

தனக்கு மகள் பிறந்த சந்தோஷத்தில் இருக்கிறார் பிரசன்னா. மகள் பிறந்த பிறகு அவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மாஃபியா’. அந்தப் படம் தொடர்பாகப் பேசியதிலிருந்து...
‘மாஃபியா’ கூட்டணி எப்படி உருவானது?
சமீபத்தில் அறிமுகமான இளம் இயக்குநர்களில் கார்த்திக் நரேன் முக்கியமானவர். அதேபோல், சினிமாவுக்கு வந்த காலத்திலிருந்து அருண் விஜய் எனக்குப் பழக்கமானவர். என் குடும்பத்தில் ஒருவர் என்று சொல்லலாம். இத்தனை ஆண்டுகள் போராடி அவர் அடைந்திருக்கும் இடத்தால் ரொம்ப மகிழ்ச்சி. அது மட்டுமன்றி எனக்குப் பல விஷயங்களில் முன்மாதியாகவே இருக்கிறார். ‘மாஃபியா’ படமாக எப்படியிருக்கும் என்று கார்த்திக் நரேன் விவரித்தபோதே இந்தப் படம் பண்ண வேண்டும் எனத் தோன்றிவிட்டது.
படப்பிடிப்பு, திட்டமிடல் இரண்டிலும் கார்த்திக் நரேன் பாணி எப்படிப்பட்டது?
கார்த்திக் நரேன் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை என்பதே ஆச்சரியமான விஷயம். ஏனென்றால், தனக்கு என்ன தேவை என்பதைப் படக்குழுவினரிடம் சொல்லி யாருடைய நேரத்தையும் பணத்தையும் விரயமாக்காமல் திரையில் கொண்டு வரும் விஷயத்தில் கார்த்திக் நரேன் பெரிய கெட்டிக்காரர். கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கக் குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும்.
பெரிய ஸ்டார் ஹோட்டலில் மிக சொகுசான அறை ஒன்றை எடுத்து ஷூட் பண்ண வேண்டும். அந்த அறைக்கு ஒரு நாள் வாடகையே 2 லட்சம் வரை இருக்கும். 3 நாளைக்கு 6 லட்சம் வாடகை போக, படப்பிடிப்புத் தளச் செலவு வேறு. ஆனால், கார்த்திக் நரேன் எங்களிடம் டபுள் கால்ஷீட் வாங்கி, ஒரே நாளில் முடித்துவிட்டார்.
முந்தைய நாளே தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்துத் தனக்கு என்ன தேவை என்பதை விளக்கி, எப்படிப் படமாக்க வேண்டும், என்ன லைட்டிங் என்பதுவரை தெளிவாகச் சொல்லி, யாருடைய நேரத்தையும் வீணடிக்காமல் முடித்துவிட்டார். தயாரிப்பாளருடைய பணத்தை வீணடிக்காமல் சரியாக முடித்தபோது, ஆச்சரியப்பட்டுப் போனேன். இரண்டே பட அனுபவம் கொண்ட ஒரு இயக்குநருக்கு இந்த அளவுக்குத் தெளிவு இருப்பது ஆச்சரியமான விஷயம். அதனால்தான் 38 நாளில் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது.
சமீபத்தில் ‘வலிமை’ பட விவகாரம் ட்விட்டரில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா?
அதை இப்போது சொல்வது நியாயமாக இருக்காது. ஏனென்றால், படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. அதில் நடிக்க முடியாமல் போனது வருத்தத்துக்குரிய விஷயம். இருந்தாலும், எவ்வளவு பேர் என் மீது பெரிய பிரியம், மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்தச் சம்பவத்தால் என் மீது வைக்கப்பட்டுள்ள அன்பையும் ஆதரவையும் பெரிதாகப் பார்க்கிறேன்.
சில ஆண்டுகளாக இதர மொழியிலும் நடித்து வருகிறீர்கள். எப்படி இருக்கிறது பிறமொழி அனுபவம்?
ஒரு நடிகராக என்னை மேம்படுத்துவதற்கு, புது விஷயங்களை முயல்வதற்கு, பிற மொழிகளில் நடிப்பதை உற்சாகமாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு மொழி ரசிகர்களுக்கும் தனி ரசனை இருக்கும். எல்லா மொழி ரசிகர்களையும் நடிப்பின் மூலம் கவர நினைக்கிறேன். ஒரே மொழியில் நடித்து என் வட்டத்தைச் சுருக்கிக்கொள்ள நினைக்கவில்லை.
தமிழில் படங்களைக் குறைத்துவிட்டீர்களோ என்ன எண்ணம் வருகிறது?
கடந்த 2017-ல் நான் நடித்து ஐந்து படங்கள் வெளியாயின. இன்னொரு ஆண்டு படங்களே இல்லாமல்கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நான் நடித்து வரும் படங்கள் நல்ல படங்களாக இருக்க வேண்டும். வரும் ஐம்பது கதைகளில் சிறந்த கதையாக எது இருக்கிறதோ, எது வெளியீட்டுக்குச் சாத்தியமோ அதைத்தான் தேர்வு செய்ய முடியும். சிறந்த கதையாக இருக்கும் சில படங்கள் தயாரிப்பாளர், பட்ஜெட் எனச் சில விஷயங்கள் சரியாக அமையாது. சில படங்கள் சரியாக நடக்கும், சில படங்கள் சரியாக நடக்காது. சினிமாவில் எப்போதுமே பொறுமையாக இருப்பது அவசியம்.
சமீபத்தில் ‘என்னுடைய வெல்விஷர்’ என்று தனுஷைக் கூறியிருந்தீர்கள். எப்படி இந்த நட்பு உருவானது?
‘பவர் பாண்டி’ படத்தில் உருவான நட்பு, இப்போது நெருங்கிய நட்பாக உருவாகியுள்ளது. வெளியே இருந்து அனைவரும் எப்படி அவரைப் பார்ப்பார்களோ, அப்படித்தான் நானும் அவரைப் பொறாமை கலந்து பார்த்தேன். ஆனால், நெருங்கிப் பழகிய போதுதான் எவ்வளவு இனிமையான மனிதர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவரைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் சொல்வதற்கு இது சரியான தருணமில்லை. கண்டிப்பாக அவருடன் பல நெகிழ்ச்சியான தருணங்கள் இருக்கின்றன. என்னுடைய வளர்ச்சி, என் குடும்பம் ஆகியவற்றின் மீது அக்கறை எடுத்துக்கொண்டு நெருக்கமான நண்பராக இருக்கிறார்.
‘பட்டாஸ்’ படத்துக்காகக் கர்ப்பமாக இருந்த சிநேகா படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?
பிளாஷ்பேக் காட்சிகள் படப்பிடிப்பு தான் முதலில் எடுத்தார்கள். சமகாலக் காட்சிகள் படமாக்கப்படும்போது தான் கர்ப்பமாக இருந்தார். எப்போதுமே எனக்கும் சிநேகாவுக்கும் சினிமா மீதான பற்று அதிகம். சிநேகாவுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்வேன்.
அவரோட திறமையைச் சரியாக உபயோகப்படுத்திய படமாக ‘பட்டாஸ்’ இருந்தது. கர்ப்பமாக இருந்தபோது இரவெல்லாம் படப்பிடிப்பு இருந்தது. அப்போது எல்லாம் அதிகமாகக் கஷ்டப்பட்டார். சிநேகாவுக்கு சினிமா மீதிருக்கும் மரியாதை மிகவும் அதிகம். அதை மிகவும் மதிக்கிறேன்.
அதற்கான பாராட்டுகள் கிடைத்தபோது சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு மொழி ரசிகர்களுக்கும் தனி ரசனை இருக்கும். எல்லா மொழி ரசிகர்களையும் நடிப்பின் மூலம் கவர நினைக்கிறேன். ஒரே மொழியில் நடித்து என் வட்டத்தைச் சுருக்கிக்கொள்ள நினைக்கவில்லை.