும் தலைப்படுகிறாள். இதற்கிடையே பாடத்தின் திட்டப்பணிக்காக இருவரும், உள்ளூரின் அதிகம் அறியப்படாத இடங்களுக்குப் பயணிக்கிறார்கள். இயற்கை வெளிகள், குளம், சிறு பொழுதுபோக்குத் தலம் என மிகச் சாதாரணமான இடங்கள் அவர்களிடையே பூத்த நட்பால் பொலிவுபெற்றதாக உணர்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நட்புக் கோட்டைத் தாண்டி காதலில் விழவும் செய்கிறார்கள். தனது மன அழுத்தத்திலிருந்து மீண்டெழுந்த வயலட், தற்போது தியடோரை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்குகிறாள். அவனது துயரம் மிகுந்த கடந்த காலத்தையும், அது தொடர்பாக ஆட்டுவிக்கும் ‘பைபோலார்’ பிரச்சினையின் கிலேசத்தையும் அறிகிறாள். அவனுடைய மனத்தின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறாள். அப்போது எதிர்பாராத சோகம் நிகழ, பெரும் நெகிழ்வுடனும், மனநலனைக் காக்க வேண்டியதற்கான கோரிக்கையுடனும் திரைப்படம் நிறைவடைகிறது.

அமெரிக்க நாவலாசிரியையான ஜெனிஃபர் நிவென் சில ஆண்டுகளுக்கு முன் இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி, ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. எலா ஃபேனிங், ஜஸ்டிஸ் ஸ்மித் உள்ளிட்டோர் நடிக்க, பிரெட் ஹேலி இயக்கியுள்ளார்.

எக்காலத்திலும் சலிக்காத மற்றுமொரு பதின்மக் காதல் கதைதான் ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’. என்ற போதும், அதன் ஆழத்தில் பேசப்படும் உளவியல் கருத்துகள் திரைப்படத்தைத் தனித்துக் காட்டுகின்றன. அதிலும் திடீர் இழப்பின் வலி, மனத்தைப் பிசையும் கடந்த காலத்தின் சோகம் என்று இருவேறு பதின்ம வயதினரின் துயரங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த உளவியல் தவிப்புகளில் அவர்கள் சிக்குண்டு புதையும்போது, அவர்களுக்காக நீளும் உதவிக்கரம் அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதைத் திரைப்படம் உணர்த்துகிறது.

இழப்பின் வலியைப் பேசும் கதையில், இன்னொரு இழப்பின் மூலமே அதை உணர்த்த முயல்வது பெரும் முரண். படம் நெடுக அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கற்பனை நகரத்தில் விரியும் இயற்கைக் காட்சிகள் கொள்ளை அழகு. பதின்ம இளம்சிட்டுகளாக வருவோர் மத்தியிலான ரசவாதம், ஆர்ப்பாட்டமற்ற ரசனை.

மனத்தளவிலான சஞ்சலங்களில் தடுமாறுபவருக்கான அரவணைப்பு, ஆறுதல் குறித்தெல்லாம் பாடம் எடுக்காமல், படத்தின் போக்கில் உணரச் செய்கிறார்கள். மனத்துயர் மிகுந்தவரை மீளவைப்பதில், மனித, மருத்துவ முயற்சிகளுடன் இயற்கையின் பிரம்மாண்டமும் முக்கியப் பங்காற்றுகிறது.

துயரங்களின் இருள் சூழும் போதெல்லாம் நேசத்துக்குரியவர் அருகிலிருப்பதும், இதுவும் கடந்துபோகும் என்ற நப்பாசையும் நிகழ்த்தும் மாயங்கள், வாழ்க்கைக்கு என்றென்றும் ஒளி பாய்ச்சுகின்றன. பதின்மக் காதல் கதையென்றபோதும், அனைவருக்குமானது ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’.


டிஜிட்டல் மேடைDigital Platformஒளிஉலக மக்கள்நெருக்கடி காலம்மருத்துவ முயற்சிகள்சுய சிறைகள்நெட்ஃபிளிக்ஸ்ஆல் தி பிரைட் பிளேசஸ்Netflix

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

government-3-agriculture-bills

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author