

ஜெயந்தன்
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர் அஷ்வத் மாரிமுத்து. அவரது இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய்சேதுபதி நடித்து காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது ‘ஓ மை கடவுளே’ திரைப்படம். ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து...
இது திருமணம், குடும்ப அமைப்புக்கு எதிரான படமா?
நிச்சயமாக இல்லை. திருமணம் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் நம்புகிறோம். ஆனால், விவாகரத்து வழக்குகள் அதிகமாக இருக்கின்றன. ஒருவேளை நமது திருமணக் கணக்கைக் கடவுள் தப்பாக எழுதிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றும் இல்லையா? அதிலிருந்து பிறந்ததுதான் இந்தக் கதைக்கான ஐடியா. 2013-ல் இந்த ஐடியா வந்ததும் விவாகரத்து வழக்குகள் என்ன காரணத்துக்காகத் தொடுக்கப்படுகின்றன என்ற ஆய்வில் இறங்கினேன்.
பல விநோதமான காரணங்கள் எனக்குத் தெரியவந்தன. அதேபோல விவாகரத்துக்காக விண்ணப்பிப்பவர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. இடையில் கேரளா முதலிடத்தைப் பிடித்தாலும் தற்போது தமிழ்நாடு இந்த விஷயத்தில் தனது இடத்தை மீண்டும் எடுத்துக் கொண்டுவிட்டது. அப்படியானால் இந்தக் கதையை நாம் கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
இந்தக் கதைக்குள் அசோக் செல்வன் எப்படி வந்தார்?
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில்தான் எனக்கு அசோக் செல்வன் பழக்கமானார். அதன்பிறகு ‘தெகிடி’ படத்தில் நடித்து ரசிகர்களைச் சென்றடைந்துவிட்டார். அவரை வைத்து அந்த நிகழ்ச்சிக்காக நான் இயக்கிய குறும்படத்துக்காகச் சிறந்த நடிகர், சிறந்த குறும்படம் என்கிற அங்கீகாரம் கிடைத்தது. அப்போது எங்களுக்குள் உருவான நட்புதான் இந்த அளவுக்கு அழைத்து வந்திருக்கிறது.
விஜய்சேதுபதி கோட் சூட் அணிந்த கடவுளாக வருகிறார் என்று செய்தி வெளியானதே?
அது புதிராக இருக்கட்டும் என்று நினைத்தோம். ஆனால், எப்படியோ செய்தி வெளியாகிவிட்டது. அதனால் ட்ரைலரிலும் அந்தப் புதிரை உடைத்து கதையின் கருவை வெளிப்படுத்திக் காட்டிவிட்டோம். இப்படிக் கதையின் கருவை வெளிப்படையாகத் தெரிவிப்பது ஹாலிவுட் பாணி.
இந்தக் கதைக்கருவை எப்படித் திரைக்கதை, காட்சிகள் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதற்குத்தான் ரசிகர்கள் மார்க் போட்டு ஆதரவு தரவேண்டும். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு காதல் இழப்பு கண்டிப்பாக இருந்திருக்கும். நாம் கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைத்திருந்தவரை வாழ்க்கை நம்மைவிட்டுத் தூரமாகப் பிரித்துக் கொண்டுபோயிருக்கும்.
அப்படிப்பட்ட நிலையில் இழந்த வாழ்க்கையை வாழ கடவுள் மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்தால், அதை நாம் எப்படிப் பயன்படுத்துவோம் என்பதில்தான் இந்தக் கதையின் சுவாரசியமே அடங்கியிருக்கிறது. விஜய்சேதுபதி அண்ணாவைத் தவிர இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கவே முடியாது.
விஜய்சேதுபதி அண்ணா அளவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டிய இன்னொரு பிரபலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அக்சஸ் பிலிம் ஃபேக்டரியின் ஜி.டில்லிபாபு. லவ், ஆக்ஷன், க்ரைம் த்ரில்லர், காமெடி என எந்த வகை சினிமாவாக இருந்தாலும் கதையில் புதுமை இருந்தால்தான் தயாரிக்கவே முன்வருவார். அவரிடம் கதை சொல்லச் சென்றபோது 20 நிமிடம் தாமதமாகச் சென்றுவிட்டேன்.
அவர் நான் வந்ததும், ‘நீ எவ்வளவு நல்ல கதை வைத்திருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; லேட்டாக வருபவர்கள் எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டுச் செல்வதற்காகக் காத்திருந்திருக்கிறார். நான் போனதுமே அவரிடம் சாரி கேட்டால், நமது கதை முடிந்துவிடும் என்று உள்மனம் சொன்னதில் நேராகக் கதையை விவரிக்கத் தொடங்கிவிட்டேன். ஐந்தாம் நிமிடத்திலிருந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டார். கதையை முழுவதும் சொல்லி முடித்ததும் அவரிடம் தாமதமாக வந்ததற்கு சாரி கேட்டுவிட்டேன்.
‘இறுதிச் சுற்று’ படத்துக்குப் பின் ரித்திகாவுக்கு அமைந்த இரண்டு படங்களிலும் பொருத்தமான கதாபாத்திரங்கள் அமையவில்லையே?
அவரைப் பார்த்துக் கதை சொல்ல மும்பை சென்றபோது அவரும் இதையேதான் சொன்னார். இந்தப் படத்தில் அவரது முரட்டுத்தனமான அன்பு கலந்த கதாபாத்திரத்தைச் சொன்னதும் ‘இதுதான் எனக்கான ஸ்கிரீன் ஸ்பேன்’ என்று ஒப்புக்கொண்டார். அதேபோல நான் மிகவும் மதிக்கும் இயக்குநர் கௌதம் மேனன் இதில் இயக்குநர் கௌதம்மேனனாகவே வருகிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்திருக்கிறார்.