Published : 20 Mar 2020 10:13 am

Updated : 20 Mar 2020 10:13 am

 

Published : 20 Mar 2020 10:13 AM
Last Updated : 20 Mar 2020 10:13 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: கோலிவுட்டில் கரோனா

kodambakkam-junction

நேற்றுடன் அனைத்துப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. அதேபோல் திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன. இசைவெளியீடு உள்ளிட்ட அனைத்துத் திரையுலக நிகழ்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டன.

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸிடமிருந்து ஒவ்வொருவரும் தங்களைத் தற்காத்துக்கொள்ளும்படி நட்சத்திரங்களும் திரையுலகப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பதிவிட்டும் காணொலி வெளியிட்டும் வேண்டுகோள் வைத்துவருகின்றனர்.


கரோனாவால் பாதிக்கப்படும் தமிழகத்தில் ‘சிஏஏ’வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்கள் கரோனா பாதுகாப்பு கருதி தற்காலிகமாகப் போரட்டத்தைக் கைவிடும்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு தயாரித்துள்ள ‘கரோனா வைரஸ்’ விழிப்புணர்வுக் காணொலியில் யோகிபாபு நடித்துக்கொடுத்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலின் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் நடித்துவரும் ஆந்திரத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்களான ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண் தேஜா இருவரும் சேர்ந்து விழிப்புணர்வுக் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

கோலிவுட்டில் விஷால் தொடங்கி பல நட்சத்திரங்கள் தங்கள் ‘கரோனா’ பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் “கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டு வந்துள்ளனர் என்பது மனித குலத்துக்கான தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. நாமும் விழிப்புடன் இருப்போம். வரும் முன் காக்க முடியும் என்பதால், அதையே தற்போதைய மருத்துவமாகக் கையாளுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கரோனா அச்சம், களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் குறித்து நடிகர் கார்த்தி தனது பதிவில்: “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களது குடும்பத்தினர் என நம்மை கோவிட்-19 பாதிப்பிலிருந்து பாதுகாக்க எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு என் மரியாதைக்குரிய வணக்கம். இப்போதும் கடற்கரையில் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. வீட்டிலேயே இருந்து, முறையான சுகாதாரத்தைப் பின்பற்றி இவர்களின் முயற்சியை ஆதரிப்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் சித்தார்த், “கரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கையை சோப்புப் போட்டுக் கழுவுங்கள். யாருடனும் நெருங்கிப் பழகாதீர்கள். கொஞ்ச நாளைக்குக் கை கொடுப்பது, கட்டிப் பிடிப்பதைக் குறைக்கலாம்.

கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். இந்தியாவில் கரோனா வைரஸ் முற்றிலும் ஒழிய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். கூடிய விரைவில் அனைவரும் பழைய நிலைக்குத் திரும்புவோம்” என்று நம்பிக்கையூட்டும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.

கோடம்பாக்கம் சந்திப்புKodambakkam Junctionதிரையரங்குகள்சிஏஏதிரையுலகப் பிரபலங்கள்சமூக வலைத்தளங்கள்கரோனா வைரஸ்தமிழக அரசுG v prakash

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x