Last Updated : 24 Jan, 2020 12:46 PM

Published : 24 Jan 2020 12:46 PM
Last Updated : 24 Jan 2020 12:46 PM

கு.மா.பா. நூற்றாண்டு: நெஞ்சினிலே நினைவு முகம்..

எஸ். வி. வேணுகோபாலன்

மிக அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் புதிய புத்தகங்களை மட்டுமல்ல, பழைய நூல்களையும் தேடித் தேடி வாசகர் வாங்கியதை இந்த ஆண்டும் காண முடிந்தது. ரசனையும், தேடலும் மிகுந்த மனிதர்கள் பழைய நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக்கொண்டே தான் இருக்கின்றனர். புத்தகங்களுக்கு மட்டுமல்ல, திரைப்பாடல்களுக்கும் அந்தப் பெருமை உண்டு.

கு.மா.பா. எழுதிய ‘அமுதைப் பொழியும் நிலவு’ மட்டுமல்ல, அது, ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா!’ காதல் மயக்கத்தை, உருக்கத்தை, ஊடலை ஒரு ரசாயனக் குடுவையில் ஊற்றிக் கொதிக்க வைத்துக் குளிர விட்டு ஆறவிட்டு ஓடவிட்ட பாடல்களை விதவிதமாக கு.மா.பா. கடைசிவரை வார்த்துக்கொண்டே இருந்தார். அவர் வரிகளில் வார்த்த ‘கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம்' (அன்னையின் ஆணை) காண்பது தலைமுறைகள் கடந்து தொடர்கையில், ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ' (கணவனே கண் கண்ட தெய்வம்) என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விடுகிறது.

கண்ணதாசனாக கருதிக் கொண்டவர்கள்!

பழைய பாடல்கள் சிலவற்றைக் கிறங்கிக் கேட்கும் ரசிகர்களுக்கு, கண்ணதாசன் எழுதி இருப்பார் என்றே பதிவாகி இருந்து, வேறு ஒரு கவிஞரது பாடல் என்று பின்னர் அறிந்துகொள்ளும் அதிர்ச்சி நிகழ்வதுண்டு. ‘சித்திரம் பேசுதடி..' (சபாஷ் மீனா) பாடலை எழுதியவர் கு.மா.பா என்ற உண்மையை மிக அண்மையில்தான் கண்டடைந்தேன் என்றார் நண்பர் ஒருவர் . பி சுசீலாவும், வித்தியாசமான ஆண் குரலும் (டி.ஏ.மோதி) போட்டி போட்டுப் பாடும் ‘காணா இன்பம் கனிந்ததேனோ'வை விவரிக்க சொற்கள் உண்டா...! அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே கு.மா. பா எழுதியது தான்!

புகழ் பெற்ற ‘வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் பத்துக்கு மேற்பட்ட பாடல்கள் அனைத்துமே அவரது தூரிகை தீட்டிய நவரச ஓவியங்கள்தான். ‘சிங்காரக் கண்ணே', ‘அஞ்சாத சிங்கம் என் காளை', ‘போகாதே போகாதே என் கணவா', ‘ஜெக்கம்மா' .... எத்தனை எத்தனை அற்புதமான பாடகர்களின் குரலினிமைக் கூட்டணி! அந்தக் காலத்தில் சிறந்த பாடலாசிரியருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்திருந்தால், கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க உலகப்பட விழாவில் இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் மெச்சத் தகுந்த நடிப்பிற்காகவும், ஜி.ராமநாதனின் தனித்துவ இசைக்காகவும் வழங்கப்பட்ட விருதுகள், சிறந்த பாடலுக்காக நம் கவிஞருக்கும் அளிக்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீதரின் அன்பளிப்பு!

‘அம்பிகாபதி’ படத்துக்காக டி.எம்.எஸ் - பானுமதி குரல்களில் மென்காதல் தும்பியாய்ச் சிறகடிக்கும் ‘மாசிலா நிலவே நம்' பாடல், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுத்த பெருமைக்குரியது. டி.எம்.எஸ். துள்ளாட்டக் குரலில் ‘யாரடி நீ மோகினி' (உத்தம புத்திரன்) எனக் கு.மா.பாவின் வரிகளில் பாடியதைக் கேட்டுப் பரவசமுற்று, அந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிய (இயக்குநர்) ஸ்ரீதர், கவிஞருக்குத் தன் அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் கொடுத்து மகிழ்ந்தாராம்.

பாடகி பி. சுசீலாவுக்குத் தொடக்க நிலையிலேயே புகழளித்த ‘உன்னைக் கண் தேடுதே' பாடலில் இருந்து, ஜே.பி.சந்திரபாபு - ஜமுனா ராணி இணை குரலில் ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே..’ (மரகதம்), ஏ.எம். ராஜா - பி சுசீலா குரல்களில் ‘ஆடாத மனமும் ஆடுதே' (களத்தூர் கண்ணம்மா), டி.எம்.எஸ். - பி.லீலா குரல்களில் ‘இகலோகமே' (தங்கமலை ரகசியம்), பி.சுசீலா - ஜிக்கி குரல்களில் 'மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக ' (உத்தம புத்திரன்) என்று விரியும் மெல்லிசையில் கு.மா.பா. சொற்கட்டுகள் அபார சுகம் அளிப்பவை.

‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் காதல் பாட்டுக்களை சீர்காழி கோவிந்தராஜன் சிறப்பாகப் பாடிய ‘காதலெனும் சோலையிலே ராதே ராதே', ‘எல்லை இல்லாத இன்பத்திலே' பாடல்களும், அதே படத்தில் இடம் பெற்ற ‘ஆட வாங்க அண்ணாத்தே' என்ற பாடலும் அவர் எழுதியவை தான். ‘கண்மணியே இன்னமுதே..' (அவன் அமரன்), 'கண்ணே வண்ணப் பசுங்கிளியே' (யானை வளர்த்த வானம்பாடி) போன்ற தாலாட்டுப் பாடல்களில் குழந்தையைக் கொஞ்சும் அருந்தமிழ்ச் சொற்கள் பெரியவர்களையும் ஆனந்தமாகக் கண்ணுறங்க வைக்கும்.

‘ஏமாறச் சொன்னது நானோ' (நானும் ஒரு பெண்), ‘காரு சவாரி ஜோரு' (விடி வெள்ளி), ‘தாரா அவர் வருவாரா ' (அரசிளங்குமரி), ‘என் ஆருயிரே நல் வானமுதே..' (தெய்வத்தின் தெய்வம்), ‘ஓ..ஹோ நிலா ராணி...' (சித்தூர் ராணி பத்மினி) என்று கவிஞரின் ஆக்கங்களின் வரிசை ரசனைக்குரியது. பி சுசீலா சோகத்தோடு தொடங்க, ‘ஆருயிர் என்று அழைத்தவளே’ என்று டி எம் எஸ் வந்து இணையும் ‘நெஞ்சினிலே நினைவு முகம்' (சித்ராங்கி) ஒரு முத்திரைப் பாடல்.

அடங்காப் பட்டியல்

திருச்சி லோகநாதன் பாடிய ‘மாநிலம் மேல் சில மானிடரால் வந்த மாறுதல் பாரய்யா..’ (நாஸ்திகன்) பாடலின் வரிகள், மதவெறி உள்ளிட்டுப் பிரிவினையைத் தூண்டும் நிலைமைக்கு எதிரான ஒருமைப்பாட்டுக்கான குரல், இக்காலத்துக்கும் மிகவும் பொருந்தக் கூடியது. ‘ரத்தபாசம்’ திரைப்படத்தில், பாட்டாளிகளைச் சுரண்டிச் சீமான்கள் கொழுத்திருப்பதைச் சாடும் 'பணமிருக்கிற மனுஷன்கிட்ட மனமில்லே..' என்ற அருமையான பாடல் வரிகள், பி.லீலா குரலில் ‘உலகம் போகும் போக்கு ஒண்ணும் சரியில்லே, நிலைமை சரியில்லே, இதை ஒழுங்கு பண்ணி அமைச்சுக்கிட்டா அழிவில்லே' என்று மிக எளிதான முறையில் மாற்றத்துக்கான குரலை எடுக்கும்.

கவிஞராக மட்டுமல்ல, கதை, வசனங்களிலும் அசாத்திய சாதனை படைத்தவர் கு.மா.பா. ‘வேலைக்காரன்’ படத்தின் கதை, பாடல்கள் எழுதினார். ஏவி.எம். இந்தியில் மறு ஆக்கம் செய்த. திரைப்படங்களின் இயக்குநர் எம்.வி.ராமனின் ஆலோசனையை ஏற்ற கவிஞர், பம்பாய் பிலிம்ஸ்தான் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் பணியாற்றியதுடன் ‘சாம்ராட்’, ‘நாஸ்திக்’ ஆகிய திரைப்படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதி, தமிழில் மொழிமாற்றம் செய்யும் கலையைக் கற்றறிந்தார். ‘கோமதியின் காதலன்’ திரைப்படத்தில், இயக்குநர் ப.நீலகண்டனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் பெரும்பாலான பாடல்களையும் எழுதினார்.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கிய தடம் பதித்த ‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் கு.மா. பா.தான் இதில் எஸ்.ஜானகி பாடிய ‘சிங்கார வேலனே தேவா..’ அவருக்கு மட்டுமல்ல, பாடலை இயற்றிய கவிஞருக்கும் பெரும்புகழை ஈட்டித்தந்தது. இசைத்தட்டுகள் விற்பனையில் அந்தக் காலத்தில் முதலிடத்தைப் பிடித்த இந்தப் பாடலுக்கு என்றென்றும் தொடரும் ரசிக பட்டாளம்.

இதே போல், இவர் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெற்றியடைந்த இன்னொரு படம் ‘மகாகவி காளிதாஸ்’. மரபிலக்கணம் வழுவாத வெண்பா, விருத்தப்பா, கட்டளை கலித்துறை பாடல்களை இயற்றியதன் மூலம் வடமொழிக் கவிஞரான காளிதாசனை அசல் தமிழ்க் கவியாகவே காட்சிப் படுத்திய படம் அது. திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் ‘மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே..’ உள்ளிட்ட அத்தனைப் பாடல்களின் வரிகளும் அற்புதமானவை.

ஏவி.எம் தயாரிப்பில் 1951-ல் வெளியான ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் முதல் பாடல் எழுதிய அவரது கவிதை மனம், அவர் காலத்தின் மிகச் சிறந்த பாடல் ஆசிரியர்கள் இயங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் தொடுத்துச் சென்றிருக்கும் வெற்றிப் பாடல்களின் எண்ணிக்கை அடங்காப் பட்டியல். 1980-ல் வெளிவந்த ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில் சலீல் சவுத்ரி இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிஞர், அடுத்து, கங்கை அமரன் இசையில் ‘கனவுகள் கற்பனைகள்’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய, ‘வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே..’ இவர் எழுதிய ஓர் இனிய பாடலாகும்.

ஓர் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, பத்திரிகையாளர், வெற்றிகரமான சிறுகதை எழுத்தாளர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, தமிழக சட்ட மேலவை உறுப்பினர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் என்று பன்முகத் தளங்களில் தமிழ்ப் பணியாற்றி, கலை மாமணி விருது பெற்றது மட்டுமல்ல, தனக்கென்று தமிழ் நெஞ்சங்களில் தனி இடம் பெற்றுள்ள கவிஞர் காலத்தால் நிலை பெற்றுவிட்டவர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x