கோடம்பாக்கம் சந்திப்பு: சூர்யாவுக்கும் ஜோடி!

கோடம்பாக்கம் சந்திப்பு: சூர்யாவுக்கும் ஜோடி!
Updated on
2 min read

‘கைதி’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்துவரும் படம் ‘சுல்தான்’. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

கன்னடத்திலிருந்து தெலுங்கு சினிமாவில் நுழைந்து ‘கீதகோவிந்தம்’ என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமாகிவிட்ட ராஷ்மிகா, தம்பி கார்த்தியைத் தொடர்ந்து அண்ணன் சூர்யாவுக்கும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணி ஆறாம் முறையாக இணையும் ‘அருவா’ படத்தில்தான் சூர்யா ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் ரஷ்மிகா.

இது ஆந்திரத்து ‘சில்லுக்கருப்பட்டி’

தெலுங்கு சினிமா என்றாலே மாஸ் மசாலா படங்கள்தாம் என்ற நிலை இப்போதும் உள்ளது. அந்த எண்ணத்தை உடைக்கும் தரமான சிறு முதலீட்டுப் படங்களின் வரிசையில் கடந்த ஆண்டு வெளியாகி கோடிகளைக் குவித்த படம் ‘கேர் ஆப் காஞ்சரப்பாலம்’. சர்வதேசப் படவிழாக்களிலும் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தை ‘கேர் ஆஃப் காதல்’ என்ற தலைப்பில் தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார்கள்.

பள்ளிப் பருவம் தொடங்கி நடுத்தர வயதுவரை நான்கு காதல் ஜோடிகளின் காதலும் அவை சந்திக்கும் எதிர்ப்புகளும்தான் கதை. ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களின் நாயகன் வெற்றி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தைப் போலவே இந்தப் படமும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

அதர்வாவுக்கு இணை

இந்தித் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலமாகி, பின் தெலுங்கு சினிமா வழியே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் லாவண்யா திரிபாதி. 2014-ல் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘பிரம்மன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லாவண்யா, பின்னர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘மாயவன்’ படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் அதர்வா முரளி நடிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். “இடைவெளி விட்டு தமிழ்ப் படங்களில் நடித்தாலும் இந்தப் படத்தில் வில்லனைத் தெறிக்கவிடுவது நான்தான்” என்கிறார் லாவண்யா.

இரண்டாயிரத்தின் வாழ்க்கை

யூடியூப் அலைவரிசை குழுக்கள் திரைப்படத் தயாரிப்பு, இயக்கத்தில் இறங்கி வெற்றியை அள்ளும் காலம் இது. அந்த வரிசையில் ‘பிளாக் ஷீப்’ யூடியூப் குழுவினர், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். பிளாக் ஷீப் குழுவில் பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கும் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘ஆட்டோகிராஃப்’, ‘96’ போல இதுவும் பள்ளிப் பருவ நினைவுகளைப் பேசும் படமாம். ஒரு சின்ன வேறுபாடு இரண்டாயிரத்தின் பள்ளி மாணவர்கள் வாழ்க்கையைப் படமாக்குகிறதாம் படக்குழு.

சிறு கதாபாத்திரத்தில்...

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் பங்கேற்று வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்குப் படம் ஒன்றில் சிறு கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.

இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் அஜித் நடித்தது போலவே, தற்போது அதன் தெலுங்கு மறு ஆக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். ‘வக்கீல் சாப்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாகச் சில காட்சிகளில் தோன்றுகிறார் ஸ்ருதிஹாசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in