கோடம்பாக்கம் சந்திப்பு: மிஷ்கினின் பாராட்டு!

கோடம்பாக்கம் சந்திப்பு: மிஷ்கினின் பாராட்டு!

Published on

மும்பையில் வசித்துவரும் பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ திரைப்படம் கடந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்றது. ‘தலைக்கு ஊத்தல்’ என்ற முறையில் உடல்நலம் குன்றிய முதியோரைக் குடும்பத்தினரே கொலைசெய்யும் இழிவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

இது தொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் வெற்றிமாறன், "இப்படம் நம்மைச் சுற்றியுள்ள உலகைக் குறித்த நமது அக்கறை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை ஆராய்கிறது. நமது அலட்சியமான இயல்புகளை அம்பலப்படுத்துகிறது. 'இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

‘பாரம்’ படம் விரைவில் வெளியாகவிருப்பதை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “‘சைக்கோ’ படம் வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதுவொரு படமா? ‘பாரம்’தான் படம்.” என்று பாராட்டியிருக்கிறார்.

பொன்விழா காணும் படம்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் நடிகர் திலகம் ரசிகர்கள் சங்கம் (NTFANS), 1970-ம் ஆண்டு வெளியாகி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்துள்ள ‘விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் பொன் விழாவை வரும் 16-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு சென்னை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மைய அரங்கில் நடத்துகிறது.

நண்பனுக்கு வில்லன்!

திரையுலகில் நெருக்கமான நண்பர்கள் என்று அறியப்பட்ட ஆர்யா-விஷால் இருவரும் ‘அவன் இவன்’ படத்தில் நண்பர்களாகவே இணைந்து நடித்தனர். அதன்பின்னர் மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இம்முறை விஷால் நாயகன் என்றால் ஆர்யா வில்லன். ‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில்தான் நண்பனுக்கு வில்லனாகிறார் ஆர்யா. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி இல்லை. விஷாலுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in