

சு.சுபாஷ்
மற்றுமொரு ‘#மீடூ’ திரை ஆக்க மாக வெளியாகி இருக்கிறது, நெட்ஃபிளிக்ஸின் இந்தி வலை சினிமாவான ‘கில்டி’!.
டெல்லி கல்லூரி ஒன்றில் காதலர் தினத்தன்று ஒரு குற்றச் சம்பவம் நிகழ்கிறது. அது தொடர்பான வழக்கறிஞர் விசாரிப்புகளில் அவரவர் பார்வையிலான பிளாஷ்பேக் விவரிப்புகளில் கதை விரிகிறது. செல்வமும் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்து வாரிசான விஜய் என்ற மாணவன் கல்லூரியின் இசைக்குழு வாயிலாக மாணவிகள் மத்தியில் பிரபலமாகிறான்.
இசைக்குழுவில் பாடல் எழுதச் செல்லும் நான்கி என்ற மாணவியும் விஜய்யும் காதல் ஜோடிகளாகின்றனர். தனு என்ற இன்னொரு மாணவிக்கும் விஜய் மீது ஈர்ப்பு இருக்கிறது. அதைப் பட்டவர்த்தனமாக அவள் வெளிப் படுத்தியதை இதர மாணவர்கள் விளையாட்டாக ரசிக்கிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தினத்தன்று நள்ளிரவுவரை நீடிக்கும் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடந்ததாக அடுத்த நாள் கல்லூரி வளாகம் பரபரக்கிறது. தனு மீது விஜய் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகச் சமூக ஊடகங்களின் வாயிலாக ‘#மீடூ’ குற்றச்சாட்டு எழுகிறது. ஊடக விவாதங்களிலும் அதுவே பேசு பொருளாகிறது.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுப்பதுடன், பரஸ்பர சம்மதத்துடனே உறவு நிகழ்ந்ததாக விஜய் சாதிக்கிறான். தொடக்கத்தில் காதலனிடம் கோபம் கொள்ளும் நான்கி, நாள்போக்கில் அனுதாபம் கொள்கிறாள். காதலனுக்கு ஆதரவாகக் களமிறங்கி விசாரணையின் போக்கை மாற்றுகிறாள்.
சமூக ஊடகங்களின் ஆதரவு, சந்தர்ப்ப சாட்சிகள் மத்தியில் காதலனுக்கு ஆதரவான தரவுகளைச் சேகரிக்கிறாள். நீதிமன்ற வழக்கின் காட்சிகள் எதிர்பார்த்த தீர்ப்புடன் விரைந்து முடிகின்றன. ஆனால், கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், மற்றுமோர் உருக்கமான விசாரணைக் களம் அரங்கேறுகிறது. அங்கே பல முகத்திரைகள் கிழிவதுடன் ‘#மீடூ’ மையப்படுத்தி நுணுக்கமாகவும் ஆழமாகவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கவிதை மனமும் காதல் குணமுமாக வளையவரும் கியாரா அத்வானியைச் சுற்றியே கதை நகர்கிறது. கிறங்கடிக்கும் அழகுடன் தோன்றும் கியாரா, காதலன் மீது உருகுவது, அவன் இன்னொரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டான் என்றறிந்து கொந்தளிப்பது, உண்மையைத் தேடி பயணிப்பது என மாறும் மனநிலைகளைச் சற்றே மிகை நடிப்புடன் வெளிப்படுத்துகிறார். கியாராவை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணாகத் தோன்றும் அகன்சா ரஞ்சன் தன் பங்குக்கு அசத்துகிறார். கரண் ஜோஹர் தயாரிக்க, ருச்சி நரேன் இயக்கி உள்ளார்.
‘#மீடூ’ தன்னெழுச்சி இயக்கம் குறித்தும், அதன் போராட்டப் போக்கு குறித்தும் புரிந்துகொள்வதில் சமூகத்தின் போதாமைகள் ஏராளம். அவற்றில் பலவற்றை ‘#மீடு’க்கு எதிரான திசையில் புறப்பட்டு புரியவைக்க முயல்கிறது இப்படம். நன்கு அறிமுகமான இருவர் மத்தியில், நான்கு சுவர்களுக்குள்ளான உறவுப் பரிமாறலில் எது வன்கொடுமை, எது ஒத்திசைவான உறவு என்பதை வரையறுப்பதில் தடுமாற்றம் நிறைந்திருக்கிறது. பெண் மீதே பழிபோடும் சமூகத்தின் பொதுப் பார்வை படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.
இவற்றுடன், ஆண்கள் மத்தியில் பழகுவதை வைத்தும், அவள் அணியும் உடையை வைத்தும் ஒரு பெண்ணைப் பழி தூற்றும் கூட்டு மனப்பான்மை, எல்லாவற்றிலும் எக்குத்தப்பாகக் கருத்து வைத்திருக்கும் சமூகத்தின் அலட்சியப் போக்கு, கவனம் ஈர்ப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் இளைய வயதினரின் ஆர்வக்கோளாறு, பெண்ணைப் பற்றி முடிவெடுப்பது என்றால் மட்டும் காட்டும் அவசர வேகம் எனப் பல அடுக்கிலான சமூக நடப்புகள் விவாதிக்கப்படுகின்றன.
பாடல்கள் உட்பட சுமார் அரை மணி நீளத்தைக் குறைத்திருந்தால் திரைப்படத்தின் திரில்லர் பாவனைக்குப் பலம் சேர்ந்திருக்கும். ‘பிங்க்’ திரைப்படத்தின் சாயலைத் தவிர்ப்பதற்காக நீதிமன்ற காட்சிகளைப் பெயருக்கு வைத்துவிட்டு, மாணவர் மன்றத்தில் நீதி கேட்பதாக மாற்றியிருப்பதும் ‘கில்டி’ திரைக்கதைக்குப் பொருந்திப்போகிறது. அதேபோல், ‘#மீடு’ அலை எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பேசுவதுடன், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் பார்வையாளர் மனத்திலும் கவிந்திருக்கும் குற்றஉணர்வை வெளிப்படுத்தவும் முற்படுகிறது ‘கில்டி’.