Published : 20 Mar 2020 09:01 AM
Last Updated : 20 Mar 2020 09:01 AM

திரைப் பார்வை: சாகசத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் - சோல (மலையாளம்)

ஜெயகுமார்

இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி, பாதகமான விமர்சனத்தை எதிர்கொண்ட படம் ‘சோல’. இப்போது இணையத்தில் வெளியாகி புதிய விவாதத்துக்கு தொடக்கமாக ஆகியிருக்கிறது. இயக்குநர் சனல்குமார் சசிதரனின் இந்தப் படத்தில், அரசியல் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்பது இந்த விமர்சனங்களுக்கான முக்கியமான காரணம்.

இதற்கு முன்பு வெளிவந்த சனலின் படங்கள் வெளிப்படையாகத் தம்மை அறிவித்துக் கொண்டவை. ஆனால் இந்தப் படம் ஓர் உதாரணத்தை மட்டுமே முன்வைக்கிறது. தமிழிலும் இந்தப் படத்தை வெளியிட முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் வெளிவரவில்லை என்பதையும் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கலாம்.

பள்ளி மாணவி, அவளது காதலன், காதலனுக்குத் தெரிந்த நடுத்தரவயது ஆள் ஆகிய மூவரையும் இயக்குநர் இந்தப் படத்தில் மூன்று வகையான ஆட்களின் பிரதிநிதியாக எடுத்துக்கொண்டுள்ளார். இந்த மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றின் வழி மற்றொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

சனல்குமார்

அவள், காதலனுடன் காதலால் பிணைக்கப்பட்டிருக்கிறாள். காதலன் தனது இந்தச் சாகசத்துக்காக நடுத்தரவயது ஆளைச் சார்ந்திருக்கிறேன். நடுத்தரவயது ஆளின் சார்போ சிக்கலானது. இந்தச் சார்ந்திருத்தல் முக்கோணமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக இயக்குநர், சார்ந்திருத்தலின் பாதகத்தைச் சொல்ல முயல்கிறார். ஓர் இனம், இன்னோர் இனத்தை அடிமைப்படுத்தும் அரசியலைச் சொல்கிறார் எனலாம்.

மலைக்காட்டில் தொடங்கும் படம், மீண்டும் ஓர் அடர்ந்த சோலையில் நிறைவுபெறுகிறது. இடையில் ஒரு பரபரப்பான நகரத்தை சனல் சித்தரித்துள்ளார். மலையிலிருந்து மாணவியைப் போல் படமும் பதற்றத்துடன் இறங்குகிறது. இந்தப் பதற்றத்தை, பறவை கோணக் காட்சிகள், ஆளரவமற்ற சாலை, ஜீப் செல்லும் வழியில் குறுக்கே பாய்ந்து செல்லும் அருவி எனப் பல விதங்களில் இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.

காற்றும் சாரலும் அந்தக் காட்சிகளில் சடசடத்துக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் படத்தின் மனநிலையை பார்வையாளருக்கு அருகில் கொண்டுவருகின்றன. அவளது பார்வையில் பதற்றம் அளிக்கும் இந்தக் காற்றும் சாரலும், காதலனின் பார்வையில் உற்சாகத்தை வரவழைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடுத்தர வயது ஆளுக்கு எதுவும் இல்லை.

எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத அந்தக் கதாபாத்திரம், படத்தின் மர்மத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. இந்த மூன்று கதாபாத்திரங்களுடன் தொடங்கும் பயணம், காலையிலிருந்து இரவுவரை பதற்றத்தின் கொடுமுடியை நோக்கி நீள்கிறது. இதைப் படத்தின் ஒரு பாதி எனலாம். இதுவரை படத்தை ஒரு யதார்த்தமான சிறுகதையைப் போல் விவரித்துள்ளார் இயக்குநர்.

நகரம் குறித்தான பிரமிப்புதான் அவளை நகரத்தை நோக்கி ஈர்த்துவந்திருக்கிறது. நகரத்தை, படம் அவளது பார்வையில் விலகிக் காண்பிக்கிறது. பிரம்மாண்டமான வணிக வளாகங்கள், விரிந்த சாலைகள், சாலையோரக் கடைகள், கடற்கரை என நகரத்தை ஒரு மாயக் கனவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இயக்குநர் சனலின் முந்தைய படம் பெண்களின் பக்கம் நின்று வெளிப்படையாகப் பேசியது என்ற எண்ணத்துடன் இந்தப் படத்தை நோக்கும்போது ஏமாற்றம் தரக்கூடியதாக இருக்கலாம். ‘செக்சி துர்கா’

படத்தில், துர்கா என்னும் கதாபாத்திரத்தைக் கொண்டு நிர்பயாவுக்கு அருகில் கொண்டுபோய் இயக்குநர் நிறுத்தியிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அந்தச் சிறுபெண் நிர்பயாவாக மாறிவிடுகிறார். ஆனால் படம் அதைப் பேசவில்லை. அதையும் தாண்டிய ஒரு பெண் அரசியலை நோக்கி நீள்கிறது.

படம், கேரளத்தின் முக்கியமான வழக்கான சூர்யநெல்லியை நினைவுபடுத்திப் பதற்றம் கொள்ளவைக்கிறது. அதேபோல் அவளை அழைத்துவரும் காதலன், ஆணாதிக்கச் சமூகத்தின் இன்னொரு பிரஜையாக ஆகிறான். சமூகத்தில் நிலை பெற்றிருக்கும் ஆணாதிக்கத்தின் உருவமாக, அந்த நடுத்தரவயது ஆளை எடுத்துக்கொள்ளலாம்.

பெண் குறித்த புனிதங்கள் அவளைக் கைக்கொள்வதற்கான கருவியாகப் பாவிக்கப்பட்டு வருவதைப் படம் யதார்த்தமான சம்பவம் கொண்டு சித்தரிக்கிறது. ஒரு பெண் தன் பாதுகாப்புக்காக ஓர் ஆணைச் சார்ந்திருப்பதன் அரசியலைப் படம் விமர்சிக்கிறது. ’ஆண்மை’ என்னும் போற்றப்படும் கற்பிதத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கும் பெண் மனத்தின் முன்னே, படம் ஒரு வலுவான கேள்வியை எழுப்புகிறது. இந்த ஆதிக்க மனமும் அடிமைக் குணமும் சமூக ஒழுக்கங்களாக மாற்றப்பட்டிருப்பதன் சாட்சியாக இந்தப் பள்ளி மாணவி தலைகுனிந்து யதார்த்தத்தைப் பின்தொடர்வதன் வழியாக இதைச் சொல்கிறார் இயக்குநர்.

நகரத்தின் ஒருநாளை, அசௌகர்யத்துடனும் சிறு எதிர்பார்ப்புடனும் எதிர்கொள்கிறாள் அவள். பிறகு, தனக்குப் பழக்கமான சாகசத்துக்கும் அறியாத யதார்த்தத்துக்கும் இடையில் மாட்டிக்கொள்கிறாள். இறுதியில் கோரமான யதார்த்தத்தை அவள் எதிர்கொள்ள நேரிடுகிறது. யதார்த்தத்தின் வழியிலேயே அவள் பயணம் தொடங்குகிறது. நூற்றாண்டுகளாகப் பெண்கள் பலருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் பாதையும் இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x