Published : 31 Jan 2020 01:21 PM
Last Updated : 31 Jan 2020 01:21 PM

அந்நிய மண்ணில் அன்புக்கு இடமில்லை! - பாரதிராஜா நேர்காணல்

ஆர்.சி.ஜெயந்தன்

சினிமாவை நோக்கி வருபவர்களுக்கு இன்னமும் ஊக்கமும் தாக்கமும் தந்துகொண்டிருப்பவை இவரது படைப்புகள். இன்றைய இயக்குநர்கள் தரமான படங்களைத் தரும்போது, தோளில் தட்டிக்கொடுத்துப் பாராட்டும் நிபந்தனையற்ற ஒரு தந்தையின் அன்பு இவருடையது.

அதே இளைய தலைமுறையுடன் திரைக் களமாடுவதில் ஓய்வறியாப் படைப்பாளி. தொடர்ச்சியான திரை நடிப்பு, கட்சி சாராத மக்களுக்கான அரசியலில் தொடர்ச்சியான குரல்கொடுப்பு என ஒரு துடிப்பான இளைஞராக வலம் வரும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தற்போது ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறார்.. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற தலைப்பி லிருந்தே இதை மீண்டும் ‘ஒரு முதல் மரியாதை’ என்று எடுத்துக்கொள்ளலாமா?

'முதல் மரியாதை' படத்தில் நான் சொன்னது காதலை அல்ல. அதையும் தாண்டியது. பேசிப் பழகி, ஈருடல் ஓருயிர் ஆவதுதான் காதல். அது ‘முதல் மரியாதை’ படத்தில் கிடையாது. காதலுக்கு எதிர்பார்ப்பு உண்டு. இருவரும் கைகோத்து நடக்க மாட்டோமா, கட்டிப் பிடிக்க மாட்டோமா என்று நினைப்பது காதல். அதையும் மீறி ஒன்று உண்டு.

தாய், தந்தை, சகோதரி பாசத்தை எப்படியும் விவரிக்க முடியாது. இந்த மாதிரியான அன்பை எல்லாம் தாண்டி ஒன்று உள்ளது. அதற்கு இன்னும் சரியான பெயர் வைக்கவில்லை. அது தான் ‘முதல் மரியாதை'. ஆனால் ‘மீண்டும் ஒரு மரியாதை' படத்தில் வேறு விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற மகன் அங்கேயே குடியுரிமை பெற்று வாழத் தொடங்குகிறான்.

அங்கேயே அவனது குடும்பமும் தழைக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன் மகன் அழைத்தான் என்ற காரணத்துக்காகச் செல்லும் ஓர் எழுத்தாளர், வாசனை அறியாத அந்த மண்ணில் அநாதை ஆக்கப்படுகிறார். அப்போது தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஓர் இளம் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. யாருக்கு யார் வழி காட்டினார்கள், அவர்கள் சென்ற வழிதான் என்ன, அதற்குப் பிறகு என்னவாகிறது என்பதுதான் படம். தற்கொலைக்கு எதிரான படம். இந்த இருவருடைய வாழ்க்கையும் ஓர் அற்புதமான பயணம்.

‘கண்களால் கைது செய்’ தவிர உங்களது படங்களின் கதை, தமிழக நிலப்பரப்பை, தாண்டியதில்லை. ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்துக்கான கதையும் களமும் உருவான பின்னணியைக் கூறுங்கள்.

பாசமாக வளர்ந்த பிள்ளைகள் வெளிநாட்டில் போய் செட்டிலாகி விடுகிறார்கள். ஏனென்றால், நவீன நாகரிமான உலகம். அதற்குப் பிறகு அவர்களுடைய பிள்ளைகள் அந்தக் கலாச்சாரத்திலேயே வளர்ந்துவிடுகிறார்கள். கடல் தாண்டி பிள்ளைகள் சென்றவுடன், எப்படி வேறுபடுகிறார்கள். இப்போதுள்ள குழந்தைகள் மத்தியில் வயதானவன் வித்தியாசமாகத் தெரிகிறேன். தாத்தா அந்நியப்படுகிறான்.

என் பிள்ளைகள் வெளிநாட்டில் வளரும்போது எந்தளவுக்கு முரண்படுகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். இங்கு பாசமும் நேசமும் இருக்கிறது. அங்கு அறிவு மட்டுமே இருக்கிறது. வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்க, வாழ அறிவுகூட இல்லாமல் இருந்துவிடாலாம். ஆனால், அன்பில்லாமல் வாழ முடியாது. இதை விவாதிக்கிறது களம். தமிழகத் தமிழனின் கடல் கடந்த வாழ்வு கதையில் ஆதிக்கம் செலுத்துவதால் தான் வெளிநாட்டில் ஷூட் பண்ணினேன்.

‘ர’ எழுத்தில் தொடங்கும் பெயர்களை உங்களது கதாநாயகிகளுக்குச் சூட்டும் ரகசியம்தான் என்ன, இந்தப் படத்தின் நாயகி ராஷி நட்சத்திராவை முன் வைத்துக் கூறுங்களேன்.

ராதிகா, ரதி, ரேவதி, ரேகா, ரஞ்சனி இப்போது ராஷி நட்சத்திரா. ஒரு கட்டத்தில் அப்பா - அம்மா ஆசையாய் வைத்த பெயரை மாற்ற நான் யார் என்று தோன்றியது. ஆகையால் ஒரு கட்டத்தில் பெயர் மாற்றுவதை நிறுத்துவிட்டேன். சுகன்யாவின் பெயரை நான் மாற்றவில்லை. ஆனால், நாயகிகளே பிறகு கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு நான் பெயர் மாற்றுவதில் சென்டிமெண்ட் ஒட்டிக் கொண்டது. நானே விட்டாலும், விடமாட்டேன் என்கிறார்கள். ஆகையால் தான் இப்போது ராஷி நட்சத்திரா என வைத்தேன். நான் பெயர் வைத்ததால் அவர்கள் பெரிய நடிகையாக வளரவில்லை. அனைத்துமே அவர்களுடைய திறமை.

ராஷி நட்சத்திரா நீங்கள் எதிர்பார்த்த நடிப்பைத் தந்தாரா?

என் நடிகர்களிடம் 25 விழுக்காடு நடிப்பைத் தான் எதிர்பார்ப்பேன். அவர்களை அடித்து, தட்டி, ஒட்டி, நெளித்து, வளைத்து 50 விழுக்காடு நடிப்பை வாங்கிவிடுவேன். ஆனால், ராஷி நட்சத்திரா முதலிலேயே 75 விழுக்காடு நடிப்புத் திறனோடு வந்தார். ஆகையால் மீதமிருந்த 25 விழுக்காடு நடிப்புக்குத்தான் நான் வேலை வாங்க வேண்டியதிருந்தது.

சினிமாவுக்காக அவர்களாக வருவது ஒன்று, நாம் பிடித்து இழுப்பது ஒன்று. என் நண்பனின் மகள். துறுதுறுவென வாயாடிக்கொண்டிருந்த பெண்ணை நான்தான் நீ ஏன் நடிக்கக் கூடாது என்று நடிகையாக்கியுள்ளேன். அவரும் உண்மையிலேயே பிரமாதமாக நடித்துள்ளார்.

ஒருநடிகராக இதுவரை நீங்கள் ஏற்று வெளிப்படுத்தி வந்திருக்கும் குணச்சித்திர வேடங்களில் இருந்து, கதையின் நாயகனாக ‘மீண்டும் ஒரு மரியாதை’ சவாலாக அமைந்ததா, அல்லது வழக்கம்போல் ஊதித் தள்ளிவிட்டீர்களா?

நடிப்பு என்றைக்குமே எனக்குச் சவாலாக இருந்ததில்லை. பள்ளி நாட்களிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டேன். நடிப்பு என்பது என் உடலில் ஊறிப்போய்விட்டது. இயக்குநர் பணி என்பது கற்றுக்கொண்டது. சிவாஜியும், கருணாநிதியும் இல்லையென்றால் சினிமாவுக்கு பாரதிராஜா வந்திருக்க முடியாது. கலைஞருடைய வசனத்தையும், சிவாஜியின் நடிப்பையும் எங்கோ உள்வாங்கி நானும் அவர்களை மாதிரி ஆக வேண்டும் என நினைத்தேன்.

பள்ளி நாட்களிலேயே மிகப் பெரிய நடிகன் எனப் பெயர் வாங்கியவன் நான். அப்போதே ஒரு போதை ஏறியது. சிறுவயதிலேயே என்னைக் கொம்பு சீவி விட்டு சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது நடிகனாக என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது நடிக்கிறேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக இயக்குநராகி விட்டேன். நடிகனாக இருப்பதைக் காட்டிலும் இயக்குநராக இருப்பதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ஒரு நடிகனாக ஒரு கேரக்டரில்தான் வாழ முடியும். ஆனால், இயக்குநராகப் பத்து கேரக்டரில் வாழலாம்.

உங்கள் படக்குழுவில் இளம் கலைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களோடு இணைந்து போகவேண்டும் என்னும்போது இளம் படைப்பாளிகள் எனக்குத் தேவை. இளைஞர்களுடன் இருக்கும் போதும், எனக்கும் இளமையாக யோசிக்க வரும். வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி, தொடங்கி என் கண்களாக நான் கருதும் ஒளிப்பதிவாளர் கண்ணனின் உதவியாளர் சாலை சகாதேவனின் ஒளிப்பதிவுவரை இள ரத்தங்கள் இந்தப் படத்துக்கு அவர்களுடைய இளமையின் ஆற்றலைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x