ஹாலிவுட் ஜன்னல்: புதிய சூப்பர் ஹீரோ உதயம்

ஹாலிவுட் ஜன்னல்: புதிய சூப்பர் ஹீரோ உதயம்
Updated on
1 min read

ஹாலிவுட்டின் மற்றுமொரு சூப்பர் ஹீரோ படமாக வெளியாக உள்ளது. ‘பிளட்ஷாட்’. அமெரிக்காவின் வேலியன்ட் காமிக்ஸ் படைப்புகளில் பிரபலமானது ‘பிளட்ஷாட்’. அதைத் தழுவி அதே பெயரிலான சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘பிளட்ஷாட்’ உருவாகி உள்ளது. வேலியன்ட் காமிக்ஸின் கதைகளைத் தழுவி, பிளட்ஷாட் உட்பட ஐந்து திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வெளியிட உள்ளார்கள்.

அமெரிக்கக் கடற்படை ராணுவ வீரனான ‘ரே காரிஸன்’ எதிர்பாராவிதமாகக் கொல்லப்படுகிறான். நானோ டெக்னாலஜி மூலம் விஞ்ஞானிகளின் பரிசோதனைக் கூடத்தில் அவனுக்கு மீண்டும் உயிரூட்டப்படுகிறது. ரத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியலால் உயிர்பிழைத்ததாலும், காயமடையாமல் சாகசங்கள் செய்வதாலும் அவன் ‘பிளட்ஷாட்’ என்ற புதிய சூப்பர் ஹீரோவாக உருவெடுக்கிறான். தன்னைப் போன்ற இதர சூப்பர் ஹீரோக்களுடன் பயிற்சி மேற்கொள்ளும் பிளட்ஷாட், ஒரு கொலை இயந்திரமாகத் தான் உருவாவதையும் அறிகிறான்.

அவனுக்கு உயிர் கொடுத்தவர்கள் அவனுடைய முன்வாழ்க்கை தொடர்பான நினைவுகளை அழிக்க முயல்கிறார்கள். அதையும் மீறிப் பழைய நினைவுகள் அவனுக்குள் எழுகின்றன. தன்னோடு தன் மனைவியும் கொல்லப்பட்டதன் பின்னணியை ஒருவழியாக அவன் நினைவுகூர்கிறான்.

தனது பழைய நினைவுகளோடும் புதிய பலத்தோடும் பழிவாங்கப் புறப்படுகிறான். இந்தப் புறப்பாட்டில் தன்னைப் படைத்தவர்களே எதிர்பாக்காத வித்தியாசமான சூப்பர் ஹீரோவாக அவன் உருவெடுக்கிறான். சக சூப்பர் ஹீரோக்களும் விஞ்ஞானிகளும் அவனை முடக்க முயல்கிறார்கள். இதில் பல ரகசியங்களும் வெளிப்பட, பிளட்ஷாட்டின் பழிவாங்கல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.

புதிய சூப்பர் ஹீரோ ‘பிளட்ஷாட்’டாக வின் டீசல் தோன்றுவதுடன் தயாரிப்பிலும் இணைந்துள்ளார். டாபி கெப்பெல், கய் பியர்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் டேவிட் எஸ்.எஃப்.வில்சன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தயாரிப்பாளர்களின் படைப்பு என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. சோனி பிக்சர்ஸ் வெளியிடும் ‘பிளட்ஷாட்’ திரைப்படம், மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in