

‘மகாநடி’ படம் தெலுங்குப் படவுலகில் கீர்த்தி சுரேஷுக்குத் தளம் அமைத்துக் கொடுத்துவிட்டது. இதனால் அங்கே பெண் மையக் கதைகள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டன. அதில் ‘மிஸ் இந்தியா’ எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் தெலுங்குப் படம். ‘பட்டாஸ்’ படத்தின் வில்லன் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படம். ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் உட்பட அங்கே மேலும் 3 பெண் மையப் படங்களில் நடிக்கிறார் கீர்த்தி. தமிழில் ரஜினியுடன் முதல்முறையாக இணைந்து நடித்து வரும் கீர்த்தி, கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதால் ‘மைதான்’ இந்திப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
பரிந்துரையை ஏற்ற தனுஷ்!
திறமையான நடிகர்களை தாம் நடிக்கும் படங்களில் உடன் இணைத்துக் கொள்வதில் தனுஷ் தயக்கம் காட்டாதவர். தனுஷ் தற்போது முழுவீச்சில் நடித்து வரும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் தனுஷுடன் கூடவே வரும் முழுநீளக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் லால்.
வளர்ந்து வரும் மலையாள நாயகியான ரெஜிஷா விஜயனைத் தமிழில் அறிமுகப்படுத்தும்படி, அவரது நடிப்புத் திறமையை அவர் புகழ்ந்து கூற, லால் சற்றும் எதிர்பாராத வண்ணம் ‘கர்ணன்’ படத்துக்கு அவரையே கதாநாயகியாகத் தேர்வுசெய்யச் சொல்லிவிட்டாராம் தனுஷ். தொலைக்காட்சி வழியே மலையாள சினிமாவில் நுழைந்துள்ள ரெஜிஷா விஜயனை இயக்குநர் மாரி செல்வராஜும் உடனே ஓகே செய்துவிட்டாராம்.
போர்க்களத்தில் இயக்குநர்
ஸ்டைலான கேங்ஸ்டர், த்ரில்லர் படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாகப் பாலிவுட்டில் நுழைகிறார். கரண் ஜோஹர் தயாரிக்க, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘ஷெர்ஷா’ என்று தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள். கார்கில் போரைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்ட உண்மைக் கதையாம். பாலிவுட்டின் சாக்லெட் பாய், குறும்பு நாயகன் எனப் பெயர்பெற்றிருக்கும் சித்தார்த் மல்ஹோத்ரா, முதல்முறையாக மிடுக்கான ராணுவ வீரராக நடிக்கிறார். கார்கில் போர் நடந்த பகுதிகளான கார்கில், சண்டிகர், பலம்பூர் பகுதிகளில் நேரடியாகப் படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம் விஷ்ணுவர்தன்.
மீண்டும் தொடங்கியது அறிவியல் புனைவு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’, ‘சீமராஜா’ ஆகிய படங்களைத் தயாரித்தது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ். அதே நிறுவனம் ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு அறிவியல் புனைவுக் கதையைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சில நாட்கள் நடைபெற்றன. அதன்பிறகு ‘எங்கவீட்டு பிள்ளை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவேண்டி இருந்ததால் ஆர்.ரவிகுமாரின் படம் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் தொடங்கிவிட்டது. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
மீண்டும் விஜய் சேதுபதி - விக்னேஷ் சிவன் கூட்டணி
2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி - விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்து ’நானும் ரவுடிதான்’ என்ற வெற்றிப் படத்தைத் தந்தது. இந்தக் கூட்டணி இரண்டாம் முறையாக இணைகிறது. இதில் நயன்தாரா நடிக்கவில்லை. விஜய் நடித்துவரும் 'மாஸ்டர்' படத்தின் உலகளாவிய உரிமையைக் கைப்பற்றி இருப்பதுடன், விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தைத் தயாரித்தும் வரும் லலித் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் 'துக்ளக் தர்பார்' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.