

ரசிகா
இந்தி, வங்காளம், மராட்டி, ஒடியா, அசாமி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பத்து இந்திய மொழிகளில் இந்திய வெகுஜன சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும் வசூல் சந்தையைக் கொண்டிருப்பவை இந்திப் படங்களும் தெலுங்குப் படங்களும்தான். தற்போது பெரும்பாலான இந்திப் படங்கள் மற்ற 9 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.
அதேபோல், வெகுசில வங்காளப் படங்கள் மட்டுமே இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. தென்னகத்தில் சில தெலுங்குப் படங்கள் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘டப்’ செய்யப்படுவதுபோல சில தமிழ்ப் படங்களும் தெலுங்கில் ‘டப்’ செய்யப்படுகின்றன. கேரளத்தில் வெளியாகும் தமிழ்ப் படங்களுக்கு பெரும்பாலும் மொழிமாற்றம் தேவைப்படாமலேயே அங்கே நேரடியாக வெளியாவதுபோல மலையாளப் படங்களும் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியாகின்றன.
இந்தியாவின் இந்தப் பத்து மொழிகளுக்கும் இடையிலான இந்தப் படப் பரிமாற்றமும் வசூல் நிலவரமும் முதலுக்கு மோசமில்லாத நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன. ஆனால், ஹாலிவுட் படங்கள் இந்தியச் சந்தையில் நுழைந்து இங்குள்ள பத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகத் தொடங்கியபின், இந்தியப் பார்வையாளர்களிடமிருந்து அவை பல பில்லியன் டாலர்களை அள்ளிச் சென்றிருக்கின்றன. இதற்குக் கடந்த ஆண்டு (2019) இந்திய பாக்ஸ் ஆபீஸின் மொத்த வசூல் நிலவரம் ஒரு சின்ன உதாரணம்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் 2019 ஆம் ஆண்டு இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியான படங்களின் மொத்த வசூல் ரூபாய் 10,948 கோடி என்று குறிப்பிட்டிருக்கிறது. இது 2018 ஆம் ஆண்டைவிட 12 சதவீதம் அதிகம். 2018 ஆம் ஆண்டு வசூலான மொத்த தொகை ரூ.9,810 கோடி.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், எப்போதும் இல்லாத வகையில் ஹாலிவுட் நேரடி - மொழிமாற்றுப் படங்களின் வசூல் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
2019-ல் இந்தியப் படங்களை பின்னுக்குத் தள்ளிய ஹாலிவுட் படங்களில் மார்வெல் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’. இந்தியாவில் வசூலித்த தொகை ரூபாய். 425 கோடி. ஹாலிவுட் படங்களுடன் போட்டியிடும் வண்ணம் பணத்தை அள்ளிக்கொட்டித் தயாரிக்கப்பட்ட பிரபாஸின் ‘சாஹோ’ தோல்விப்படமாக வருணிக்கப்பட்டபோதும் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூபாய் 349 கோடியை ஈட்டியதாக சுட்டிக்காட்டியிருக்கிறது அந்த அறிக்கை.