திரைவிழா முத்துக்கள்:  ஒரு பள்ளிக்கூடத்தின் பயணம்

திரைவிழா முத்துக்கள்:  ஒரு பள்ளிக்கூடத்தின் பயணம்
Updated on
2 min read

இரண்டாம் உலகப்போரால் விளைந்த பாதிப்புகளின் சமகாலச் சான்று ஐப்பான். அந்தப் போர் நடந்தபோது, டோக்கியோவின் மழலையர் பள்ளி ஒன்றில் குழந்தைகளைப் பாதுகாக்க அசாத்திய முயற்சிகளை மேற்கொண்ட ஆசிரியர்கள் குறித்து அழகான காட்சிமொழியில் ஈர்க்கிறது ‘ஆர்கன்’ (Organ) என்ற இந்தத் திரைப்படம்.

உன்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் ஜப்பானியப் பெயர் ‘அனோ ஷினோ ருகன்’ (Ano Hi No Orugan) இதற்கு ‘சிறிய கோழிக் குஞ்சு’ என்று அர்த்தம். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் முழுவதிலும் அமெரிக்கா கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடுக்கிறது. எங்கு எப்போது குண்டு விழும் என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் டோக்கியோவையும் விட்டுவைக்காது என்ற காரணத்தால் தங்கள் பள்ளியின் 53 குழந்தைகளை வேறு ஒரு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள் அதன் ஐந்து ஆசிரியர்கள். பலகட்ட தேடுதலுக்குப் பிறகு கிராமப் பகுதியில் அமைந்திருந்த, மிகவும் பாழடைந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுடன் 53 குழந்தை களையும் கனத்த மனதுடன் பெற்றோர்கள் வழியனுப்பி வைப்பார்கள். போர்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்தப் பாழடைந்த கோயில் தகுந்த இடமாக இருந்த போதும், அதைக் குழந்தைகளுக்கான தங்குமிடமாக அதை மாற்றுவதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது.

குழந்தைகள் விரும்பும் மிட்சே

குழந்தைகளின் உணவுக்காக அரசு அதிகாரிகளின் அவமானங்களை ஆசிரியர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியதிருந்தது. ‘கிராமத்தினர் கொடுத்த முள்ளங்கிகளை மீன்களாக நினைத்து உண்டோம்’ என்று படத்தில் வரும் வசனம் ஒன்று அவர்களும் குழந்தைகளும் உட்கொண்ட உணவின் தன்மையை விளக்கிவிடும்.

தலைமை ஆசிரியர் காயிதே எவ்வளவு பொறுப்புணர்வு கொண்டவரோ அதற்கு நேர் எதிரானது விளையாட்டுத் தனமும் குறும்பும் கொண்ட முக்கிய கதாபாத்திரமான நோனோமிய மிட்செவின் செயல்பாடு. மிட்செவின் இந்த இயல்பே குழந்தைகளைக் கவர்ந்திழுக்கிறது. குழந்தைகளின் நேசத்துக்குரியவளாக இருக்கிறாள் மிட்செ. பெரும்பாலும், மிகுந்த பொறுப்புணர்வு கொண்ட ஒருவர் எல்லோராலும் நேசிக்கப்படுபவராக இருப்பதில்லை. ஆனால், அப்படியானவர்கள் இல்லாமல் ஒரு அமைப்பு என்பது சாத்தியமே இல்லை. கண்டிப்பானவர்களால் அமைப்பு காக்கப்படுவதால்தான் மிட்செக்கள் குழந்தைகளின் அன்புக்குரியவர்களாக இருக்க முடிகிறது என்பதையும் படம் சுட்டிக்காட்டுகிறது.

பெற்றோர்களின் நினைவால், எல்லாக் குழந்தைகளின் படுக்கையும் நனைந்துபோகிறது. மழைக்காலத்தில் அப்படுக்கைகளை காயவைக்க முடியாமல் திணறுகின்றனர் ஆசிரியர்கள். அப்போது, வழக்கம் போல் தனது விளையாட்டுத் தனத்துக்காக காயிதேவிடம் மிட்செ திட்டுவாங்குகிறாள். பராமரிப்பாளர்கள் தூங்கும் அறையில் படுக்காமல், கோபத்தோடு, எப்போதும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் அருகில் படுத்து உறங்கிவிடுகிறாள் அவள்.

‘ஏன் நீ குழந்தைகள் படுக்கும் இடத்தில் படுத்தாய்?’ என்று காயிதேவிடம் மீண்டும் திட்டு வாங்குகிறாள் மிட்செ. ஆனால் எப்போதும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் அச்சிறுவன், மிட்செவின் அரவணைப்பால் அன்று படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கமாட்டான். பிறகு எல்லாப் பராமரிப்பாளர்களும் தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகள் அருகிலேயே தூங்க முடிவுசெய்கிறார்கள். படுக்கைகள் நனைவதும் நின்றுபோகிறது.

ஆயுதங்கள் யாரைக் காப்பாற்ற?

அவர்கள் இடம்பெயர்ந்த சில காலத்துக்குள் டோக்கியோ கடுமையாகத் தாக்கப்படுகிறது. எப்போதும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்ட சிறுவனின் பெற்றோர் அந்தத் தாக்குதலில் இறந்துவிடுகிறார்கள். அவர்களது இறப்பை அச்சிறுவனிடம் மிட்செ சொல்லும் முறையும் அதைச் சிறுவன் ஏற்கும் விதமும் சிலிர்ப்பைத் தந்தது. எப்போதும் விளையாட்டாகவும், மகிழ்ச்சியாகவும் சுற்றும் மிட்செ இந்தத் தருணத்தில் கலங்கி நிற்கிறாள். பெற்றோரை இழந்த குழந்தையின் ஏக்கம் நிரம்பிய இந்தக் காட்சியில் வெளிப்படும் துயரம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறது.

ஆடையின்றிக் குழந்தைகள் அலறிக்கொண்டு ஓடிவரும் ஓர் ஒளிப்படம் நமக்குப் போர்த் தாக்குதலின் கொடூரத்தை எடுத்துக்காட்டும். அடுத்த வேளை உணவுக்குக்கூட வழி இல்லாத தேசத்தில், கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி ஆயுதங்கள் வாங்கி யாரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்புகின்றன இந்தப் படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in