Published : 14 Feb 2020 11:57 am

Updated : 14 Feb 2020 12:10 pm

 

Published : 14 Feb 2020 11:57 AM
Last Updated : 14 Feb 2020 12:10 PM

ஆஸ்கர் 2020: இடைவெளிகளைத் தகர்க்க விரும்பும் ஆஸ்கர்!

oscar-2020
ரென்னி ஜெல்வேகர்

சு.சுபாஷ்

நடந்து முடிந்த 92-ம் ஆஸ்கர் மேடையில், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ‘ஜோக்கர்’ நாயகன் வாக்கின் ஃபீனிக்ஸ் வழங்கிய ஏற்புரை அதிகப்படி ஊடகக் கவனத்தைப் பெற்றது.

அதற்கு முன்பாக தென்கொரிய இயக்குநர் பொங் ஜுன் ஹோ, ஆஸ்கர் விருதை மற்றுமொரு ‘லோக்கல்’ அங்கீகாரம் என்று பகடி செய்த பேட்டி, அதிகம் செய்தியானது. ஆனால், அவரது ‘பாரசைட்’ திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியதில் பொங் மட்டுமன்றிப் பலரும் வாயடைத்துப் போனார்கள். வழக்கமான விழாவாக 2020-ன் ஆஸ்கர் மேடை அமைந்திருக்கவில்லை. அங்கே கலையுலகுக்கான புதிய செய்திகள் பலவும் அமைதியான தொனியில் பிரகடனமாயின.

கடந்த வருடத்தின் தொடர்ச்சியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் இல்லாதது, அயல்மொழித் திரைப்படங்களுக்கான விருது ‘சர்வதேச சிறந்த திரைப்படங்களுக்கான விரு’தாக மாறியது என ஆஸ்கர் மேடையின் புதிய மாற்றங்கள் கவனம் ஈர்த்தன. அவற்றில் சிறந்த படத்துக்கான விருது, சிறந்த அயல்மொழி திரைப்படத்துக்கே (சர்வதேச சிறந்த திரைப்படம்) சேர்ந்தது ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாகும். சிறந்த படம், சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் ஆகியவற்றுக்கு இடையே அகன்றிருந்த பள்ளம் இம்முறை தூர்க்கப்பட்டுள்ளது. இதன் நீட்சியாக வரும் ஆண்டுகளில் இரண்டையும் இணைத்து ஒரே விருது உருப்பெறும் வாய்ப்புகளும் பிரகாசமாகத் தெரிகின்றன.

‘பாரசைட்’ சொல்லும் பாடம்

தென்கொரியத் திரைப்படமான ‘பாரசைட்’, சிறந்த திரைப்படம், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என 4 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளி உள்ளது. ஆஸ்கரை நோக்கிய பாரசைட் படத்தின் ‘விருது விழா’ மே மாதம் தொடங்கியது. கான் விழாவின் மிக உயரிய விருதான தங்கப்பனை கிடைத்தது நல் தொடக்கமானது. தொடர்ந்து ஆஸ்திரேலியா, டொரன்டோ, லண்டன் என அமெரிக்காவில் நிலைகொண்டது.

அங்கேயும் எழுத்தாளர்கள், நடிகர்கள் எனப் பல கூட்டமைப்புகளின் விருதுகளை ‘பாரசைட்’ குவித்தது. கான் போன்ற சர்வதேச விருதுகளின் வாயிலாக ஆஸ்கர் மேடைக்கான வாசல் திறப்பது ஆரோக்கியமான மாற்றமாகும். இந்தியாவில் தேசிய விருது உட்படப் பல்வேறு உயரிய திரைப்பட அங்கீகாரங்களுக்கும், ஆஸ்கருக்கான பரிந்துரைக்கும் இடையே, தொடர்பின்றித் திசைக்கொன்றாகத் தேர்வாவதன் பெரும் முரணையும் ஆஸ்கர் நமக்கு உணர்த்துகிறது.

கணிப்புகளை நொறுக்கியபடி..

‘பாரசைட்’ திரைப்படத்துடன் தீர்க்கமாய் மோதிய திரைப்படங்கள் எந்த வகையிலும் சளைத்தவை அல்ல. சிறந்த திரைப்படத்துக்கான அங்கீகாரத்தை அவை நழுவவிட்டாலும், இதர விருதுகளை வசமாக்கி விமர்சகர்கள், ரசிகர்களை அவை ஆசுவாசமடையச் செய்தன. ‘ஒற்றை ஷாட்’ காட்சி அனுபவத்தில் முதல் உலகப் போரின் பின்னணியிலான ‘1917’, டிசி காமிக்ஸின் பேட்மேன் வில்லனான ‘ஜோக்கர்’, குவான்டின் டாரன்டினோ இயக்கிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, குழந்தைகளுக்காக காமெடி ஹிட்லருக்கு உயிர் தந்த ‘ஜோஜோ ராபிட்’ ஆகியவற்றுடன் நெட்ஃபிளிக்ஸ் இணையத் திரையின் ‘மேரேஜ் ஸ்டோரி’, ‘டு போப்ஸ்’, ‘தி ஐரிஷ்மேன்’ ஆகியவையும் கோதாவில் இருந்தன. ‘ஜோக்கர்’ , ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், ‘தி ஐரிஷ்மேன்’, ‘1917’ ஆகியவை பத்துக்கும் அதிகமான பிரிவுகளின் பரிந்துரைகளில் விருதுக்கான ஆருடங்களில் முந்தி நின்றன. ஆனால், கணிப்புகளை நொறுக்கியபடி, ஆஸ்கர் விருதுப் பட்டியல் வெளியானது.

பிறந்தநாள் பரிசு

நான்கு விருதுகளை அள்ளிய ‘பாரசைட்’டுக்கு அடுத்தபடியாக, ‘1917’ திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ் என மூன்று பிரிவுகளில் விருதுகளை அள்ளியது. ‘ஜோக்கர்’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை என இரண்டு பிரிவுகளில் விருதுபெற்றது. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த துணை நடிகர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.

ரசிக எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துவதாகச் சிறந்த நடிகருக்கான விருதை ‘ஜோக்கர்’ வாக்கின் ஃபீனிக்ஸ் வென்றிருக்கிறார். இது, ஜோக்கர் கதாபாத்திரத்துக்கான இரண்டாம் விருது!. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ‘டார்க் நைட்’ திரைப்படத்தின் ஜோக்கராகத் தோன்றிய ஹீத் லெட்ஜருக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அவரது மறைவுக்குப் பின்னர் சென்றுசேர்ந்தது.

‘மேரேஜ் ஸ்டோரி’ மூலம் சிறந்த நடிகை, ‘ஜோஜோ ராபிட்’ மூலம் சிறந்த துணை நடிகை என இரு பரிந்துரைகளிலும் இருந்த ஸ்கார்லெட் ஜோகன்சனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. சிறந்த நடிகை விருதை ‘ஜூடி’ திரைப்படத்துக்காக ரென்னி ஜெல்வேகரும், சிறந்த துணை நடிகை விருதை ‘மேரேஜ் ஸ்டோரி’யின் குறைவான காட்சிகளில் பிரமாதப்படுத்திய லாரா டெர்னும் வென்றார்கள். லாராவுக்கு அன்றைய தினம் பிறந்த நாள் என்பதால் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசுடன் மகிழ்ந்திருந்தார்.

ஆஸ்கர் 2020 விடுக்கும் சேதி

இருபத்துநான்கு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு பந்தியில் காத்திருந்த நெட்ஃபிளிக்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராபர்ட் டி நீரோ, அல்பசினோ, ஜோ பெஸ்கி என மூத்த நடிகர்கள் பங்கேற்பில், பெரும் பொருட்செலவில் தயாரான ‘தி ஐரிஷ்மேன்’ வெறும் கையுடன் திரும்பினார். இதனுடன் சிறந்த நடிகர், துணை நடிகர் உட்பட மூன்று பரிந்துரைகளுடன் போட்டியிலிருந்த ‘டு போப்ஸ்’ திரைப்படமும் ஏமாற்றத்தையே சந்தித்தது. ஆறு பரிந்துரைகளுடன் பங்கேற்ற ‘மேரேஜ் ஸ்டோரி’ சிறந்த துணை நடிகைக்கான விருது மட்டுமே பெற்றது.

ஒபாமா தம்பதி தயாரித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை பெற்றது. நெட்ஃபிளிக்ஸின் முதல் அனிமேஷன் திரைப்படமான ‘ஐ லாஸ்ட் மை பாடி’, ‘டாய் ஸ்டோரி-4’ படத்திடம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதைப் பறிகொடுத்தது.

சிறந்த திரைப்படத்துக்கான விருதை ஆங்கிலம் அல்லாத மொழியிலான ஒரு திரைப்படம் முதல்முறையாக வென்றிருப்பதும் பல சேதிகளை உலகுக்குத் தெரிவித்திருக்கிறது. கான், கோல்டன் குளோப் விருதுகள், ஆஸ்கர் தகுதிக்கான உரைகற்கள் என்பது, அந்த அங்கீகாரங்கள் வரை சாதித்த கலைஞர்களுக்கும் படைப்புகளுக்கும் பெரும் நம்பிக்கை தருபவை. ஆஸ்கர் கனவுடன் திரைத்துறையில் புழங்கும் சர்வதேசக் கலைஞர்கள் ஆஸ்கர் 2020-ல் உத்வேகம் பெறலாம்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com


இடைவெளிகள்ஆஸ்கர்ஆஸ்கர் 2020Oscar 2020Oscarபாரசைட்Parasiteசிறந்த திரைப்படம்சிறந்த சர்வதேசத் திரைப்படம்சிறந்த இயக்குநர்சிறந்த திரைக்கதைபிறந்தநாள் பரிசுஇயக்குநர் பொங் ஜுன் ஹோ

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author