Published : 06 Mar 2020 09:02 AM
Last Updated : 06 Mar 2020 09:02 AM

கூட்டாஞ்சோறு: இவர் வட இந்திய ‘கைதி’

கடந்த தீபாவளித் திருநாளில் விஜயின் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ அதன் தனித்துவத்துக்காகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நாயகன் கார்த்திக்கு ஜோடி இல்லை; பாடல்கள் இல்லை எனப் பட்டையைக் கிளப்பிய அந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் வயாகாம் நிறுவனமும் இந்தியில் மறுஆக்கம் செய்கின்றன.

முதலில் கார்த்தி வேடத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தற்போது அஜய் தேவ்கன் ‘கைதி’யாக இறுதி செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஜய் தேவ்கன், 'தமிழில் வெளியான கைதி படத்தின் மறு ஆக்கத்தில் நான் நடிக்கிறேன். இப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரஞ்சீவியின் அரசியல் சினிமா

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி 200 கோடி வசூல் செய்த படம் 'லூசிஃபர்'. இந்தப் படத்தின் தெலுங்கு மறுஆக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க, அதை இயக்க இருக்கிறார் வி.வி.விநாயக். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ரமணா' படத்தை 'தாகூர்' என்றும், 'கத்தி' படத்தை 'கைதி 150' என்றும் தெலுங்கில் மறுஆக்கம் செய்தவர்.

'லூசிஃபர்' திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், அதன் தெலுங்கு மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை இரண்டையுமே வாங்கிவிட்டாராம் சிரஞ்சிவி. மோகன்லால் ஏற்ற கதாபாத்திரம் ஆந்திரம், தெலங்கானாவின் இன்றைய அரசியலுக்கு எதிர் அரசியல் படமாக இருக்கும் என்பதால்தான் இந்தப் படத்தைக் கைப்பற்றினாராம் சிரஞ்சீவி. தெலுங்கு மறுஆக்கப் படத்தை வழக்கம்போல் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார்.

பொங்கி எழுந்த சங்கம்!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'டிரான்ஸ்', 'ஜோசப்' ஆகிய இரண்டு படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘டிரான்ஸ்’ திரைப்படத்தில் மனநல மருத்துவர்கள் குறித்தும், அதற்கான மருந்துகள் குறித்தும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 'ஜோசப்' திரைப்படத்தில் உறுப்பு தானம் குறித்துச் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் உறுப்பு தானம் செய்ய முன்வரும் மக்கள் மத்தியில் அது குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் எனவும் இந்திய மருத்துவர் சங்கம் குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுபோல் மலையாளப் படங்களில் மருத்துவத் துறை குறித்த தவறான சித்தரித்தல்கள் தொடர்ந்து வருவதாக விரிவான புகார் கடிதம் ஒன்றை இந்தியத் தணிக்கைத் துறைக்கு அனுப்பிப் பொங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x