

சுமன்
‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் பயமறியாப் பதின்ம வயதினரை மையமாகக் கொண்ட கதையுடன் வெளியாகிறது, ‘சார்ம் சிட்டி கிங்ஸ்’ திரைப்படம்.
பால்டிமோர் என்ற அமெரிக்க நகரத்தின் நள்ளிரவுச் சாலைகளில் பைக் ரேஸ் நடத்தும் பதின்மப் பையன்கள் குறித்து ‘12 ஓ’கிளாக் பாய்ஸ்’ என்ற ஆவணப்படம் ஏழாண்டுகளுக்கு முன்னர் வெளியானது. இந்த ஆவணப்படத்தைத் தழுவி உருவாகியுள்ளது ‘சார்ம் சிட்டி கிங்ஸ்’ திரைப்படம்.
பால்டிமோர் நகரத்தில் தன் தாயுடன் தனியே வசிக்கும் மௌஸ் என்ற 14 வயதுச் சிறுவனுக்கு உள்ளூர் பைக் ரேஸ் கும்பலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அவனைச் சிறு வயதிலிருந்து அரவணைத்து வரும் போலீஸ்காரரின் எச்சரிக்கையையும் மீறி, சாலை சாகசங்களில் மௌஸ் தீவிரமாகிறான்.
சாலை வேக சாகசக் கும்பலின் தலைவனுக்குச் சிறுவனைப் பிடித்துப் போகிறது. வயதுக்கு மிஞ்சிய ஆயுதங்களும் வன்முறையும் அவனுக்கு அறிமுகமாகின்றன.
மௌஸ் தனக்குப் பிரியமான செல்லப் பிராணிகள், தோழியிடமிருந்து விலகி இன்னோர் உலகில் சஞ்சரிக்கத் தொடங்குகிறான். அங்கே பிரத்யேக வாகன மாடல்கள், அவற்றில் அதிவேக ரேஸ் என அவன் அதுவரை ஏங்கியதெல்லாம் கிடைக்கிறது. அப்படியே அவன் எதிர்பார்க்காத கறுப்புப் பக்கத்தையும் தரிசிக்க வேண்டியதாகிறது. அதன் பின்னர் சிறுவனின் ரேஸில் எதிர்படும் வேகத் தடைகளும், அவனது மாறும் பயணமுமே ‘சார்ம் சிட்டி கிங்ஸ்’ திரைப்படம்.
டியல்லோ வின்ஸ்டன், மீக் மில், வில் கேட்லெட் உள்ளிட்டோர் நடிக்க, ஏஞ்சல் மேன்யூல் சோடோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களில் ஒருவராக நடிகர் வில் ஸ்மித் இணைந்துள்ளார்.
‘சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ்’ நிறுவனம் வெளியிடும் ‘சார்ம் சிட்டி கிங்ஸ்’ திரைப்படம், ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.