

சுமன்
வளர்ப்புப் பிராணிகள் சாகச நாயகனாக அதகளம் செய்யும் கதைகளின் வரிசையில் புதிதாக வெளியாக இருக்கும் படம் ‘தி கால் ஆஃப் தி வைல்ட்’.
ஜாக் லண்டன் என்பவர் எழுதி பத்திரிகைத் தொடராக வெளியான கதை. பின்னர் சாகசக் குறுநாவலாகவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது ‘தி கால் ஆஃப் தி வைல்ட்’. 1935-ல் இதே பெயரில் திரைப்படமாகவும் உருவானதை, தற்போது கிராஃபிக்ஸ் உதவியுடன் மறு ஆக்கம் செய்துள்ளனர்.
கலிபோர்னிய செல்வந்தர் வீட்டில் வளரும் ‘பக்’ என்ற சூட்டிகையான நாய், பணியாளர் ஒருவரால் கடத்தப்பட்டு நாட்டின் எல்லை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அப்போது உறைபனியில் மனிதர்களை இழுத்துச் செல்லும் பனிச் சறுக்கு நாய்களுக்குத் தட்டுப்பாடு நிலவியதில், ‘பக்’ அதற்காகப் பயிற்றுவிக்கப்படுகிறது.
கனடா பனிமலைப் பகுதியான யுகானில் களமிறங்கும் ‘பக்’, புதிய எஜமானர்கள், போட்டி நாய்கள் எனக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் சாகசப் பயணத்தைத் தொடங்குகிறது. நாய் நாயகன் தனது தற்போதைய எஜமானருக்கு விசுவாசமாக, எதிர்ப்படும் இடையூறுகளை எப்படிச் சமாளித்துச் சாதிக்கிறது என்பதே ‘தி கால் ஆஃப் தி வைல்ட்’ திரைப்படம்.
நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியால் கிராஃபிக்ஸ் என்று சொல்ல முடியாதபடி முதன்மைக் கதாபாத்திரமாக நாய் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் மனிதக் கதாபாத்திரங்கள் இணைந்து நடிக்க, ‘லைவ் ஆக்ஷன் 3டி அனிமேஷன்’ படமாக ‘தி கால் ஆஃப் தி வைல்ட்’ உருவாகி உள்ளது.
ஹாரிஸன் ஃபோர்ட், டேன் ஸ்டீவன்ஸ், பிராட்லி விட்ஃபோர்ட் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தை கிறிஸ் சான்டர்ஸ் இயக்கியுள்ளார். டெரி நோடரி என்பவர் கிராஃபிக்ஸ் உருவாக்கத்துக்கான நாய்க்கு மோஷன் கேப்சரிங் உத்தியில் உடல் சார்ந்த நடிப்பை வழங்கி நடித்துள்ளார்.
நூறாண்டுக்கும் மேலாக குழந்தைகளை மகிழ்வித்த கதை, ‘தி கால் ஆஃப் தி வைல்ட்’ திரைப்படமாக, பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.