

யூகி சேது என்றால் நல்ல நடிகர், சாதனை படைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவையாளர் என்பது இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியும். ஆனால், யூகி சேதுவின் ஆளுமையும் அடையாளமும் இவற்றையும் தாண்டிய பன்முகத் தன்மையை அவருக்கு வழங்குகின்றன. சிறந்த இயக்குநர், வணிக சினிமா, உலக சினிமா என எந்த வகையானாலும் அதற்குப் பிடிமானம் மிக்க திரைக்கதை எழுதும் கலையில் விற்பன்னர்.
திரையுலகம் குறித்தும் திரைப்படங்கள் குறித்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பே அலசல் கட்டுரைகளும் அடர்த்தியான விமர்சனங்களும் எழுதியவர். திறமையான திரைப்பட விநியோகம், தீவிர சினிமா காதலனாக , சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்க உலகம் சுற்றுவது என ஊடகம் சார்ந்து தன்னுடைய எல்லைகளை விரித்துக்கொண்டே சென்றவர்.
அவருடைய அலுவலகத்துச் சென்றால் சுடச்சுட அவர் காபி பரிமாறும் செராமிக் கோப்பையில் அச்சாகியிருக்கும் ‘வொண்டர்வுமன்’ படத்தின் சூப்பர் ஹீரோயின் பேடி ஜென்கின்ஸ் நம் உதடுகளை நோக்கி வாளைச் சுழற்றும் படம், காபியை இன்னும் சூடாக்கும். கோப்பையை வைக்கும் டீபாயின் கண்ணாடியை ‘வெஸ்டர்ன்’ கவ் பாய் சிலை, தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதை ரசிக்கலாம். சுவரை அலங்கரித்திருக்கும் உலக சினிமா போஸ்டர்களில் ஒன்றைக் குறித்து விரல் நீட்டிக் கேட்டுவிட்டால் போதும், அந்தப் படத்தைப் பற்றி அரைமணி நேரம் சுவாரசியம் குறையாமல் யூகி சேது பேசித் தீர்ப்பார். சினிமா ரசனையின் மொத்த உருவமாக வலம் வரும் யூகி சேது, தரமணி அரசுத் திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பிரிவில் பயின்று தங்கப் பதக்கம் வென்ற மாணவர்.
அப்பாவும் நூலகமும்
பெங்களூருவில் பள்ளிக் கல்வி, அதன்பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பிகாம் முடித்து, 1982-ல் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த அவருடைய இயற்பெயர் சேதுராமன். கல்லூரியின் இறுதி ஆண்டில் இவர் இயக்கிய ‘ரெட்டாரிக் ஆஃப் தி கண்டியூனிட்டி’ (The Rhetoric of the Continuity) என்ற குறும்படத்தில், ஓர் இயக்குநராகத் தனது பெயரை யூகி சேது என்று இடம்பெறச் செய்தார். பெற்றோர் இட்ட பெயரில் பாதியையும், பேரரசன் கிருஷ்ணதேவராயரின் அவையில் புகழ்மிக்க அமைச்சர்களில் ஒருவராக விளங்கிய மதியூகியின் பெயரிலிருந்து பாதியையும் எடுத்து யூகி சேது என்று ஆக்கிக்கொண்டார். ரசனையுடன் சூட்டிக்கொண்ட பெயருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவே, எதைப் பேசினாலும் எழுதினாலும் அதில் தனது புத்திசாலித்தனமும் யாரும் மனம் கோணாத பகடியும் இருக்க வேண்டும்; அது பிளாக் காமெடியாக இருந்தால் இன்னும் சிறப்பு என்று தன் பேச்சு, எழுத்துப் பாணியை அமைத்துக்கொண்டார். அப்படி இவர் பங்கேற்று நடத்திய நையாண்டி தர்பார், யூகியுடன் யூகியுங்கள், சேதுவுடன் தர்பார், சேது இன் அண்ட் அவுட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மதியூகம் குறையாத அவரது டைமிங் நகைச்சுவையை ஆயிரம் எபிசோட்களுக்கும் அதிகமாக ரசித்துத் தீர்த்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இவர் திரையுலகில் நுழைய, வெற்றிகரமான தயாரிப்பு நிர்வாகியாக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, பைனான்சியராக விளங்கி வந்த இவருடைய அப்பா ஜி.கோபாலகிருஷ்ணனே முதல் காரணம். ஏவி.எம்மில் பணிபுரியத் தொடங்கி பின், எம்.ஜி.ஆர். சின்னப்பாதேவர் போன்ற ஜாம்பவான்கள் இந்திப் படவுலகுக்குத் தங்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்றபோது பாலகிருஷ்ணனே அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து கரம் கொடுத்தார். பாலிவுட்டில் ‘பாவ்ரி’ என்ற இந்திப் படத்தையும் தயாரித்தவர். தமிழில் வெளிவந்த ‘பத்ரகாளி’ படம்தான் அங்கே ‘பாவ்ரி’ ஆனது. பள்ளிப் பருவத்திலேயே திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றின் பால பாடத்தை அப்பாவிடம் பயின்றார் யூகி சேது. பின்னர் சினிமாவில் நுழைந்து இயக்குநராகி, நடிகராகவும் பெயர் பெற்றபிறகு படங்களை விநியோகம் செய்த காலத்தில், பிரபலத் தயாரிப்பாளர்கள் டி.ராமாராவ், தாசரி நாராயணராவ் ஆகியோரிடம் சினிமா வியாபாரத்தில் அவருடைய அனுபவங்களை அணுவணுவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அப்பாவின் வழியில் சினிமா வியாபாரத்தில் பின்னால் கால் பதித்தாலும் சினிமா உருவாக்கத்தின் மீதே சேதுவின் கண்கள் காதலுடன் நிலைகுத்தி நின்றன. இவருடைய சினிமா காதலுக்கு மற்றொரு காரணம், ‘கன்னிமாரா’, ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ நூலகங்கள்தாம். மகனின் ‘பிலிம் மேக்கிங்’ ஆர்வத்தைப் பார்த்த அப்பா, ஹாலிவுட் சினிமா, பிரெஞ்சு சினிமா, இத்தாலி சினிமா உலகிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான சினிமா பத்திரிகைகளை சந்தா கட்டி வரவழைத்துத் தந்தார். அவை, யூகிசேதுவின் திரைக்கதை அறிவையும் தொழில்நுட்ப அறிவையும் வேகமாக வளர்த்துவிடவே, அதன் தொடர்ச்சியாகவே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் யூகி சேது. அங்கே நாசர் உள்ளிட்ட நடிப்புப் பிரிவு மாணவர்களின் நட்பால் நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கியிருந்தார்.
வெற்றியின் ஃபார்முலா
திரைப்படக் கல்லூரியில் தாம் இயக்கிய 8 நிமிட டிப்ளமோ மௌனப் படத்துக்கு சத்யஜித் ரேயின் படம் ஒன்றில் இடம்பெற்ற பின்னணி இசையை அவரிடமே அனுமதி பெற்றுச் சேர்த்தார் யூகி சேது. 1984-ல் திரைப்படக் கல்லூரியை விட்டு வெளியே வந்த இவருடைய குறும்படம் 1985-ல் டெல்லியில் நடந்த இந்திய சர்வதேசப் படவிழாவில் பரிசை வென்றது. அதன்பின் அவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் ‘கவிதை பாட நேரமில்லை’ 1987-ல் வெளியாகி தோல்வி அடைந்தது.
“சினிமாவுக்கு என்று நியதியோ எல்லையோ கிடையாது என்று நம்புகிறவன் நான். அதனால்தான் ‘கவிதை பாட நேரமில்லை’ படத்தை ஒரு பரிசோதனை முயற்சியாக இயக்கினேன். கதை சொல்லலில் வித்தியாசத்தைப் புகுத்த ஒரு எல்லை உண்டு. ஆனால், அந்த எல்லையை நான் தாண்டிவிட்டேன். அதனால்தான் அது மக்களுக்குப் புரியாமல் போய்விட்டது. ஆனால் பிலிம்ஃபேர் பேன்ஸ் அசோசியேஷன் விருது கிடைத்தது. நாசருக்குச் சிறந்த புதுமுக நாயகனுக்கான விருதும் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது ரகுவரனுக்கும் கிடைத்தது” எனும் யூகி சேதுவை அதன்பின் மக்கள் மத்தியில் ஒரு நடிகராகப் பிரபலப்படுத்தியது ஒரு டெலிபிலிம்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக அவர், எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த ‘ஜனா’ பாராட்டுகளை அள்ளியது. அதன்பின் அவர் இயக்கிய இரண்டாவது படமான ‘மாதங்கள் 7’ தோல்வியைத் தழுவினாலும் ஒரு நடிகராக, திரைக்கதை ஆசிரியராக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அவர் ஒருபோதும் தோற்கவில்லை.
‘ரமணா’, ‘அன்பே சிவம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘ஹரிதாஸ்’, ‘தூங்காவனம்’, ‘ஒரு நாள் இரவில்’ எனப் பார்வையாளன் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரங்களுக்காக மட்டுமே காத்திருந்து நடித்து வருவதில் கறார் கலைஞன். வசன உச்சரிப்பில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுவதால் ‘சேது எக்ஸ்பிரஸ்’ என்று பெயரெடுத்திருப்பவர். தோல்விகளிலிருந்து அதிகமாகப் பாடம் கற்றுக்கொண்டதாலோ என்னவோ, ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை முன்னரே கணிக்கும் மாடல் ஒன்றை ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். “எனது ஆய்வு, ‘சக்ஸஸ் ஃபார்முலாவுக்கான தீர்வுகளை முன்வைப்பது, அதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனும் யூகி சேது 27 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தனது மூன்றாம் திரைப்படத்தை லண்டனைக் கதைக் களமாகக்கொண்டு தற்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்