

கமல் ஹாசனையே அசர வைத்துவிட்டன தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கும் பேய்கள். “எனக்கு ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், தற்போது ஆவி படங்களுக்குத்தான் நல்ல மார்க்கெட் உள்ளது” என்று சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் கூறியிருக்கிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ எப்போதாவது தமிழில் மொழிபெயர்க்கப்படும் ஹாலிவுட் பேய்கள் தமிழ் ரசிகர்களைத் தவணை முறையில் பயமுறுத்திவந்தன. இப்போது அவை அதிகரித்துவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஈரம்’, ‘யாவரும் நலம்’ ஆகிய படங்கள் பேய் படத்தையும் இத்தனை தரமான அனுபவமாக மாற்ற முடியுமா என்று ரசிகர்களை வியக்க வைத்தன. ஆனால் நிஜமான சீசன் களை கட்டத்தொடங்கியது கார்த்திக் சுப்புராஜ் சமைத்துக் கொடுத்த ‘பீட்சா’ வழியாகத்தான். இந்தப் படம் ஒவ்வொரு வீட்டிலும் பேய் படங்கள் பற்றி ஆவி பறக்க பேச வைத்தன. பீட்சா மூலம் தொடங்கப்பட்ட இந்த பேய் ட்ரெண்ட் காஞ்சனா 2-ன் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் இவ்வகைப் படங்களின் உத்திரவாதமான வெற்றியை உறுதிப்படுத்தியது.
டார்லிங், டிமாண்டி காலனி, மாஸ், என விதவிதமாய் பேய்க் கதாபாத்திரங்களைக் கதாநாயகர்களே துணிச்சலாக ஏற்றது தமிழ்ப் பேய்ப் படங்களுக்கு ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும். திரையரங்குக்கு வராமல் ஒதுங்கியிருந்த குழந்தைகளையும் பெண்களையும் கூட இந்தப் போக்கு வரவழைத்துவிட்டது. நாயகர்களுக்கு முன்பே அழகிய நாயகியர் பேய் வேடத்துக்குச் சம்மதித்தாலும் பேயாக நடித்தால் எங்கே தங்கள் மார்க்கெட் போய்விடுமோ என்று முன்னணிக் கதாநாயகிகள் பயந்த காலம் தற்போது மலையேறிவிட்டது.
அரண்மனை 2 படத்தில் பேயாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் த்ரிஷா, நாயகி’ படத்திலும் பேய் அவதாரம் எடுக்கிறார் என்கிறார்கள். மற்றொரு முன்னணி நாயகியான நயன்தாராவும் ‘மாயா’ திரைப்படம் மூலம் அழகு மோகினியாகப் பேய் வேடம் ஏற்றிருக்கிறார் என்று தகவல் வருகிறது. நாயகன், நாயகியைத் தாண்டித் தற்போது குணச்சித்திர நடிகர்களும் பேய் வேடங்களில் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் சத்யராஜ் ‘ஜாக்சன் துரை’யாகப் பேய் வேடம் போட்டிருப்பதைச் சொல்ல வேண்டும்.
எத்தனையோ பேய்ப் படங்கள் வந்தாலும் பேய்க் கதைகளில் நகைச்சுவையைக் கலந்து பிரம்மாண்ட வெற்றிகளைப் பெற்றுவருபவர் இயக்குநரும் நடிகருமான லாரன்ஸ்தான். 2007-லேயே ‘முனி’ என்ற பேய்ப் படம் மூலம் இந்த வகைத் திரைப்படங்களுக்கு இன்னும் மவுசு உள்ளது என்பதை நிரூபித்தவர் இவர். முனி, முனி-2 காஞ்சனா, காஞ்சனா-2 எனத் தொடர்ந்து சிக்ஸர் அடித்துவருகிறார். காஞ்சனா-2வின் பட்ஜெட் வெறும் 17 கோடி ரூபாய்.
தென்னிந்திய மாநிலங்களில் படம் வசூலித்ததோ 150 கோடி ரூபாய்க்கும் மேல். காஞ்சனா- 3 படத்தை ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற பெயரில் இயக்கி போலீஸ் பேயாக நடிக்க இருக்கிறாராம் லாரன்ஸ். தவிர ‘நாகா’ என்ற தலைப்பில் நாகராஜாவின் கதையை நான்கு பாகங்கள் கொண்ட பேய்ப் படங்களாக உருவாக்குகிறார் என்றும் தகவல் கிடைக்கிறது.
“தமிழில் பேய் படங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. நான் பேய்க் கதையில் நகைச்சுவையைச் சேர்த்தேன். அது பெண்களிடமும் குழந்தைகளிடமும் என்னைக் கொண்டு சேர்த்துவிட்டது” என்கிறார் இயக்குநர் மற்றும் நடிகரான லாரன்ஸ்.
வெற்றிகரமான நகைச்சுவைப் படங்களை உருவாக்குவதில் தேர்ந்த சுந்தர்.சி, தனது பேய்ப் படமான ‘அரண்மனை’யின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனையின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். “பேய்களுக்கு அழுத்தமான பின்னணிக் கதைகளை அமைத்துவிடுவது இவரது திரைக்கதைகளின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது என்கிறார் ‘பிள்ளை நிலா’, ‘நைனா’ ஆகிய பேய்ப் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர், நடிகர் மனோபாலா. சுந்தர்.சி பேய்ப் படங்களை இயக்குவதோடு பேய்ப் படங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார். அறிமுக இயக்குநர் எஸ்.பாஸ்கர் இயக்கும் ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’ என்ற படத்தையும் தயாரித்துவருகிறார்.
குறைந்த செலவில் நிறைய லாபம் என்னும் இலக்கில் அக்காலம் முதல் இக்காலம் வரை ஹாலிவுட்டிலும் பேய்களை மையமாக கொண்ட திகில் படங்களே வசூலில் சாதிப்பவையாக உள்ளன. ஆக் ஷன் மற்றும் டிராமா வகைமைப் படங்கள்தான் ஹாலிவுட்டில் அதிகம் வெற்றிபெறுபவையாக இன்னும் இருக்கின்றன.
ஜூராசிக் வேர்ல்ட் படம், உலகம் முழுவதும் 1600 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதன் தயாரிப்புச் செலவு 300 மில்லியன் டாலர். முதலீட்டை விட 533 சதவீதம் லாபத்தை வசூலித்தது. ஆனால் அதைவிடக் குறைவான செலவில் எடுக்கப்பட்ட ‘பேராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற திகில் படம் 236 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதன் தயாரிப்புச் செலவோ வெறுமனே 9.4 மில்லியன் டாலர்கள்தான். லாபத்தின் சதவீதம் 2,510 சதவீதம்.
பட்ஜெட் என்னவாக இருந்தாலும் நம்மைத் திகிலூட்டும் பேய்க் கதைகள் மட்டும்தான் வெற்றிபெறுகின்றன என்கிறார் திரைப்பட விமர்சகர் மற்றும் இயக்குனர் கேபிள் சங்கர். “பேய்ப் படங்களுக்கு மினிமம் கேரண்டி இருக்கிறது. தியேட்டர்களுக்கு பார்வையாளர்களை ஈர்க்கும் நாயகர்களைப் போலப் பேய்களும் ஈர்க்கின்றன. ஆனால் கதை நன்றாக இருக்க வேண்டும். திகிலூட்ட வேண்டும் என்பது அவசியம். ஒழுங்கான கதை இருந்ததால்தான் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பீட்சாவும், டிமாண்டி காலனியும் ஓடின. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அரண்மனை போன்ற படங்களும் ஓடின” என்கிறார்.
ராத், பூங், பூத் என திகில் பட வகைமையில் வரிசையாக பல படங்களை எடுத்து வெற்றிபெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா, “ பார்வையாளரை நடுங்க வைக்கும் வகையில் திகில் படங்கள் இருக்க வேண்டும். அடுத்து என்ன என்ற பதைபதைப்பிலேயே பார்வையாளர்களை வைத்திருந்தால்தான் பேய்ப் படங்கள் வெற்றிபெறும்” என்கிறார்.
“பகுத்தறிவு மூலம் நம்மைச் சுற்றி நடப்பதை நம்மால் ஆராய முடிந்தாலும், விந்தையும் பயமும் அடிப்படை உணர்ச்சிகளாக நம்மிடம் இருக்கவே செய்கின்றன. குழந்தைகளும் இளைஞர்களும் பாதுகாப்பான திரையரங்கம் போன்ற சூழல்களில் திகிலடைய விரும்புகிறார்கள். தினசரி வாழ்க்கையில் நடக்காத பயங்கரங்களை நடப்பதாக கற்பனை செய்வதற்கு பேய் படங்கள் உதவியாக இருக்கின்றன. அதனால் பேய்ப் படங்கள் எல்லா காலத்திலும் மக்களை ஈர்க்கின்றன” என்கிறார் மனநல மருத்துவர் பி.ஆனந்தன்.
“கடந்த ஆண்டு வெளியான பேய்ப் படங்களில் பல தோல்வியைத் தழுவியிருந்தாலும் 2015-ல் வெளியான பேய்ப் படங்கள் இதுவரை ஏமாற்றவில்லை. இதனால் பேய்களின் மீதான ரசிகர்களின் பயம் தமிழ் சினிமாவுக்கு பணத்தைக் கொட்டித் தரும் மந்திரமாக மாறியிருக்கிறது. ஆனால் இந்தப் போக்கு நீடிக்காது” என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தர். எப்படியிருந்தாலும் பேய்களின் கோபமும், அவற்றின் கண்ணீர் கதைகளும், அவற்றின் பழிவாங்கும் படலமும் கோலிவுட்டில் இபோதைக்கு ஓயாது என்பது மட்டும் நிச்சயம்.