

சுமன்
பீட்ரிக்ஸ் பாட்டர் என்ற குழந்தைகள் எழுத்தாளர் எழுதிய ‘தி டேல் ஆஃப் பீட்டர் ராபிட்’ கதைகளைத் தழுவிய ‘பீட்டர் ராபிட்’ திரைப்படத்தின் முதல் பாகம் 2018-ல் வெளியானது. இந்த லைவ் ஆக்ஷன் - அனிமேஷன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே’ என்ற தலைப்பில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகிறது.
யானைகளின் வலசைப் பாதையை மறித்து விவசாயம் செய்வதுபோல் முயல்கள் வாழும் வனப்பகுதியில் ஜோ என்ற பெரியவர் தோட்டமிடுகிறார். முயல் கூட்டத்தின் சுட்டியான பீட்டர் தலைமையில் ஜோவின் தோட்டத்தில் சேட்டைகள் நடக்கின்றன. ஜோவின் உறவினரான தாமஸ் என்ற இளைஞர் பொறுப்பேற்றதும், முயல்களுக்கு எதிரான வேட்டை தீவிரமாகிறது.
அதே வேளை முயல்களுக்குப் பிரியமான பியா என்ற பெண்ணுடன் தாமஸ் நெருக்கம் வளர்க்க, அதற்கு பீட்டர் தலைமையில் முட்டுக்கட்டைகள் விழுகின்றன. தாமஸ்-பியா ஜோடியைப் பிரிக்க முயல்கள் முயல்வதும், தாமஸ் பதிலடி தருவதுமே ‘பீட்டர் ராபிட்’ கதையின் முதல் பாகம்.
இந்த முயல் சேட்டைகளின் அடுத்த முற்றுகையாக வெளியாகவிருக்கும் இரண்டாம் பாகத்தில் பியா-தாமஸ் ஜோடி திருமணம்வரை முன்னேற, அதைச் சகியாத பீட்டர், புதிய போர்க்கோலம் எடுக்கிறான். புதிய நண்பர் பரிவாரத்துடன், நீர், நிலம், வானம் என சகலத்திலும் சாகசங்கள் தொடர்கின்றன. முதல் பாகத்தைப் போன்றே 3டி, லைவ் ஆக்ஷன், அனிமேஷனில் நகைச்சுவை கலந்து மீண்டும் பீட்டர் ராபிட் புறப்பட்டுள்ளான்.
டாம்னால் க்ளீசன், ரோஸ் பெர்ன் உள்ளிட்டோர் நடிக்க, ஜேம்ஸ் கார்டன், மார்கட் ராபி, காலின் மூடி உள்ளிட்ட நடிகர்கள் முயல் கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் தந்துள்ளனர். இரண்டாம் பாகத்தையும் வில் க்ளூக் இயக்கி உள்ளார். இப்படம் ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.