

பிருந்தா சீனிவாசன்
திரைப்படங்கள் பொழுதுபோக்குவதற்கா சமூகத்தைப் பழுதுபார்ப்பதற்கா என்ற வாதம் திரைப்படங்கள் தோன்றிய காலத்திலிருந்தே இருப்பதுதான். ஆனால், சமூக அவலங்களை ஓரளவுக்காவது சுட்டிக்காட்டுகிற படங்கள் வரவேற்பைப் பெறத் தவறுவதில்லை. 17-ம் சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட மொராக்கோ நாட்டுத் திரைப்படமான ‘தி அன்நோன் செயின்ட்’ (The Unknown Saint) படமும் அப்படிப்பட்டதுதான்.
பக்திக்கும் அபத்தத்துக்கும் பேராசைக்கும் ஏமாற்றுத்தனத்துக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஊடாடும் கதை. பாலைவனக் குன்று ஒன்றின் உச்சியில் புதைத்துவைத்த பணத்தைத் தேடிவருகிறான் சிறையில் இருந்து விடுதலைபெற்ற திருடன் ஒருவன். சிறைக்குச் செல்லும்முன் அவசரமாகப் புதைத்துச் சென்ற இடத்தை எளிதில் அடையாளம் காணும் பொருட்டும் வேறு யாரும் அதை எடுத்துவிடாத முன்னெச்சரிக்கையுடனும் அந்த இடத்தைச் சமாதிபோல் அமைத்துவிட்டுச் செல்கிறான். திரும்பி வந்தவனை அந்தச் சமாதியின் மேல் எழுந்து நிற்கும் கட்டிடம் வரவேற்கிறது.
புனிதத் தலமான சமாதி
திருடன் பணத்தைப் புதைத்த இடத்தின் சமாதித் தோற்றத்தைப் பார்த்த யாரோ ஒருவர், அது அந்த வழியாகப் பயணம் செய்த இஸ்லாமியத் துறவியின் கல்லறையாக இருக்கக்கூடும் என்று அதன் மீது கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார். ‘பெயர் தெரியாத துறவி’யின் சமாதியாகிவிட்ட அது ஒரு புனிதத் தலமாகவும் ஆகிவிட்டது! அதுதான் உண்மை என மிகச் சில ஆண்டுகளுக்குள்ளேயே ஊர் மக்கள் நம்பிவிடுகின்றனர். திருடன் சிறையில் இருந்து வெளிவருவதற்குள்ளேயே இந்த நிலை என்றால், இதுவரை வரலாறு என எழுதப்பட்டவற்றின் நம்பகத்தன்மையை எப்படிச் சோதிப்பது?
மக்களுக்குத் தங்கள் குறைகளையும் பாடுகளையும் இறக்கிவைக்க ஓரிடம் வேண்டும்தானே. பெயர் தெரியாத துறவியின் கல்லறை, சுமைதாங்கியாகிறது. சுற்றியிருக்கும் ஊர்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்; காணிக்கை செலுத்துகிறார்கள். கண் தெரியாதவர்களுக்குப் பார்வை கிடைத்தது; கால் இல்லாதவன் நடந்தான் என்பன போன்ற கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த நினைவிடத்தைச் சுற்றிப் பணம் புழங்குகிறது. திருடனுக்குத் தான் புதைத்த பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டும். அதனால் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட விடுதியில் தங்குகிறான்.
காவல் வேண்டும் கல்லறை
திருடனைச் சுற்றித்தான் கதை என்றாலும், ஊருக்குப் புதிதாக வரும் இள வயது மருத்துவர், அவருக்கு உதவியாளராக இருக்கும் பெருங்கிழவர், மருத்துவமனைக்கு வரும் பெண்கள், கல்லறையை இரவில் காவல் காக்கும் நாய், நாயின் உரிமையாளர், பகுதிநேரத் தொழிலாகப் பல் கட்டும் வேலை செய்யும் முடிதிருத்தும் தொழிலாளி, வறட்சியால் பலரும் ஊரைக் காலி செய்துகொண்டு போனபோதும் நம்பிக்கையோடு தன் வயலில் பாடுபடும் தந்தையும் மகனும் எனப் பலவிதமான கதாபாத்திரங்கள் படத்தை நகர்த்துகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதையும் அதற்கான நியாயமும் இருக்கிறது.
பணம் புழங்குவதால் கல்லறைக்குக் காவல் தேவைப்படுகிறது. உலகில் எந்தச் சாமிதான் மனிதர்களின் துணையின்றித் தன்னைக் காத்துக்கொண்டது? சாமிக்கே இந்த நிலை என்றால், பெயர் தெரியாத துறவியின் நிலை? இரவில் நாயும் அதன் உரிமையாளரும் காவல் இருக்கின்றனர். நாயை அப்புறப் படுத்தினால்தானே கல்லறைக்குள் இருக்கும் பணத்தை எடுக்க முடியும்? அதனால், திருடன் தனக்குத் தெரிந்த ‘மூளை’க்காரன் ஒருவனை உதவிக்கு அழைக்கிறான். பகலில் சமாதியை நோட்டம் விடுவது, இரவில் பணமெடுக்க முயல்வது எனக் கழிகின்றன நாட்கள். அதற்குத் தோதாகத் தன்னை ஆராய்ச்சியாளன் எனச் சொல்லிக்கொள்கிறான் திருடன்!
அலுத்துப்போன வாழ்க்கை
தங்கியிருக்கும் விடுதியிலேயே பணத்தைத் திருடிக் கட்டணம் செலுத்தும் திறமைசாலித் திருடனுக்கு நாயைச் சமாளிப்பது பெரும்பாடாகிறது. திருடர்களின் முயற்சியில் நாய் பற்களை இழக்க, உரிமையாளன் மதிப்பிழக்கிறான். ஊரில் அவன் செல்வாக்கு ஒரே நாளில் சரிகிறது. இழந்த கம்பீரத்தை மீட்க, முடிதிருத்தும் தொழிலாளியிடம் கெஞ்சிக் கூத்தாடி நாய்க்குத் தங்கப்பல் கட்டுகிறான். அவனுக்குத் தன் மகனைவிட முக்கியமானதாயிற்றே அந்த நாய்! அந்த வைபவத்தை ஊரே கொண்டாடுகிறது. தங்கப்பல் கட்டப்பட்ட காவல் நாயை இப்போது அவன் காவல்காக்கிறான்.
மக்கள் நலனில் கவலைகொள்ளாத, கண்காணிப்பு ஏதுமில்லாத அரசமைப்புக்குச் சான்றாக அந்த ஊர் மருத்துவமனை இருக்கிறது. அங்கே பணியாற்றும் மருத்துவரும் அவருடைய உதவியாளரும் எதையாவது பரபரப்பாகச் செய்ய நினைக்கிறார்கள்.
நாய்க்குப் பல் உடைந்த நேரத்தில் கோயிலைப் பற்றி இரவோடு இரவாகப் புரளி கிளப்பிவிடுகிறார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்டாலும் நம்பிவிடும் மக்கள், கண்ணால் காண்பதை நம்பாமல் இருப்பார்களா? அதையும் நம்புகிறார்கள். பக்தி, எடுப்பார் கைப்பிள்ளையாகிறது.
பொய்க்காத நம்பிக்கை
சிறை மீண்ட பிறகும் பிறர் பணத்தில் வாழ ஆசைப்படுகிறான் திருடன். அவன் தங்கியிருக்கும் ஊரைச் சேர்ந்த முதியவரோ எப்படியும் பயிர் செய்துவிட வேண்டும் என்கிற நம்பிக்கையுடன் உழைக்கிறார். தள்ளாத வயதிலும் வயலில் பாடுபடும் தந்தைக்கு அவருடைய இளைய மகன் துணைநிற்கிறான். கடைசி நம்பிக்கையாக அந்த ஊரில் எஞ்சியிருக்கும் தன் நண்பனை மழைக்கான கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர். பிரார்த்தனைகள் என்றைக்குப் பலன் தந்திருக்கின்றன? முதியவரும் இறந்துவிட, மகனும் ஊரைவிட்டுப் புறப்பட எத்தனிக்கிறான்.
அன்று இரவு சமாதிக்குச் செல்கிறான். திருடனும் பணத்தை எடுக்கவருகிறான். இருவரின் கணக்கையும் காலம் மாற்றிப் போடுகிறது. குண்டொன்று வெடித்துச் சமாதி தரைமட்டமாகிறது. வறண்ட நிலத்தில் நம்பிக்கையுடன் பாடுபட்டவனின் கைகளில் பணப்பை கிடைக்கிறது. பிழைப்பு தேடி வெளியூருக்குச் சென்றுவிட்ட தன் தந்தையின் நண்பர் குடும்பத்தைச் சொந்த ஊருக்கே அவன் அழைத்துவருகிறான். தரைமட்டமான சமாதி மீண்டெழுகிறது. தன் தந்தையின் பெயரையே அந்தச் சமாதிக்குச் சூட்டுகிறான். அந்தத் துறவிக்கு இப்போது பெயர் கிடைத்துவிட்டது. திருடனின் தேடல் முடிவற்றதாகிறது.
பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் அபத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அலா எடீன் அல்ஜெம். அவரது முதல் படம் இது. 2019 கான் திரை விழாவில் திரையிடப்பட்ட இரண்டு மொராக்கோ நாட்டு அறிமுகத் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.