Published : 17 Jan 2020 10:51 AM
Last Updated : 17 Jan 2020 10:51 AM

யேசுதாஸ் 80: இரவுப் பாடகன் ஒருவன்

கவியரசு கண்ணதாசன் கடைசியாக எழுதிய திரைப்பாடலைப் பாடிய பெருமைக்குரியவர் கே.ஜே. யேசுதாஸ். கடந்த வாரம் தமது எண்பதாம் வயதை நிறைவு செய்தார். இந்த நாள் இசை ரசிகர்கள் எல்லோருக்குமே கொண்டாட்ட நாளாகத்தான் இருந்திருக்க வேண்டும். கான கந்தர்வனை யார்தான் சொந்தம் கொண்டாடாது இருக்கக்கூடும்!

‘மஹா கணபதிம்' (சிந்து பைரவி) என்றெடுக்கும் அவரது குரலையடுத்து வயலின் இசைக்கும்போது அதன் இழையோட்டத்தோடு இழைந்து ஒலிக்கின்ற குரல் அவருடையது. ‘என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி) என்ற எடுப்பான பல்லவியினூடே கிதார் இசைக்கும்போது, அந்தக் கம்பி அதிர்வை ஒத்திருக்கிறது அவரது குரல் நாணும். ‘வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு..' (வாழ்வு என் பக்கம்) என்று வீணைத் தந்திகளோடு கைகோத்துத் துள்ளல் நடை போடும் குரல் அவருடையது. கிறக்கம் ஊட்டும்படி, ‘உன்னிடம் மயங்குகிறேன்' (தேன் சிந்துதே வானம்) என்று குழையும் அவரது குரல் தான், போதையின் வலியையே ஆலாபனை ஆக்கிப், ‘பூமாலை வாங்கி வந்தான்..' (சிந்து பைரவி) என்று ருசிக்கிறது.

காட்டு வழிப்பாதையை மணக்கவைக்கும் ‘செந்தாழம் பூவில்..' (முள்ளும் மலரும்) உடன் ஒலித்து வருமானால், எத்தனை தூரமும் ஒரு வனத்தில் திரிய முடியும். ‘ஏரிக்கரை பூங்காற்றே..' (தூறல் நின்னு போச்சு) என்று இயற்கையை ரசிக்க முடியும். காட்சியைச் சுமந்து வந்து கொடுக்கும் ஒரு குரல் அவருடைய போகும் சிறகுகள் அவரது குரல் நாண்கள்.

நினைவாலே சிலை செய்தவை

யேசுதாஸின் பாடல்களின் பல்லவியில் பிறக்கும் இன்பத்தை, சரணத்தில் வரும் இடங்கள் போட்டிக்கு இழுக்க, அந்தச் சரணத்திலிருந்து பல்லவிக்கு மீளும் இடம் ரசிக மனங்களைச் சொக்கவைக்கும். கேட்கும் யாரும், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டாலும், உலகம் புரிஞ்சுக்கிட்டாலும் (படிக்காதவன்) உள்ளத்தை உலுக்கி எடுக்கும்.

‘உன் வாசலில் என்னைக் கோலமிடு இல்லை என்றால் ஒரு சாபமிடு..' (ஈரமான ரோஜாவே...- இளமைக் காலங்கள்) என்று நிறுத்திப் ‘பொன்னா...ர...மே..'என்று இழுக்கும் இழுப்பில் அவரவர் சொந்த சோகங்களும் அல்லவா சேர்ந்து கரைந்துபோகும்..' நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா...ஆ...ஆ...' (தெய்வம் தந்த வீடு - அவள் ஒரு தொடர்கதை) என்ற ஆலாபனை யார் காதில் விழுந்தாலும் அவரது நடையுமல்லவா தள்ளாடும்! ‘பின்னிய கூ... ...ந்தல் கரு நிற நா... கம்' (அபூர்வ ராகங்கள்) என்ற கம்பீர வருணிப்பை அத்தனை எளிதில் யார் கடந்துவிடக் கூடும்? ‘பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்...' (பழமுதிர் சோலை - வருஷம் 16) என்று அவர் குரல் கொடுத்தால், அவரோடு சேர்ந்து, ‘பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்' தானே?

'ஆகாய வெண்ணிலாவை' தரை மீது கொண்டு வந்து இறக்கிய (அரங்கேற்ற வேளை ) இசைக்கலைஞர், ‘என்னை விட்டால் யாருமில்லை' (நாளை நமதே ) என்று தனித்துவமாக வழங்கிய பாடல்கள் கணக்கற்றவை. ‘விழியே கதை எழுது’ (உரிமைக்குரல்) என்று எழுத வைத்தவை. ‘மனைவி அமைவதெல்லாம்...' (மன்மத லீலை) என்று இலக்கணம் வாசித்தவை. ‘அழகே அழகு..'.(ராஜ பார்வை) என்று கொஞ்சிக் கொண்டாட வைத்தவை. ‘பூங்காற்று புதிதானது' (மூன்றாம் பிறை) என்று தாளமிட வைப்பவை. ‘பூவே செம்பூவே..' (சொல்லத் துடிக்குது மனசு) என்று நெஞ்சம் நெகிழ வைப்பவை.

இணை குரலாக எந்தக் குரல் இசைத்தாலும், பின்னணி இசையை யார் தொடுத்தாலும், உள்ளத்தில் சுழலும் இசைத்தட்டில் மிதந்து கொண்டே இருக்கும் பாடல்கள் அவை. ‘மலரே குறிஞ்சி மலரே' , பூவிழி வாசலில் யாரடி வந்தது', ‘கிண்ணத்தில் தேன்' ... என்ற நீண்ட வரிசையில் எஸ் ஜானகியோடு இசைத்த எல்லாப் பாடல்களுமே ஒலிக்கத் தொடங்கும்போதே, ‘தென்றல் வந்து நம்மைத் தொடும்' அனுபவத்தை எப்படி விவரிக்க! பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த ‘அழகெனும் ஓவியம் இங்கே', ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை', ‘பாட வந்ததோர்..', ‘நீல நயனங்களில்..', ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்' என்ற பட்டியலில், எல்லாமே ‘நெஞ்சத்தைக் கொஞ்சம் அள்ளித் தா தா' என்று கிள்ளிச் செல்பவை தானே...வாணி ஜெயராமோடு இணைந்து ‘அந்த மானைப் பாருங்கள்..' ‘இது இரவா பகலா..' ‘தென்றலில் ஆடும்..', ‘திருமாலின் திருமார்பில்..' மான் கண்டேன் மான் கண்டேன்..' என்று விரியும் பாடல்கள் எல்லாம் ‘நினைவாலே சிலை செய்து' நமக்காக வைத்திருப்பதை தானே...

இணைந்தும் தனித்தும்

எஸ் பி பி அவர்களோடு ‘இரண்டு கைகள் இணைந்து' நின்ற (நாளை நமதே), ‘காட்டுக் குயிலு மனசுக்குள்ளே' (தளபதி) பாட்டுக்கென்றும் பஞ்சம் இல்லை.. டி.எம்.எஸ். அவர்களோடும் (ராமு ஐ லவ் யூ), எம் எஸ் விசுவநாதனோடும் (நாளை உலகை ஆளவேண்டும்), எல்.ஆர். ஈஸ்வரியுடனும் ('ஹலோ மை டியர் ராங் நம்பர்) இன்னும் வேறு பல குரல்களோடும் இணைந்தும், தனித்தும் யேசுதாஸ் இசைத்திருக்கும் பாடல்கள், ‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றிய' காலத்திலிருந்தே தித்தித்துக்கொண்டிருப்பவை.

'அம்மா என்றழைக்காத உயிர்' (மன்னன்) இல்லை தானே..' வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்' (மயங்குகிறாள் ஒரு மாது) அல்லவா.. இப்படியான இழைப்புகள் மட்டுமல்ல, ‘மேலும் கீழும் கோடுகள் போடு' (யாருக்கும் வெட்கமில்லை) என்று தத்துவம் இசைக்கவும், ‘தானே தனக்குள் ரசிக்கின்றாள்' (பேரும் புகழும்) என்றும், ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு' (நீதிக்குத் தலை வணங்கு) என்றும், ‘பச்சைக் கிளிகள் தோளோடு..' (இந்தியன்) என்றுமாக மெல்லுணர்வுகளைத் தீண்டவுமாக எத்தனை எத்தனை வண்ணங்களில் விரிகிறது யேசுதாஸ் இசையுலகம்.

'மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்' (கரும்பு வில்) ஊர்வலம் போவதை அவர் குரல்தான் காதலருக்கு என்னமாக அடையாளம் காட்டுகிறது! ‘உறவுகள் தொடர்கதை..' (அவள் அப்படித்தான்) எனும் நுட்பமான பாடலில் ‘உன் நெஞ்சிலே பாரம், உனக்காகவே நானும் சுமை தாங்கியாய்த் தாங்குவேன்' போன்ற இடங்களில், இசைக் கருவிகளிலிருந்து கசியும் துயரத்தில் சொற்களை நனைத்து உலர்த்தி ஆற்றுப்படுத்திக்கொண்டே செல்லும் அவரது குரல், கதைக்களத்தை என்னமாகக் காட்சிப்படுத்திவிடுகிறது! ‘கண்ணே கலைமானே..' (மூன்றாம் பிறை) ஒன்று போதாதா கால காலத்துக்கும்!

சில வரிகள் பாடினாலும்..

'காதலின் மென்சிறகு துடிக்கவும், பிரிவின் வேதனை தவிக்கவும், ‘பார்த்த விழி பார்த்தபடி' (குணா) பூத்துப் போகவும், ‘தங்கத் தோணியிலே' (உலகம் சுற்றும் வாலிபன்) தவழ்ந்து கிடைக்கவும், ‘நிலை மாறும் உலகில்..' (ஊமை விழிகள்) இரவுகளைக் கண்ணீரில் கரைக்கவும், உள்ளம் நிறைக்கவுமாக யேசுதாஸ், கவிஞர்களும் இசை அமைப்பாளர்களும் செதுக்கும் சிற்பங்களுக்கு உயிரூட்டிய பாடல்களை எப்படித் தொகுக்க முடியும். (எல்.ஆர்.ஈஸ்வரியின் பங்களிப்பை எழுதுகையில் அவரது முத்திரைப் பாடலான ‘எலந்தப் பயத்தை’ விட்டதற்கு அன்பர்களிடம் பட்ட பாடு போதாதா?).

மிக நீண்ட பாடலாகக் கூட இருக்க வேண்டியதில்லை.. கே.ஜே.யேசுதாஸ் குரலின் இனிமைக்கும், குழைவுக்கும், கேட்பவர் மனத்தின் அலைபாய்தலைச் சாந்தப்படுத்தி அமைதி கொள்ளவைக்கும் அசாத்திய தன்மைக்கும், ‘இரவுப் பாடகன்' (ஊருக்கு உழைப்பவன்) ஒருவனாக மிகச் சிறிய பாடலிலும் அவரைக் கண்டெடுத்து, அவரது எண்பது வயதைக் கொண்டாடிக் கொண்டே இருக்க முடியும்.

- எஸ் வி வேணுகோபாலன், தொடர்புக்கு: sv.venu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x