

ரசிகா
‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ படங்களைத் தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கி முடித்திருக்கும் மூன்றாம் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. ரியோ ராஜ், ரம்யா நம்பீசனுடன் முன்னனி காமெடி நாயகர்கள் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த இயக்குநருடன் உரையாடியதிலிருந்து...
நீங்கள் அறிமுகப்படுத்திய அதர்வா, சமந்தா இருவரும் இன்று முன்னணி நட்சத்திரங்கள். அன்று அவர்களைத் தேர்வு செய்தபோது அவர்களிடம் நடிப்புக்கான ஆர்வமும் தாகமும் இருந்தனவா?
முதலில் அதர்வா பற்றிக் கூற விரும்புகிறேன். முரளி எனும் மக்கள் கொண்டாடிய ஒரு நடிகரின் மகனாக இல்லாமல் இருந்திருந்தாலும் அதர்வா நடிகராகியிருப்பார். அவரை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது அவ்வளவு திறமைகளை வளர்த்துக்கொண்டிருந்தார்.
அதனால், நான் அறிமுகப்படுத்தினேன் என்று ‘கிளைம்’ செய்துகொள்வது சரியாக இருக்காது. அவரை யார் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதர்வா தனக்கான இடத்தை அடைந்திருப்பார். இன்று அவரது கதைத் தேர்வுகளும் நாயக வேடங்களை அவர் கையாளும் ஸ்டைலும் அவர் தனக்கென்று தனித்து உருவாக்கிக் கொண்டவை.
சமந்தா நாயகியாக நடித்து ‘பாணா காத்தாடி’ படம்தான் முதலில் வெளியானது என்றாலும் ரவிவர்மனின் ‘மாஸ்கோவின் காவிரி’யில் அவர் அதற்கு முன்பே நடித்து முடித்துவிட்டார். இருந்தாலும் சமந்தா பற்றியும் கூற நிறைவே உண்டு. அப்போது சமந்தா, எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் அது எந்தப் படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க, சத்யம் திரையரங்கிலோ தேவி திரையரங்கிலோ தன் தோழிகளோடு நின்றுகொண்டிருப்பார்.
அவரது பேச்சில் சினிமாவைத் தவிர வேறு எதையுமே கேட்க முடியாது. படமாக்கப்போகிற வசனங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து முதல் நாள் இரவே எனது இணை இயக்குநரிடம் ஒப்பித்துவிட்டு மறுநாள் படப்பிடிப்புக்கு வருவார். அவ்வளவு ஈடுபாடு. அதர்வா, சமந்தா இருவரும் அடைந்திருக்கும் உயரம் பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
உங்களது முந்தைய படங்கள் நல்ல தலைப்புகளுக்காகவே கவனிக்கப்பட்டவை. ஆனால், தற்போது இயக்கியிருக்கும் படத்தின் தலைப்பில் கொஞ்சம் கொச்சையான ஆபாசம் தொனிக்கிறதே?
ஆபாசம் என்ற வார்த்தைக்கும் இந்தப் படத்துக்கும் கடுகளவுகூடத் தொடர்பில்லை. ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ என்பது வைகைப் புயல் வடிவேலுவின் புகழ்பெற்ற வசனம். வாழ்க்கையில் எந்தச் செயலாக இருந்தாலும் திட்டமிடல்தான் உங்களை வெல்ல வைக்கும் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்ல வரும் படம்.
சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்தபோது ‘விடியலை நோக்கி’ என்ற டிப்ளமா குறும்படத்தை எடுக்க எனக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுத்தார்கள். மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு ஒன்றரை நாளில் எடுத்து முடித்தேன். அந்தப் படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. திட்டமிடல் மூலம் எத்தனை பெரிய சிக்கலையும் கடந்து செல்ல முடியும் என்பதை சீரியஸாக இல்லாமல் அனுபவித்து சிரித்துக்கொண்டே உணர முடியும்.
‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் ‘ஜோக் சொன்னா ஆராயக் கூடாது, அனுபவிக்கணும்’ என்று கமல் சொல்லுவார். இதில் இரண்டு விஷயங்களுமே ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு ‘பாப்கார்ன்’ மீடியம். என்னை நம்பி வரும் ரசிகர்களை நேர்மையான வழியில் நான் மனம் விட்டுச் சிரிக்க வைக்க விரும்புகிறேன்.
ரியோ ராஜ் - ரம்யா நம்பீசன் என்ற ஜோடியே புதுமையாக இருக்கிறதே?
நான் தொலைக்காட்சியிலிருந்து திரைக்கு வந்தவன். தமிழில் முதல் ‘ரியாலிட்டி ஷோ’வான ‘நாளைய நட்சத்திரம்’ நிகழ்ச்சியை சன் டிவிக்காக நான் இயக்கினேன். தமிழில் முதல் காமெடி ஷோவான ‘கிங் குயின் ஜாக்’கை நான் இயக்கினேன்.
அந்த நிகழ்ச்சியில் அனிருத் கீபோர்டு வாசித்தார். சன் டிவி விருதுகள் தொடங்கி ஸ்ருதி ஹாசன் தோன்றிய நிகழ்ச்சிவரை இன்றும் தொலைக்காட்சிக்கும் எனக்குமான பந்தம் தொடர்கிறது. சிவகார்த்திகேயன் எனக்கு முன்பே நன்கு தெரிந்தவர்; நண்பர்.
அவர் ஒரு சக திறமையாளரைத் தொலைக்காட்சி உலகிலிருந்து கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் என்றால் அவருக்கு நிச்சயம் திறமை இருந்தால்தானே அது சாத்தியம். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் அறிமுகமான ரியோ ராஜ் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருந்தார். ரசிகர்களுக்கும் அவரைப் பிடித்துப்போய்விட்டது. இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற எனது முடிவுக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார்.
ரியோ ராஜ் சிறந்த உயரத்துக்குச் செல்வார். ரம்யா நம்பீசன் தனது கதாபாத்திரத்தை மட்டும் பார்க்காமல் மொத்தக் கதையும் எப்படி என்று பார்ப்பவர். இதில் மென்பொருள் நிறுவனத்தில் ஒரு உயர்நிலை அதிகாரியாக அட்டகாசமான ஒரு கதாபாத்திரத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்.
படத்தின் கதையைப் பற்றி?
எல்லாப் படங்களிலும் கதாநாயகனுக்கு ஒரு பிரச்சினை இருக்கும். அதில் பங்கெடுக்க நாயகனின் நண்பன் கூடப் போவார். ஆனால், இந்தப் படத்தில் நாயகனின் நண்பனுக்குப் பிரச்சினை வருகிறது, நாயகன் அவருக்காகச் செல்கிறார். பொதுவாக வடசென்னை பையன்கள், ஆண்கள் என்றாலே வெட்டுவது, குத்துவது, போதை மருந்து கடத்துவது என்று நமது மண்டையில் சினிமாக்கள் ஏற்றி வைத்த பொய்தான் அதிகம்.
சென்னையில் குற்றம் நிகழாத இடங்கள் என்று எவையாவது உள்ளனவா? வடசென்னையில் வெளித்தெரியாத அழகான முகத்தை இதில் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். அது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரியோ ராஜ், ரம்யா நம்பீசனுடன் பால சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த் தொடங்கி ஆடுகளம் நரேன் வரை 17 பிரபல நடிகர்கள் நடித்திருப்பது படத்துக்கு மிகப் பெரிய பலம்.