Published : 14 Feb 2020 11:48 AM
Last Updated : 14 Feb 2020 11:48 AM

ஆஸ்கர் 2020: ஒரு சிறுவன் வைத்த கூழாங்கல்!

டோட்டோ

ஆறு ஆண்டுகள் நடந்த மனிதகுலப் பேரழிவாகப் பார்க்கப்படுவது இரண்டாம் உலகப்போர். நிஜத்தில் 1945-ல் முடிவுக்கு வந்தது. ஆனால், படைப்புலகில் அந்தப் போர் பற்றிய நினைவுகளுக்கும் புனைவுகளுக்கும் முடிவே இல்லை. இந்த வருட ஆஸ்கர் பந்தயத்தில் ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு, சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதைத் தட்டிச் சென்ற ‘ஜோஜோ ராபிட்’ திரைப்படம், இரண்டாம் உலகப்போர் பின்னணியில் உருவான அற்புதப் புனைவு. ‘கேஜிங் ஸ்கைஸ்’ என்னும் நாவலின் அடிப்படையில், டைக்கா வைடிட்டியின் நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுறும் தருணம் அது. ஜெர்மனியில் தந்தையில்லாமல் தாயுடன் தனியே வாழ்ந்து வருகிறான் 10 வயது ஜோஜோ. அடால்ப் ஹிட்லரின் தனிப்படைப் பிரிவில் சேர வேண்டும் என்பது அவனது கனவு. நாஜிக்களின் கருத்தாக்கங்களால் கவரப்பட்டவன்.

அச்சிறுவனின் வாழ்வில் , மனிதர்கள் அனைவரும் சமம் எனக் கருதும் அவனுடைய தாய் ரோசி, இறந்துபோன சகோதரியின் நினைவு, அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே ஒளித்துவைக்கப்பட்டு வளரும் யூதச் சிறுமி எல்சா, ஆஸ்திரியக் கவிஞர் ரில்காவின் கவிதைகள், நெருங்கிய நண்பன் யோர்க்கி ஆகியோருடன் அவனது கற்பனை நண்பர் அடால்ப் ஹிட்லரும் (ஆமாம்!) பயணிக்கிறார். அந்தப் பெரும் போர், அச்சிறுவனின் வாழ்வில் உருவாக்கும் வலிகளும் திறப்புகளும் மாற்றங்களும்தாம் படத்தின் கதை.

தன் ஆத்ம நண்பன் யோர்க்கி, தாய் ரோஸி, யூதச் சிறுமி எல்சா ஆகியோருடன் சிறுவன் ஜோஜோ நிகழ்த்தும் உரையாடல்களின் வழியே, போர் குறித்த எல்லாக் கற்பிதங்களும் அர்த்த பூர்வமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. நாஜி சிறுவர் பயிற்சி முகாமில் இந்த உரையாடல் நகைச்சுவை வண்ணம் பூசிக்கொள்கிறது.

கூடுதலாக, கற்பனைக் கதாபாத்திரமாக ஜோஜோவின் கண்ணுக்கு மட்டுமே வலம் வரும் ஹிட்லரின் பார்வைகள், கொள்கைகள், நம்பிக்கைகள் (ஹிட்லராக நடித்தவர் இப்படத்தின் இயக்குநர்) என எதையும் இந்தக் கதை விட்டு வைக்கவில்லை. வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும் போரின் மூலாதாரமாக இருக்கும் தேவையற்ற மனித வெறுப்பு குறித்த அசலான சித்திரத்தை, தீவிரமான போர்ப் படங்களுக்குச் சற்றும் சளைக்காமல் விறுவிறுப்பாகப் பதிவிடுகிறது.

ஒரு மகா யுத்தத்தின் அத்தனை அவலங்களையும் அதன் தீவிரம் பாதிக்காமல் அதே வேளையில் ஒரு சிறுவனின் பார்வையில் எளிமையாகவும் புரியும்படியாகவும் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் டைக்கா. நமது திரையனுபவம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இது பார்த்துக்கொள்கிறது. எதிர்பாராத சம்பவங்கள், சிறு சஸ்பென்ஸ், மழுங்கடிக்கப்படாத போர்க் கொடுமைகள் எனச் சித்தரித்த விதம் பாராட்டுக்குரியது.

சிறுவன் ஜோஜோ, யோர்க்கி, தாய் ரோசி, கேப்டன் மார்ட்டின், ஹிட்லரின் கதாபாத்திரங்களாக வரும் அனைவரது கச்சிதமான நடிப்பில், போரையும், போர்க்கால ஜெர்மனியையும் கண் முன்னே நடமாட விட்ட நம்பத்தகுந்த தயாரிப்பு வடிவமைப்பு வியக்க வைக்கிறது.

ஒரு காட்சியில், தூரத்தில் நிகழும் வெடிகுண்டுத் தாக்குதல் காட்சிகளைப் பார்த்தபடி ஜோஜோ , எல்சாவிடம் “இது எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் போது என்ன செய்ய உத்தேசம்?” என்று கேட்பான். அதற்கு ஒற்றை வார்த்தையில் எல்சா சொல்லும் பதில் “நடனம்”. இப்படி யூதர்களின் சின்ன அடையாளங்களையும் குணநலன்களையும் படம் நெடுகவே தொட்டுக்காட்டியபடி செல்கிறார் இயக்குநர்.

‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படத்தின் இறுதிக்காட்சியில் ஷிண்ட்லரின் கல்லறையில் போரில் தப்பித் பிழைத்த யூதர்கள் அவர்கள் மரபுப்படி ஒவ்வொருவரும் ஒரு கூழாங்கல்லை வைத்துவிட்டு நகர்வார்கள். அப்படி ஒரு பதின் வயதுச் சிறுவனின் பார்வையில் வைக்கப்பட்ட கூழாங்கல்தான் இந்தத் திரைப்படம்.

தொடர்புக்கு: tottokv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x