

எல்.ரேணுகாதேவி
வரலாற்றைத் திரையில் மீள் உருவாக்கம் செய்வதில் ரஷ்யத் திரைப்படங்கள் பிரம்மாண்ட அழகியலை முன்வைப்பவை. நடந்து முடிந்த 17-ம் சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்ட ‘பீன்போல்’ (Beanpole) போர் விட்டுச் சென்ற தடயங்களை, உயிர் பிழைத்திருக்கும் மனிதர்களின் மத்தியில் எடுத்துகாட்டும் உன்னத முயற்சி. ‘பீன்போல்’ என்றால் வெளிறிய நிறமுடைய கொடியைப் போல் நீளமாக இருப்பவர்களைக் குறிக்கும். இப்படத்தின் ஈயா கதாபாத்திரம் பீன்போல் போன்ற உருவம் கொண்டவர்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த 1945-களின் லெனின்கிராட் (தற்போதைய பீட்டர்ஸ் பர்க்) நகரம் அது. போர்க்கால ராணுவப் பணியில் இருந்த ஈயா, அவருடைய தோழியும் ராணுவ வீரருமான மாஷா ஆகியோரைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளே இப்படம்.
உறைந்தது ஈயா மட்டுமல்ல
போருக்குப் பின்னர், ஈயா திடீரென்று செயலற்று உறைந்துபோய் நின்றுவிடும் (Paralytic blackout) நோயின் காரணமாகப் போர்க்களத்திலிருந்து லெனின்கிராட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குச் செவிலியராக அனுப்பப்படுகிறாள். மாஷா தன் கணவரைப் போர்க்களத்தில் இழந்துவிடுவதோடு பெர்லினை நோக்கி முன்னேறும் படைக்குழுவோடு இணைந்து கொள்ள வேண்டிய சூழல் இருந்ததால் தன் சிறுவயது மகன் பாஷ்காவை ஈயாவுடன் அனுப்பிவைக்கிறாள்.
சொல்ல முடியாத அளவிலான மகிழ்ச்சியோடு பாஷ்காவும் ஈயாவும் விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில் அவளின் நோய் காரணமாகக் குழந்தையின் மீதே அவள் உறைந்துவிடுகிறாள். துள்ளலோடு விளையாடித் திரிந்த பாஷ்கா சிறு முனகலுடன் முடிந்துபோகிறான்.
இதற்கு முந்தைய காட்சியில்தான் ஈயா, பாஷ்காவை தான் வேலைசெய்யும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். போரில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அங்கிருந்த ராணுவ வீரர்கள் அவனிடம் விளையாடுகிறார்கள். விலங்குகள் போல் கத்தி விளையாடுகிறார்கள். “எங்கே நாயைப் போல் குறைத்துக் காட்டு..” என்று பாஷ்காவை அவர்கள் கேட்கின்றனர். அவன் என்னவென்று தெரியாமல் நிற்கிறான்.
“எல்லா நாய்களையும் தின்று தீர்த்துவிட்ட பிறகு அவனுக்கு எப்படி நாய் குரைக்கும் ஒலி தெரியும்” என்பார் அங்கிருந்த ராணுவ வீரர் ஒருவர். இதுவே ரஷ்யாவில் அப்போது நிலவிய உணவுப் பற்றாக்குறையை நமக்கு எடுத்துச்சொல்லப் போதுமானது.
மரணமும் மறத்துபோகும்
போர் தான் முடிந்திருந்ததே அன்றி அது விட்டுச்சென்ற பல்வேறு சேதாரங்களும் கடும் பாதிப்புகளும் அங்கு இருந்தன. உள்ளூர் மக்களின் தேவைக்காக உணவு, நீர் என எல்லாம் ரேஷன் முறையில் அளவாகவே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் மாஷா ஈயாவை வந்தடைகிறாள். ராணுவப் பணியில் இருந்து வந்ததால் அவளுக்கும் அந்த மருத்துவமனையிலேயே வேலை கொடுக்கப்படுகிறது.
பாஷ்கா இறந்துவிட்டான் என்று மாஷா அறியும்போதுகூட அவன் எப்படி இறந்தான் என்பது குறித்து அவள் எதுவும் கேட்காமல் விட்டுவிடுகிறாள். ஏனெனில், போர் மரணத்தைக்கூட மரத்துப் போக செய்திருந்தது. மாஷாவும் ஈயாவும் இணைந்து வாழ்வதாகவே படத்தில் காட்டப்படுகிறது. கணவன் குழந்தை என எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மாஷா, ஒரு குடும்பம், குழந்தை என வாழவும் தங்களின் உணவுத் தேவையைத் தீர்த்துக்கொள்ளவும் ஒரு வசதியான வாலிபனுடன் பழகுகிறாள்.
இது ஈயாவைச் சிறிது அதிருப்தி கொள்ளச் செய்கிறது. போர்க்களத்தில் மேற்கெள்ளப்பட்ட அறுவைசிகிச்சையில் மாஷாவின் கர்ப்பப்பை நீக்கப்பட்டுவிட்டதால் “எனக்கு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொடு” என்று ஈயாவைக் கட்டாயப்படுத்துகிறாள். காதலனின் மேட்டிமையான தாய் மாஷைவை நிராகரித்து அனுப்பிவிடுகிறார். விரக்தியோடு வீடு திரும்பும் அவளை ஆதரவோடு ஈயா பற்றிக்கொள்கிறாள்.
முட்டிமோதி எழும் விதைகள்
இப்படிப் பல்வேறு தரப்பினரின் தவிப்புகளோடும், தியாகத்தோடும், இழப்புகளோடுமே உலகம் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். 5 கோடிக்கும் அதிகமான சாமானிய மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இரண்டாம் உலகப் போரில், இரண்டு கோடிப் பேர் ரஷ்ய மக்கள் என்பதே அதன் கூடுதல் இழப்பை நமக்கு உணர்த்தும். இந்த இழப்புகளே உலகை அழிவுக்குக் கொண்டு போக நினைத்த பாசிச ஹிட்லருக்கு முடிவுகட்டி உலகைக் காத்தன.
இந்த இழப்புகளின் சிறு சாட்சியமே மாஷா, ஈயா, அந்த மருத்துவமனையும் அதையொட்டி வசிக்கும் மக்களின் கடுமையான வாழ்நிலையும். போர்களின் கொடூரத்தை உணர்வதற்கு ஈழத்தில் நாம் கண்ட கொடூரக் காட்சிகள், இப்போதும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலில் சிதறும் உயிர்களையும் உறவுகளையும் பறிகொடுத்தவர்களின் ஓலங்கள் நமக்கு நிகழ்காலச் சாட்சிகளாகும்.
இழப்புகளின் வலிகளால் முடங்கிப் போவதில்லை மனித வாழ்க்கை. முட்டிமோதி எழும் விதைகளே இருளைக் கிழித்து சூரிய ஒளியைக் கண்டடைகின்றன. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைக் கடந்து, அப்படியான ஒளிக்கீற்றை ரஷ்ய மக்கள் தங்கள் நிலமெங்கும் வெகுவிரைவிலேயே பரப்பினர். போர் அழிவின் தடயங்கள் வழியாக இழப்பின் வலியை உணர்வுகளின் சாளரமாய் காட்டி ஒரு கண்ணீர் துளிபோல ‘பீன்போல்’ சாட்சியம் பகர்கிறது.
தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in