

அன்றாடம் நம்மை ஆக்கிரமிக்கும் அரசியல், பொழுதுபோக்குத் தகவல்களின் ஊடே, வாழ்க்கைக்கு அவசியமான பலவற்றை இழப்பதுண்டு. அவற்றில் அடுத்த சில பத்தாண்டுகளில் நமது வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கும் சூழலியல் பாதிப்புகளில் பருவநிலை மாற்றம் முக்கியமானது. ‘பிபிசி’ தனது புகழ்பெற்ற சூழலியல் ஆவணப்படங்களின் வரிசையில் புதிதாக வெளியிட்டிருக்கும் ‘கிளைமேட் சேஞ்ச்: தி ஃபேக்ட்ஸ்’, மேற்படி பருவநிலைப் பாதிப்பை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும்.
இந்தியாவுக்கு வெளியே ‘பிபிசி ஒன்’ சேனலில் கடந்த ஆண்டு மத்தி யில் வெளியான இந்த ஆவணப்படம், தற்போது இந்தியாவில் ‘சோனி பிபிசி எர்த்’ கட்டண சேனலில் மார்ச் 7 அன்று ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து ‘சோனி லைவ்’ செயலி வாயிலாக இலவசமாகவும் அதைக் காணலாம்.
அண்மை ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் குறித்த உரையாடல்கள், அறிவியலாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், உலகத் தலைவர்கள், ஊடகங்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்த உரையாடல் சரியான புரிதலின் அடிப்படையில் உள்ளதா, செயல்வடிவுக்கு உகந்ததா என்பது கேள்விக்குரியது. பருவநிலைப் பாதிப்பை உள்வாங்கிக் கொள்வதன் அடிப்படையில் மட்டுமே, அதன் பாதிப்புகளிலிருந்து மீளவும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முன்னெடுப்பாக உதவுகிறது ‘கிளைமேட் சேஞ்ச்: தி ஃபேக்ட்ஸ்’ ஆவணப்படம்.
பருவநிலைச் சீர்கேட்டின் பாதிப்புகள் எப்பொழுதோ நேர இருப்பவை என்ற கணிப்புகளை முந்திக்கொண்டு, வாழும் தலைமுறையே அவற்றை உணரத் தொடங்கிவிட்டது, பெரும் புயல்கள், வெள்ளப்பெருக்கு, வெப்ப அலை வீச்சு, வறட்சி என இதுவரையில்லாத பாதிப்புகளுக்குச் சாட்சியாகி வருகிறோம். அடுத்த பத்தாண்டுகளில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழாவிட்டால், இந்த இயற்கையும் அதைச் சார்ந்திருக்கும் மனிதர்களை உள்ளடக்கிய உயிரினங்களும் திரும்பப் பெற முடியாத பாதிப்புகளில் வீழ்வோம். அவகாசம் குறைவு என்ற போதும் நம்பிக்கை மிச்சமுள்ளது. இப்படிப் பாதிப்புக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான பாதையில் ஆவணப்படம் பயணிக்கிறது.
அன்றாடம் நாம் ஒவ்வொருவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எரித்துவரும் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டப் புதைபடிவப் பொருட்கள், அதனால் வெளியாகும் பசுங்குடில் வாயுக்கள், அவை வளிமண்டலத்தில் சேகரமாவதன் வேகம், அவற்றால் பூமியின் சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி உயர்வதால் ஏற்படும் கேடுகள் எனத் தொடரும் நுணுக்கமான தகவல்கள் பார்வையாளரை அதிரவைக்கும். இந்தப் பாதிப்புகள் அன்றாட வாழ்வின் சாதாரண அசௌகரியங்களாக இனிக் கடந்துவிடப்போவதில்லை. மனித வாழ்வாதாரத்தின் அடிப்படையை அவை சீரழிப்பதன் வீரியத்தை, அன்டார்க்டிகாவில் உருகும் பனிப்பாளங்கள் வாயிலாகவும் விளக்க முயல்கிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் கடலின் மட்டம் 25 செ.மீ. அதிகரித்திருப்பதையும், அமெரிக்காவின் லூசியானா மாகாணம் அனுதினம் நீருக்குள் மூழ்கி வருவதையும் நவீன அறிவியல் மாதிரிகளின் வழியே அறியும்போது நம்பித்தான் ஆக வேண்டும். அப்போது பின்னணி விவரணையில் கடக்கும் ‘பருவநிலை அகதிகள்’ என்ற சொற்பிரயோகம் தொண்டை முள்ளாக உறுத்தும்.
பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை முன்வைத்து அரசியல், அறிவியல், சமூகப் பொருளாதாரச் சதிராடல்களுடன், சகல அக்கறைகளையும் விளக்குவதுடன் அவை நடைமுறையில் பிரதிபலிக்காததன் துரதிருஷ்டத்தையும் குறுக்கு வெட்டாக ஆராய்கிறார்கள். பருவ நிலைப் பாதிப்புகளைச் சீரமைக்கும் பரிவான பயணத்தை மறிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் குழப்படிகள், ட்ரம்ப் போன்ற தலைவர் களின் குளறுபடி அரசியல் எனப் பாசாங்கில்லாத பதிவுகளும் உண்டு.
இந்த நூற்றாண்டுக்குள் 3 முதல் 6 டிகிரி செல்சியஸுக்குப் புவியின் வெப்பநிலை அதிகரிக்க உள்ளது. இது சூழலை மீளவே முடியாத ‘டிப்பிங் பாயிண்ட்’ நிலைக்கு நெட்டித்தள்ளுவதுடன், அதன் வழியே காத்திருக்கும் பேரழிவை வரவேற் பதாகவும் அமையும். அப்படிக் கண்ணி வெடிகளாய் ஆர்டிக் பிராந்தியத்தில் தரைக்குள் ஆழ்ந்திருக்கும் மீத்தேன் குறித்தும் செய்முறையுடன் விளக்குகிறார்கள்.
இந்த ஆவணப் பதிவில் டேவிட் அட்டன்பரோ தனது வழக்கமான பங்களிப்பு விவரணைகளைச் சுருக்கிக்கொண்டு, பலதரப்பட்ட அறிவியலாளர்களின் குரல்களுக்கு இடம் தருகிறார். அந்த அறிவியலாளர் களில் சர்வதேச அளவில் செயல்படும் பல இந்திய முகங்களும் வருகின்றன. கூடவே உத்வேகமளிக்கும், இளம் காலநிலைப் போராளியான கிரெட்டா துன்பர்க்கின் கள அனுபவமும் ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது.