

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, கதை நடப்பது நகரத்தில் என்று வைத்துக்கொண்டால் அந்த நகரம் பெரும்பாலும் சென்னையாகவே இருக்கும். “என் மகன் வேலை தேடிப் பட்டணத்துக்குச் சென்றிருக்கிறான்” என்று ஒரு ஏழைத் தாய் விட்டத்தைப் பார்த்துக் கவலைப்படும் காட்சிக்குப் பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையத்தை கேமரா கீழிருந்து பிரம்மாண்டமாகக் காட்டும் காட்சி கண்டிப்பாக வரும்.
அறுபதுகள், எழுபதுகளில் வெளியான திரைப்படங்கள் என்றால் வாகன நெரிசலற்ற அகலமான மவுண்ட் ரோடு இடம்பெறும். எண்பதுகளில் வெளியான பெரும்பாலான படங்களில் பி.ஏ., படித்த நாயகன் எந்த வேலையும் கிடைக்காமல் மெரினா கடற்கரையின் காந்தி சிலைக்குக் கீழ் நின்று நியாயம் கேட்டுப் பாட்டுப் பாடுவான்.
இப்படியாகச் சில டெம்ப்ளேட் ‘லொக்கேஷன்’கள் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், சென்னையில் நடக்கும் கதை என்று ஓரளவு நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்ட படங்கள் எண்ணிக்கையில் குறைவுதான். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் கதை நடக்கும் நகரிலேயே பீச் இருக்கும், மலைவாசஸ்தலம் இருக்கும். ரசிகர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வார்கள்.
எண்பதுகளின் இறுதியில் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது. குறிப்பாக கமல் ஹாஸனின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சத்யா’, மணிரத்னம் இயக்கிய ‘மவுன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, வஸந்தின் ‘கேளடி கண்மணி’, கதிர் இயக்கிய ‘இதயம்’, விக்ரமனின் ‘புதுவசந்தம்’ போன்ற திரைப்படங்களில் மாநகர சென்னையின் அடையாளம் வெளிப்பட்டிருந்தது. சென்னைச் சாலைகளின் வாகனப் பரபரப்பு, அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் போன்றவற்றை அவற்றின் இயல்புடன் இப்படங்கள் சித்தரித்தன.
நகர வாழ்வைச் சித்தரிப்பதில் ஓரளவு தேர்ந்தவர் என்று சொல்லத்தக்க இயக்குநரான மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து, மர நிழல்கள் அடர்ந்த நகரப் பகுதிகளின் அழகைக் காட்சிப்படுத்தினார். குறிப்பாக, ‘மிஸ்டர் சந்திரமவுலி’யை ஒரு கப் காபி சாப்பிட கார்த்திக் அழைக்கும் காட்சியைச் சொல்லலாம் (அநேகமாக வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் இக்காட்சி எடுக்கப்பட்டிருக்கலாம்.)
‘அஞ்சலி’ படத்தில் வரும் அபார்ட்மெண்ட் குடியிருப்பும், உயர் நடுத்தர மக்களின் வாழ்க்கையும் தமிழ்த் திரைப்படங்களில் அதுவரை காட்டப்படாத ஒன்று. அபார்ட்மெண்ட் காட்சிகள் ‘செட்’களில் எடுக்கப்பட்டவை என்றாலும் மது அம்பட்டின் ஒளிப்பதிவு அதை உயிர்ப்புடன் காட்டியது. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் மின்சார ரயில் காட்சிகளை அதன் அசல் ஒளியில் படமாக்கியிருப்பார் மணிரத்னம். ‘சத்யா’ படம் சென்னை தெருக்களில் உலா வரும் இளைஞர்களின் உலகைப் புதிய கோணத்தில் சித்தரித்தது.
90-களின் பிற்பாதியில் வஸந்த் இயக்கிய ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, அகத்தியனின் ‘காதல் கோட்டை’ போன்ற திரைப்படங்கள் சென்னையின் அசல் நகரத் தன்மையை ஓரளவுக்கு வெளிப்படுத்தின. ’காதல் கோட்டை’ படத்தில் மழைக் காலத்துச் சென்னையை அசலாகக் காட்டியிருப்பார் அகத்தியன். இக்காலகட்டத்தில் தமிழ்த் திரையிசையில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியிருந்தார் தேவா. சென்னையின் பிரத்யேக இசை வடிவமாகக் கருதப்படும் கானா பாடல்களின் வரவு, சென்னைகுறித்த சித்திரத்தைத் திரைப்படங்கள் ஓரளவு அசலாக வெளிப்படுத்த உதவியது. ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்த தொலைச்சேன்’, ‘விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி’, ‘குன்றத்துல கோயில கட்டி’ போன்ற பாடல்கள் வட சென்னையின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.
வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’, பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ போன்ற படங்கள் சென்னை குடிசைப் பகுதிகளின் வாழ்வைச் சித்தரித்தன. என்றாலும், படமாக்கப்பட்ட விதம், சூழல் ஆகியவற்றில் நம்பகத்தன்மை சற்று குறைவாகவே இருந்தது. அதேபோல், சென்னைத் தமிழ் பேசப்பட்ட படங்கள் பல வெளியாகியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ‘செட்’ களில் எடுக்கப்பட்டவை அல்லது பொருத்தமற்ற கதைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கதை நடக்கும் இடம் இதுதான் என்ற தெளிவுடன் படமெடுக்கத் தொடங்கிய இளைஞர் பட்டாளம்தான் சென்னையின் அசல் முகத்தைச் சித்தரிப்பதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
‘புதுப்பேட்டை’யில் சென்னை ரவுடி களின் நிழல் உலகத்தை செல்வராகவன் காட்டிய விதம் அசலுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது. குடிசைப் பகுதிகளின் இருள் வாழ்க்கை, ’ஏரியா’ பிரித்துக்கொள்வதில் ரவுடிகளுக்கு இடையிலான ‘புரிந்துணர்வு’, பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை இப்படம் துல்லியமாக முன்வைத்தது. வெற்றி மாறன், ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இவ்விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அப்படத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் கிஷோருக்கும் டேனியல் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் அசல் தன்மை, தமிழ்த் திரைமொழிக்கு மிகவும் புதியது. இந்தப் படத்தில் வெளிப்பட்ட சென்னை மொழியின் தன்மை பிரமிப்பூட்டக்கூடியது.
இதே காலகட்டத்தில் வெளியான, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’, சென்னை இளைஞர்களின் கிரிக்கெட் காதலை அற்புதமாகச் சித்தரித்தது. நண்பர்களுக்குள் நடக்கும் சிறு உரசல்கள், நண்பனின் தங்கையுடனான காதல், பிரிவு என்று பல்வேறு விஷயங்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்திய படம் இது. மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற திரைப்படங்கள் இரவு நேரச் சென்னையின் மர்மங்களை, அழகியலுடன் வெளிப்படுத்தின. சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ கற்பனை வளத்துடன் சித்தரித்தது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையை ரசனையுடன் சித்தரித்த ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தில் வட சென்னைப் பகுதி மக்கள் வாழ்வில் அரசியல் குழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்பைச் சிறப்பாகச் சித்தரித்தார். சந்தோஷ் நாராயணன் - கானா பாலாவின் பாடல்கள் சென்னையின் அசல் குரலாகவே ஒலித்தன.
இன்றைய தேதிக்குத் தமிழில் வெளியாகும் பல படங்கள் சென்னையின் நடுத்தரக் குடும்பங்கள், குடிசைப் பகுதி மக்கள், தாதாக்கள், காவல்துறையினரின் பணி வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை முடிந்தவரை நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் வந்த ‘நான் மகான் அல்ல’ படத்தில் சென்னையில் உள்ள சில அபாயகரமான போக்குகளும், திட்டமிட்டு ஆளைக் கொலை செய்வதில் உள்ள கச்சிதத்தன்மையும் பதைக்கவைக்கும் விதத்தில் பதிவாகியிருந்தன.
பல்வேறு வண்ணங்களாலான சென்னையின் அசல் உருவத்தை இளம் கரங்கள் சிரத்தையுடன் திரை ஓவியமாக வரைந்துகொண்டிருக்கின்றன.