Published : 27 Mar 2020 09:06 AM
Last Updated : 27 Mar 2020 09:06 AM

ஹாலிவுட் ஜன்னல்: ஊர்க் குதிரை

சுமன்

ஊர் கூடி பந்தயக் குதிரை ஒன்றை வளர்த்ததன் பின்னணியில் ஓர் உண்மைச் சம்பவம். அதை மையமாகக்கொண்டு, ‘ட்ரீம் ஹார்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பிரிட்டனின் சிறு நகரம். அங்கிருக்கும் மதுபான விடுதியில் பரிசாரகராகப் பணியாற்றும் பெண்ணின் அன்றாடப் பொழுதுகள் சுவாரசியம் ஏதுமின்றி நகர்கின்றன. ஒரு நாள் குதிரைப் பந்தயங்களில் பங்கேற்கும் அரிய ரகமான குதிரைக் குட்டி குறித்து அவர் அறிந்துகொள்கிறார். அந்தக் குட்டிக் குதிரையை வாங்கி வளர்ப்பதென முடிவெடுக்கிறார். பெரும் திட்டமிடலுக்குப் பின்னர் குட்டிக் குதிரையை வாங்குகிறார்.

ஆனால், குதிரையை வளர்ப்பது, பராமரிப்பது, பந்தயத்துக்குப் பழக்குவது ஆகியவை அவர் நினைத்ததுபோல் சாதாரணமாக இல்லை. பெரும் சவாலைச் சமாளிக்க, அருகில் வசிப்போர், உடன் பணியாற்றுவோர், ஊர் மக்கள் என பலருடைய உதவியை நாடுகிறார். பலரும் கூட்டாகப் பங்களிக்க, புதிய பந்தயக் குதிரை செழிப்பாக வளர்கிறது.

ஊரின் செல்லப் பிள்ளையாக மாறும் அந்தக் குதிரை, பந்தயத்துக்கும் தயாராகிறது. போட்டிகளில் பங்கேற்றுப் பணக் கட்டுக்களை பரிசாகவும் பெறுகிறது. இடையில் எதிர்பாராத திசையிலிருந்து புதிய பிரச்சினை முளைகிறது. அது பெரும் துயரத்தையும் கொண்டுவருகிறது. அதிலிருந்து குதிரை மீண்டு, அந்தப் பெண்மணியை உருக்கும் கண்மணியாக மாறியதா இல்லையா என்பதை ‘ட்ரீம் ஹார்ஸ்’ படத்தின் இரண்டாம் பாதி சொல்கிறது.

வேல்ஸ் நகரத்தில் ‘ட்ரீம் அலையன்ஸ்’ என்ற பெயரில் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து பந்தயக் குதிரையை வளர்த்தனர். ‘வெல்ஸ் கிராண்ட் நேஷனல்’ போட்டிகளில் தங்கள் குதிரையை இறக்கி ஜெயிக்கவும் வைத்தனர். இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ‘ட்ரீம் ஹார்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

பந்தயக் குதிரை வளர்க்கும் பெண்ணாக டோனி கொலேட் நடித்துள்ளார். டேமியன் லூயி, ஓவன் டீல் உள்ளிட்டோர் உடன் நடிக்க, ‘ட்ரீம் ஹார்ஸ்’ திரைப்படத்தை யூரோஸ் லின் இயக்கி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x