

செல்லப்பா
காதலர்களுக்குக் காதல் தினமெனத் தனியாக ஒன்று உண்டா? அப்படிக் காதல் உன்மத்த பிரவாகத் தருணத்தில் கூடிக்கிடந்த அந்த ஜோடியின் இதழ்களைப் பிரித்தன கலையழகின் உச்சம் கண்ட பாரீஸ் நகரத்தில் ஊடுருவிய நாஜிப் படைகள். உலகம் போரின் பிடியில் சிக்குண்டிருந்த பொழுதில் அந்த ஜோடி காதலுணர்வில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
தன் கணவனைப் பிரிந்த துயரத்தில் தவித்துக்கொண்டிருந்த இல்சாவையும் போலீஸாரின் தேடுதல் பட்டியலில் இருக்கும் ரிக்கையும் இணைக்க காலம் ஏன் அப்படியொரு நேரத்தைத் தேர்ந்தெடுத்ததோ? எதுவும் புரியாமல் இமை மூட மறந்து நம்மைப் போலவே எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது காலம்.
பாரீஸிலிருந்து மறுநாள் புறப்படும் ரயிலில் அங்கிருந்து அந்த ஜோடி தப்பித்துப்போக முடிவுசெய்திருந்தது. சரியான நேரத்தில் ரயில் புறப்பட்டது. ரிக் வந்து சேர்ந்துவிட்டான். வருவதாகச் சொல்லிப் பிரிந்த இல்சா வந்துசேரவில்லை. அதற்குப் பதில் அவளது வர இயலாமையைத் தெரிவித்த கடிதமே அவனது கையில் கிடைத்தது. மழைநீரில் அழிந்த அதன் ஒவ்வொரு எழுத்தும் அவனது மனத்தில் கல்வெட்டாகப் பதிந்து சதா வேதனையைத் தந்துகொண்டிருந்தது.
மொராக்கோ நாட்டின் துறைமுக நகரம் காசாபிளாங்கா. அங்கே ‘ரிக் கஃபே அமெரிக்கன்’ என்னும் பெயரில் இரவு விடுதி ஒன்றை நடத்திவருகிறான் ரிக். அமெரிக்காவுக்கோ ஜெர்மன் ஆதிக்கம் செலுத்தாத ஐரோப்பாவுக்கோ செல்ல விரும்பும் மனிதர்கள் அந்த ஊரில் விசாவுக்காகக் காத்திருந்தார்கள். அந்த ஊரின் பெருந்துயரம் விசாவுக்கான காத்திருப்புதான். வருடக்கணக்காகக் காத்திருப்போரும் உண்டு. ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட, அவர்களது பெயரிடப்படாத இரண்டு விசாக்கள் ரிக்கை வந்து சேர்கின்றன.
இல்சாவைப் பிரிந்து அங்கே வந்து சேர்ந்த ரிக், வாழ்வில் மீண்டும் அவளைப் பார்ப்போமென எண்ணவே இல்லை. எந்தப் பெண்ணின் மீதும் ஈர்ப்பின்றித் தனது வேலைகளிலேயே மூழ்கிக்கிடந்த ரிக், எந்த செண்டிமெண்டும் இல்லாத ஆள் எனப் பெயரெடுத்தவன்.
அங்குள்ள அரசியல் விஷயங்களில்கூட அவன் தலையிடுவதில்லை. அவன் தன் தொழிலுண்டு, தானுண்டு என்று வாழ்ந்து வருகிறான். அந்தச் சூழலில் அங்கே தன் கணவனுடன் வருகிறாள் இல்சா. வந்தவள் ரிக்கை அடையாளம் கண்டுகொண்டாள். மட்டுமல்ல; அவனது விடுதியில் பியானோ இசைக்கும் சாமையும். பாரிஸில் சாம் இசைத்த ‘அஸ் டைம் கோஸ் பை’ பாடலை இசைக்க வைக்கிறாள்.
அந்த இரவில் ரிக்கின் துயில் தொலைந்துபோகிறது. சாமைச் செல்லச் சொல்லியும் கேட்காமல் அவனுடன் இருக்கிறான் சாம். மீண்டும் அவனை அதே பாடலை இசைக்கச் சொல்கிறான். ‘அஸ் டைம் கோஸ் பை’ பாடல் அவனுள் துயரத் தந்திகளை மீட்டுகிறது. இந்த நேரத்தில் அவன் பிறந்த அமெரிக்காவில் எல்லோரும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால், தன் மனத்தின் ஊடே இல்சா அங்குமிங்கும் நடைபோட்டுக்கொண்டிருக்கும் துயரத்தைத் துடைக்க வழியின்றிப் புலம்புகிறான் ரிக்.
அவள் வருவாள் என நம்பி அந்த இரவைக் குடியிலும் புகையிலும் கரைக்க முயல்கிறான். அதே போல் இல்சா, அந்த இரவில் குளிர்நிலவென வருகிறாள். தன்னிலை விளக்கம் தர முயல்கிறாள். ஆண்டுக்கணக்கில் உள்ளத்து நெருப்பில் வெந்துகிடந்த சொற்களை அவளெதிரே சிதறுகிறான். பாரிஸில் முகிழ்த்த இளங்காதல் காசாபிளாங்காவில் கொடுங்காதலாக மாறியது கண்டு வெருண்டு விலகுகிறாள் இல்சா. ரிக்கின் துயரம் தொடர்கிறது.
நாஜிகளின் சித்திரவதை முகாமில் இருந்த தன் கணவன் விக்டர் மீது உயிரையே வைத்திருக்கிறாள் இல்சா. விக்டரும் அப்படியே. இறந்துவிட்டான் என்று கருதப்பட்ட விக்டர், ரிக்குடன் புறப்பட்டுச் செல்ல, இல்சா முடிவுசெய்திருந்த நாளில் அவளது கண்ணெதிரே வராமல் இருந்திருந்தால் ரிக் மீது பாரிஸில் மலர்ந்த தன் காதலை, அதன் பின்னரான வாழ்நாள் முழுமைக்கும் கொண்டாடித் தீர்த்திருப்பாள். ஆனால், காலம் இரக்கமற்ற நாஜித் தளபதி போல் தான் நினைப்பது நிறைவேற வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறது.
இல்சாவும் விக்டரும் தப்பிச் செல்லத் தேவைப்படும் விசாக்கள் ரிக்கிடம் இருக்கின்றன. அவற்றை விக்டரால் பெற இயலவில்லை. கணவன் உயிரைக் காப்பாற்றும் விசாக்களுக்காகக் காதலனிடம் இல்சா வருகிறாள். ரிக் மனம் இளகினானா, விலகினானா என்பதற்கு விடை சொல்லும் காசாபிளாங்கா. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உங்களுக்கு தரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் நினைவுக்கு வரலாம்.
உலகக் காதல் படங்களின் சிகரத்தில் வைத்துப் போற்றப்படும் படம் காசாபிளாங்கா. 1943 ஜனவரி 23 அன்று வெளியான அதன் திரைக்கதை, இசை, வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்துமே ரசிக்கத் தக்கவை. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதைப் பெற்ற இந்தப் படத்தை இயக்கியவர் மைக்கேல் குர்டிஸ். வழக்கமான காதல் படம் என்றபோதும், இப்போதும் வழக்கத்துக்கு மாறான ஈர்ப்பு கொண்ட படம் அது.
தொடர்புக்கு: chellappa.n@hindutamil.co.in