கோடம்பாக்கம் சந்திப்பு: மீண்டும் ஸ்ரீதிவ்யா

கோடம்பாக்கம் சந்திப்பு: மீண்டும் ஸ்ரீதிவ்யா
Updated on
1 min read

மீண்டும் ஸ்ரீதிவ்யா

முன்னணிக் கதாநாயகிகளின் வரிசையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதிவ்யா, ‘பென்சில்’ படத்துக்குப்பின் முகம் காட்டவில்லை. தெலுங்குப் படங்களிலும் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவர் கடந்த 2018-ல் அதர்வா ஜோடியாக நடித்த ‘ஒத்தைக்கு ஒத்த’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

கலைக் கல்லூரி ஒன்றில் நடக்கும் கதையைக் கொண்ட இந்தப் படத்தில் அதர்வாவும் திவ்யாவும் கல்லூரி மாணவர்களாக வருகிறார்கள். பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னீஷ் இயக்கியிருக்கும் படம் இது.

இந்தியில் கால்பதிக்கும் ட்ரீம் வாரியர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களைத் தந்துவரும் பட நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தலைமையில் இயங்கிவரும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற பிளாக் பஸ்டர் படத்தைக் கொடுத்தது.

அந்தப் படத்தின் இமாலய வெற்றியை கவனித்த ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், அதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் மறு ஆக்கம் செய்ய இருப்பதை இருநிறுவனங்களும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன.

தமிழ், தெலுங்கில் அழுந்தக் கால் பதித்திருக்கும் ட்ரீம் வாரியர், இந்தியில் முதன் முதலாக நுழைவது பற்றி நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டபோது, “கதாநாயகியோ, பாடல்களோ இல்லாமல் கடந்த தீபாவளித் திருநாளில் வெளியாகி அனைத்து வயதுடைய ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியது. தற்போது இந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் மறுஆக்கம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கைதி வட இந்திய ரசிகர்களையும் கவர்வான்” என்றார்.

ஹாலிவுட்டில் பார்த்திபன்

ஒத்த செருப்பு ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படாதது குறித்து கோபம் காட்டிய பார்த்திபன், தற்போது அதே படம் தனக்கு நேரடி ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறது என்பதை கடிதம் மூலம் ஊடகங்களுக்குப் பகிர்ந்திருக்கிறார். 'ஒத்த செருப்பு படம் பார்த்த ஹாலிவுட் இயக்குநரின் அழைப்பின் பேரில் மார்ச் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் செல்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in