

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘96’. இன்று வெளியாகும் இதன் தெலுங்கு மறு ஆக்கத்தையும் பிரேம் குமாரே இயக்கியிருக்கிறார்.
விஜய்சேதுபதி, த்ரிஷா கதாபாத்திரங்களில் சர்வானந்த், சமந்தா நடித்திருக்கும் படத்துக்கு ‘ஜானு’ என்ற கதாநாயகியின் கதாபாத்திரப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே பிரபாஸ் நடித்துவரும் தெலுங்குப் படத்துக்கு ‘ஜான்’ எனத் தலைப்பு வைக்கப் பரிசீலனையில் இருந்ததால், தலைப்பின் பெயரில் குழப்பம் உண்டானது. இந்நிலையில் ‘ஜானு’ என்ற தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரபாஸ் கூறிவிட்டதால், அதையே படத்துக்கான விளம்பரமாக மாற்றிவிட்டது படக்குழு.
இரண்டாம் முறைக் கூட்டணி
2013-ல் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவான ‘ராஞ்சனா’ என்ற இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடி வைத்தார் தனுஷ். இதன் பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ‘ஷமிதாப்’ என்ற தனது இரண்டாம் இந்திப் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் பாலிவுட் பக்கம் தலைகாட்டாத தனுஷ், மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகிய இருவருடனும் இணைந்து தனது மூன்றாம் இந்திப் படத்தில் நடிக்கவிருப்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.
'அத்ரங்கி ரே' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சாரா அலி கான் தனுஷின் ஜோடியாக நடிக்கிறார். அக்ஷய் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், “அக்ஷய் போன்ற தன்னம்பிக்கை கொண்ட நடிகர்களால்தான் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்.
அவர் எப்போதுமே தனது எல்லைகளை விரிவாக்கிக்கொண்டு, சவால்களுக்குத் தயாராக இருக்கிறார். தனுஷ் - சாரா ஜோடி சுவாரசியமாக இருக்கும். இந்த இருவரும் திரையில் கொண்டு வரும் புத்துணர்ச்சியை ரசிகர்கள் விரும்புவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.