

ஸ்டாலின் சரவணன்
நண்பரின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக வாழ்ந்த இருபது வயது நாயொன்று சமீபத்தில் இறந்துபோனது. அந்தத் துக்கம் அகலாத மனதுடன் இருந்த அவரை, ‘வாருங்கள் உங்களுக்காகவே திரையிடுவதுபோல ‘பறையா டாக்’ (Pariah dog) என்ற ஆவணப்படத்தை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் நடத்திவரும் குறும்பட, ஆவணப்பட விழாவில் திரையிடுகிறார்கள்’ என்று அழைத்தேன்.
மறுப்பேதும் கூறாமல் என்னுடன் புறப்பட்டார். வழியில் தென்பட்ட நாய்களின் முகங்களில் எல்லாம், தனது நாயின் சாயல் தென்படுகிறதா என்று அவர் கவனித்ததையும் புன்னகை சிந்தும் முகங்கொண்ட சில நாய்களுக்கு அவர் பதிலுக்கு புன்னகைத்ததையும் நான் மர்மமாக ரசித்தேன். ஆண்டுக்கணக்காக வாழ்ந்து மறைந்த மனித வாழ்வுக்கு நிகரான பெருவாழ்வு அந்த நாய்க்கானது என்பது அவர் குடும்பத்தினரின் நம்பிக்கை.
ஆவணப்படத்தின் முதல் காட்சி இரவு நேர வீதி நடவடிக்கைகளில் தொடங்குகிறது. இயக்குநர் ஜெஸ்ஸி அல்க், கொல்கத்தா நகர வாழ்க்கையை பார்வையாளருக்குப் பன்முகக் கோணங்களில் முன்வைக்கிறார். தெரு முனையில் போர்வை போர்த்தி உறங்காமல் அமர்ந்திருக்கும் ஒரு மனிதரின் கண்களை கூர்ந்து நோக்குகிறது கேமரா. தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஒரு நாய் மெல்ல வந்து ஊளையிடத் தொடங்குகிறது. அடுத்தடுத்து நாய்கள் தனித்தும் கூட்டமாகவும் தெருக்களில் நிற்கும், ஓடும் காட்சிகள் வருகின்றன. இதன்மூலம் தெருநாய்களை மையமாகக் கொண்ட படம் என்பது உணர்த்தப்படுகிறது.
ஒரு ஆட்டோ ஓட்டுநர்
நகரத்தில் வசிக்கும் மூன்று வெவ்வேறு மனிதர்கள், நாய்கள்மீது காட்டும் அன்பையும் அக்கறையையும் துளியும் குறையாமல் படம் பேசுகிறது. நாய்களைத் தங்கள் வாழ்க்கையில் கலந்த ஒன்றாகக் கருதுகின்றனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையாத இடத்தில் இருந்துகொண்டு, தாங்கள் செய்யும் வேலையை உணர்ந்தவர்கள் அவர்கள்.
ஆட்டோ ஓட்டிப் பிழைப்பவர், விவாகரத்தாகி சுதந்திர வாழ்வில் இருக்கும் ஒரு பெண்மணி, கைவினை வேலைகள் செய்யும் இளைஞர் ஆகிய மூவரும் வளர்ப்பு நாய்கள், தெருநாய்கள் மீது காட்டும் பரிவுமிகு வாழ்க்கையை ஆவணப்படம் கலைநேர்த்தியோடு பதிவுசெய்துள்ளது.
ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்து, நகரத்தின் சிறு அறையில் தனித்து வாழும் அவரது வாழ்வே நவீனச் சித்திரம் போல் இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்திய போட்டி ஒன்றில் வெற்றிபெற்றவர்களில் ஒருவராக, கிரிக்கெட் வீரர் கங்குலியின் கைகளால் ஐம்பதாயிரம் ரூபாயைப் தாம் பரிசாகப் பெற்ற வீடியோவைத் தான் சந்திக்கும் எல்லோரிடமும் காட்டி மகிழும் ஒரு குழந்தை மனநிலை அவருக்கு.
கடையில் கீபோர்டு ஒன்றை வாங்கிக்கொண்டு, அழுக்குப்படிந்த பணம், சில்லறை நாணயங்களுடன் அதற்கான தொகையைச் செலுத்தும் காட்சியே அவரின் பொருளாதார நிலையைப் புரிய வைக்கிறது. ஒரு பையில் இறைச்சித் துண்டுகளோடு நகரத்தின் பல வீதிகளுக்குச் சரியான நேரத்துக்குச் செல்லும் அவருக்காக நாய்கள் காத்திருக்கின்றன. ஒரு காட்சியில் தன்னைக் கடந்துசெல்லும் விலங்குகள் நலப் பேரணியில் அவரும் கலந்துகொண்டு முழக்கமிடுகிறார்.
அப்படியே கொஞ்சதூரம் சென்றுவிட்டு, கடிகாரத்தைப் பார்க்கிறார். நாய்களுக்கு உணவிடும் நேரம் நெருங்கிவிட பேரணியில் இருந்து உடனே விலகி அவருக்கான பணிக்குத் திரும்புகிறார். ஒருபக்கம் போராட்டக் குரலின் வழி மனிதர்கள் அரசை அசைக்க முயல்கையில் இவரோ நாய்களின் கழுத்தைக் கோதி அவற்றின் பக்கம் நிற்பவர் என்ற தோற்றத்தை கண்முன் சாட்சியாக விரிகிறது இந்த ஆவணப்படம்.
பெண்கள் இருவர்
அந்தப் பெண்மணி, தனது பணிப்பெண்ணோடு சேர்ந்து தனது இடத்தில் நிறைய நாய்களைப் பராமரிக்கிறார். அவருக்கும் பணிப்பெண்ணுக்கும் இடையே முரண்பாடு எழும்போதும் அதைப் பொருட்படுத்தாமல் வேலைக்குத் திரும்பும் பணிப்பெண்ணின் மனதிலும் நாய்கள் மீதான அன்பு விரவியிருப்பதை உணர முடிகிறது. இறந்துபோன நாய் ஒன்றை ஒரு குழியில் மாலையிட்டுப் புதைத்து, ஒரு ஊதுபத்தியை வைக்கும் இடம், வளர்ப்புப் பிராணிகளை நம் வீட்டில் ஒருவராகப் பார்க்கும் தொன்ம வாழ்வின் தொடர்ச்சியை உணர்த்துகிறது.
படம் முடிந்த மறுநாள் நண்பரைச் சந்தித்தபோது சொன்னார். “எனது நாய் இறப்பதற்கு முன்பு கடைசியாக தன் முகத்தை உயர்த்தி என்னைப் பார்த்த பார்வையும் அத்தனை வேதனையிலும் போய் வருகிறேன் எனச் சொல்ல கையசைப்பதுபோல் அசைத்த அதன் வாலும் என் கனவில் வந்தன” என்றார். இதுவரை நாய் எதையும் வளர்க்காத என் கண்கள் சட்டென்று கலங்கின.
ஒரு வீட்டில் நாய்கள் வளர்த்தால் போதும், அவருக்குத் தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வே வராது. எத்தனையோ முதியவர்கள், பெண்கள் தங்களின் வாழ்க்கையில் வரும் தனிமையின் துயரை இட்டு நிரப்ப நாய்களே வால் நீட்டுகின்றன. வாழ்க்கையின் பொருட்டு ஓடிக்கொண்டே இருக்கும் பெற்றோர்களால் கண்டுகொள்ளப்படாத குழந்தைகளின் உலகில் நாய்கள் எத்தனை சிறந்த தோழர்களாக இருக்கின்றன. இந்த ஆவணப்படத்தில் வரும் அரிய மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் தனிப்பட்ட, சமூக வாழ்வில் கைவிடப்பட்ட உதிரிகளாக வாழ்பவர்கள்தாம்.
நாய்களை நேசிக்கும் கைவினைக்கலைஞர், ஒரு சிற்பத்தைச் செதுக்கும் காட்சி அவ்வப்போது ஆவணப்படத்தில் வந்தபடி இருக்கிறது. படம் முடியும்போது அவர் கையிலிருந்த சிற்பம் நிறைவடைந்திருக்கும். அம்மாவும் குட்டிகளுமாக நாய்களின் உருவங்கள் அதில் செதுக்கப்பட்டிருக்கும். இந்த ஆவணப்படமும் மிகுந்த கவனமாகச் செதுக்கப்பட்ட ஒரு சிற்ப வேலைக்கு இணையானது.
இவ்வுலகம் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்குமானது. அதிலும் மனிதனின் சாயல் மிகுந்த நாய்கள் இன்னும் சிறப்பானவை. மனிதனின் மிகச்சிறந்த துணையாக இருக்கும் நாய்களைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தில் கதைசொல்லும் உத்தி சரியாகக் கையாளப்படும்போது, அது பெரிய மாற்றுத் திரைப்படமாக மாறிவிடுகிறது என்பதற்கு ‘பறையா டாக்’ சிறந்த உதாரணம். திரையிடலுக்குப் பின் எடிட்டர் லெனின் பார்வையாளர்களுடன் உரையாடிபோது சொன்ன வார்த்தைகள் இவை, “இந்தப் படத்தின் இயக்குநர் இந்நேரம் இங்கு இருந்திருந்தால் ஆரத்தழுவிக் கொண்டிருப்பேன்!”
உண்மைதான். இயக்குநர் ஜெஸ்ஸிக்கு ஓர் ஆரத்தழுவல்.
தொடர்புக்கு: stalinsaravanan@gmail.com