

‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஜிப்ரான், 10-ம் ஆண்டில் நுழைகிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுக்காகவும் பேசப்படும் அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இதுவரை ஐந்து மொழிகளில் 28 படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரையிசை எனும் தளத்தைத் தாண்டி தனியிசைப் பாடல்களிலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘அழகு நீ அழகோ அழகு’ என்ற தனிப் பாடல், இசைக் காணொலியாக இணையத்தில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அவருடன் உரையாடியதிலிருந்து…
ஜிப்ரானைப் பார்ப்பவர்களுக்கு ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்று தோன்றும். ஆனால், பள்ளிக் காலத்தில் பல வேலைகள் செய்து குடும்பத்துக்கு உதவியிருக்கிறார் என்பது வெளியே தெரியவே இல்லையே?
நான் பேசும், பழகும் முறையைப் பார்த்துப் பலரும் அப்படி நினைத்துவிடுகிறார்கள். உண்மையில் நான் ‘பார்ன் வித் கொட்டாங்கச்சி’. சிறு வயதில் குடும்பத்துக்காக வேலை செய்யும் அரிய சந்தர்ப்பத்தை இறைவன் எனக்கு அளித்தார். எனக்கு 14 வயது இருக்கும்போது சைல்ட் லேபர் பிரச்சினை வரும் என்பதால் 16 வயது என்று பொய் சொல்லி வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வயதில் எனக்கு அது வலியாக இருந்தது. ஆனால், அதுதான் இன்று என் வாழ்க்கைக்கான வழியாக மாறியிருக்கிறது என்று நம்புகிறேன்.
நீங்கள் பிறந்து வளர்ந்த கோயம்புத்தூருக்கும் உங்கள் இசைத் திறமைக்கும் தொடர்பு இருக்கிறதா?
இசை என்று இல்லை, எந்தவொரு கலையாக இருந்தாலும் அதைப் படைக்கும் கலைஞனின் குடும்பம், அவன் பிறந்து வளர்ந்த ஊர், அங்கே அவன் கடந்து வந்த வாழ்க்கை, உறவுகள், நண்பர்களுக்கு மத்தியில் அவன் அனுபவித்த உணர்வுகள், அவற்றின் நினைவுகள் ஆகியவற்றைச் சார்ந்துதான் அவனது படைப்புகள் ஊக்கம் பெறமுடியும். படைப்பூக்கம் என்று நான் நம்புவது இதைத்தான். அந்த வகையில் எப்போதும் என் நினைவுகளைக் கிளறும் எனது ஊருக்கும் எனது இசைக்கும் தொடர்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனக்கு எல்லாமே நன்றாக அமைய கோயம்புத்தூரின் சுற்றுச்சூழலும் பெற்றோரும் நண்பர்களும்தான் காரணம்.
‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தின் இசையைப் பிரபலப்படுத்துவதற்காகச் சாலை வழியாக சிங்கப்பூருக்குப் பயணப்பட்டீர்கள். அதில் மறக்க முடியாத அனுபவம் உண்டா?
நிறைய. மணிப்பூரைக் கடந்து மியான்மருக்குள் நுழைய முயன்றபோது, தீவிரவாதத் தாக்குதல் ஒன்று நடந்தது. அதனால் எல்லையைக் கடந்து செல்ல, ராணுவத்தினர் எங்களை அனுமதிக்கவில்லை. இதனால் இந்தியாவுக்குள்ளும் இல்லாமல் மியான்மருக்குள்ளும் இல்லாமல் இடையில் ஒருவார காலம் மாட்டிக்கொண்டோம். அதேபோல மியான்மரைக் கடந்து தாய்லாந்தில் நுழைந்தபோது அங்கேயும் சிக்கல். நாங்கள் பயணித்த காருக்கு பாஸ்போர்ட் வேண்டும் என்றார்கள். பாஸ்போர்ட் என்றால், நாங்கள் பயன்படுத்தும் காரை சிங்கப்பூர் வரை தரை மார்க்கமாகவே பயன்படுத்துகிறோம் என்று இந்தியத் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவந்தால் மட்டுமே தாய்லாந்தில் சாலை வரி கட்ட அனுமதிப்போம் என்றார்கள்.
அந்தச் சான்றிதழ் வரும்வரை அங்கே ஒருவாரம் மாட்டிக்கொண்டோம். அந்தச் சமயத்தில் தாய்லாந்தில் நிறைய வாத்தியங்களை வாங்கிக்கொண்டேன். வழிநெடுக நிறைய மனிதர்களைச் சந்தித்தோம். அவர்கள் பேசுவது நமக்கும் நாம் பேசுவது அவர்களுக்கும் புரியவில்லை. ஆனால், போகிற இடமெல்லாம் அன்பைப் பொழிந்து உபசரித்தார்கள். மனிதர்கள், மனிதர்களைப் புரிந்துகொள்ள மொழி தேவைப்படவில்லை, அன்பை முன்னிறுத்திய உணர்வின் மொழியே போதுமானதாக இருந்தது.
மெட்டுகளை கம்போஸ் பண்ணத் தொடங்கிவிட்டால், பாடல்களின் சூழ்நிலை உங்கள் முகத்தில் தெரியும் என்று சொல்கிறார்களே?
உண்மைதான். சோகப் பாட்டு கம்போஸ் செய்யும்போது சோகமாகவே இருப்பேன். அது செயற்கையான உணர்வல்ல; கம்போஸிங் என்பது என்னளவில் ‘எமோஷனல் ஜர்னி’. திருமண வீட்டுக்குச் சென்றால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்போம். அதுவே துக்க வீட்டுக்குச் செல்லும்போது நமது மனம் பாரமாகிவிடுகிறது. ‘அறம்’, ‘ராட்சசன்’, ‘தீரன்’ என்று மிகக் கனமான கதைக் களங்கள் கொண்ட படங்களுக்கு இசையமைத்தபோது மனத்தளவில் உணர்வுப் போராட்டமாக இருந்தது. அதனால்தான் கடந்த ஆண்டு முழுக்க, விடுதலை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டே ‘சிக்ஸர்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தனுசு ராசி நேயர்களே’ என்று ஜாலியான கதைக் களம் கொண்ட படங்களுக்கு இசையமைத்தேன்.
உங்களது மெட்டுகளை நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு உயிரூட்டிய பாடலாசிரியர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
கார்த்திக் நேத்தா. ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்துக்கு நான் கம்போஸ் செய்த ‘என்தாரா என்தாரா’ பாடலுக்கு அவர் எழுதிய வரிகள் எனது மெட்டுக்கு நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்புச் செய்தன. காதலில் இருக்கும்போது வரும் கனவை எப்படிச் சொல்ல முடியும் என்ற இடம் வருகையில் ‘தண்ணீரைக் கூசிக்கொண்டே மெல்லச் செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே’ என்று அந்தப் பாடலில் எழுதினார். அதை மறக்கவே முடியாது.
தீம் இசையுடன் கூடிய பின்னணி இசை மட்டுமே போதும், பாடல்கள் தேவையில்லை என்ற கொள்கையுடன் பல தமிழ்ப் படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. பல புதிய இசையமைப்பாளர்கள் பின்னணி இசை வழியாகவே புகழ்பெற்று வருகிறார்கள். பின்னணி இசைக்காவும் புகழ்பெற்றிருப்பவர் என்ற அடிப்படையில், இந்தப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிக ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். சினிமாவில் கதை சொல்வதற்கு இசை தேவையே தவிர பாடல்கள் தேவையில்லை. ஆனால், பாடல்கள் வழியாகவும் கதையைச் சொல்வது என்பது இயக்குநர்களின் விருப்பத்தைப் பொறுத்தாக இருக்கிறது. இது தற்போது வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. இதை நாம் வளர்த்தெடுக்கத் தவறிவிடக் கூடாது.
தயாரிப்பாளருக்கு ஒரு ஆடியோ லேபிள் தேவைப்படும்போது படத்தில் ஒரு பாடலாவது இடம்பெற வேண்டிய தேவை உருவாகிறது. திரையிசைப் பாடலுக்கு மாற்றாக தனியிசைப் பாடல்கள் வெகுஜன இசையின் மிகப் பெரிய பிரிவாக வரவேற்பைப் பெற்றுப் புகழ்பெறும்போது, இப்படிப் படத்துக்குத் தேவைப்படும் பாடல்களை, புகழ்பெற்ற ஒரு தனிப் பாடலிலிருந்து தயாரிப்பாளரோ, இயக்குநரோ எடுத்துக்கொள்ள முடியும். அந்த நிலை வரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தற்போது உங்கள் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் ‘அழகு நீ... அழகோ அழகு’ தனியிசைப் பாடல் தொகுப்பு பற்றிக் கூறுங்கள்..
எனது நீண்டநாள் கனவு இது. சோனி மியூசிக் மாதிரி இசைச் சந்தையில் கோலோச்சும் ஒரு மிகப் பெரிய நிறுவனம் அழைத்து, ‘நீங்கள் விரும்பியதை முழு சுதந்திரத்துடன் செய்யுங்கள்’ என்று சொன்னபோது எனக்கு உடலெங்கும் சிறகுகள் முளைத்துவிட்டதுபோல் உணர்ந்தே ‘அழகு நீ அழகோ’ பாடலுக்கு இசையமைத்தேன். அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, தனியிசையில் மேலும் தீவிரமாக இயங்கும் உத்வேகத்தைத் தந்திருக்கிறது.
கமல்ஹாசன் உடனான கூட்டணி, நட்பு பற்றிக் கூறுங்கள்...
எனது இசைப் பணிகள் அனைத்திலுமே என்னையும் அறியாமல் கமலின் தாக்கம் இருக்கிறது. ‘எதுவொன்றையும் நீ புதிதாகச் செய்ய விரும்பினால், முதலில் தைரியமாக நீ களத்தில் இறங்கிவிடு; உன்னைப் பார்த்து மற்றவர்களும் துணிச்சலாக வருவார்கள்’ என்ற ரோல்மாடலை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். தனியிசையில் தயக்கமின்றி இறங்கியிருப்பதும் அவர் காட்டிய பாதையில்தான்.
தற்போது இசையமைப்பில் இருக்கும் படங்கள்?
விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரணசிங்கம்’, மாதவன் நடிப்பில் ‘மாறா’, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஒரு படம் என மூன்று படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.
- சந்திப்பு: ஆர்.சி. ஜெயந்தன்