Published : 17 Jan 2020 11:00 AM
Last Updated : 17 Jan 2020 11:00 AM

டிஜிட்டல் மேடை: இளங்கன்று பயமறியாது!

ஹவாலா வலைப் பின்னலை மையமாக்கி திரில்லர் கதையைப் பரிசோதித்திருக்கும் வலைத்தொடர் ‘ஹவாலா’. ஜீ5 தனது பிரத்யேக வலைத்தொடர் வரிசையில் பொங்கலன்று ஹவாலாவைத் தமிழில் வெளியிட்டுள்ளது.

செய்திகளில் பரவலாக அறியக் கிடைக்கும் ஹவாலா பணப்பரிமாற்றம், கிரிக்கெட் சூதாட்டம் ஆகியவற்றை கலந்து ‘ஹவாலா’ உருவாகி உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான சுவாரசியமான வழிகளை ஆராயும் இளைஞன் கரண். அவனைத் தன் பக்கம் இழுக்கிறது கிரிக்கெட் சூதாட்டம். விவரமறிந்த நண்பன் வாயிலாகத் தேவையான சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ளும் அவன், தனது சமயோசித ஐடியாக்களை அதில் கலந்து பெரும் தொகையை ஈட்டுகிறான். எதையும் ஒருமுறை பரிசோதிக்கும் இளம் வயதுக்கே உரிய ஆர்வத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கரண், முதல் முயற்சியுடன் அதிலிருந்து விடுபடவும் முடிவு செய்கிறான். ஆனால், எதிர்பாரா நிகழ்வுகள் அவனைச் சூதாட்டத்துக்குத் திரும்பவும் அழைக்கின்றன.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈட்டிய பெரும்தொகை, ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் கைக்கு வரும் வழியைத் தனது வழக்கமான ஆர்வத்தில் ஆராய முற்படுகிறான். ஆனால், இடையில் புகும் மூன்றாம் நபரான குணா, அந்தப் பெருந்தொகையைத் தட்டிச் செல்ல, கரண் சீண்டப்படுகிறான். பறிபோன தொகையை மீட்கவும் குணாவைப் பழிவாங்கவும் துடிப்புடன் களமிறங்குகிறான். கரணுக்கு வாணி, குணாவுக்கு நிஷா எனப் பெண்களின் உதவி கிடைக்க, புதியதொரு, எலியும் பூனையுமான விரட்டல் விளையாட்டு தொடங்குகிறது. இறுதியில் நடந்தது என்ன என்பதை ஆறு அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்த வலைத்தொடர்.

எதையும் ஒருமுறை பரிசோதிக்கும் ஆர்வங்கொண்ட இளைஞனின் கிரிக்கெட் சூது , ஹவாலா குறித்த ஆர்வத்தைக் கிளப்பும் தொடக்க அத்தியாயங்கள் தீயெனப் பரவுகின்றன. ‘இன்சைட் எட்ஜ்’ போன்ற கிரிக்கெட் சூதை மையமாகக் கொண்ட பெரும் வலைத்தொடர்கள் கையாண்ட நுட்பங்களே ‘ஹவாலா’விலும் வருகின்றன. ஆயினும் வித்தியாசமான தொடக்கமும், அதையொட்டிய விவரிப்புகளும் கவனத்தை ஈர்க்கின்றன.

ஹவாலா பணப் பரிமாற்றம் நடக்கும் ஹைதராபாத் சார்மினார் பகுதிகளில் நகரும் காட்சிகளும், தெருக்களினூடே விரையும் விரட்டல் காட்சிகளும் மெச்சும்படி அமைந்துள்ளன. அந்தக் காட்சிகளில் சுழலும் கேமராவும், பின்னணி இசையும் பிராந்திய வலைத்தொடர்கள் மத்தியில் பிரம்மாண்டம் கூட்டுகின்றன. ஆனால், இரண்டொரு அத்தியாயங்கள் தரும் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியாது அதற்குப் பின்னரான கதை தத்தளித்து நகர்கிறது.

ஹவாலா பணத்தை இடைமறித்துப் பறித்த மர்ம நபரைத் துரத்தித் துப்பறிவதில் விளக்கப்படும் தொழில்நுட்ப விவரணைகளில் சற்றேனும் கதையில் காட்டியிருந்தால், வலைத்தொடர் முழுமை பெற்றிருக்கும். தட்டையான கதை, தடுமாற்றமான காட்சிகள் எனப் பாதிக்குமேல் வலைத்தொடர் நெளிய வைக்கிறது. வலைத்தொடருக்கான தனித்துவ சுதந்திரத்தின் துணையுடன் கதைப்போக்கைச் சிறப்பாக வடிப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விட்டிருக்கிறார்கள்.

மற்றுமொரு ‘மங்கத்தா’ பாணியில் வேகமெடுத்திருக்க வேண்டிய கதையை முடமாக்கிவிடுகிறார்கள். அதிலும் இழுவையாகச் சென்று முடியும் நிறைவுக் காட்சிகளில், போதிய தெளிவில்லை. அத்தியாயங்கள் 20 நிமிடங்களில் முடிவது பெரும் ஆறுதல். ஹவாலா பின்னணியின் பெயரில் அலுப்புச் சுவையிலான அல்வாவைக் கிண்டியிருக்கிறார்கள்.

விரட்டல் காட்சிகளில் இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாகக் கைகொடுத்திருக்கின்றன. பிரதான கதாபாத்திரங்களில் தோன்றும் கவுரிஷ், தருண் ஆகியோருக்குப் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லாத கதையில் சமாளித்து வைக்கிறார்கள். கிரிக்கெட் ஆர்வத்தின் மிகுதியில் அதுதொடர்பான சூதில் சறுக்கும் இளைஞனுக்கு, ஆன்லைனில் விளையாடி சம்பாதிக்கும் இளம்பெண் நட்பாவது, தங்களது திருமண வாய்ப்பு குறித்து அவர்கள் பேசுவது போன்ற காட்சிகள் இயல்பாகச் செல்கின்றன.

கவுரிஷ் நந்தன், அனுஷா, தருண் ரோகித், ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருக்கும் வலைத்தொடரை கௌசிக் இயக்கி உள்ளார். தெலுங்கில் தயாரான ‘ஹவாலா’ வலைத்தொடர், இந்தியிலும் நவம்பரில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

- சு.சுபாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x