Published : 10 Jan 2020 01:52 PM
Last Updated : 10 Jan 2020 01:52 PM

தமிழ் சினிமாவுக்கு வருகிறேன்! - அல்லு அர்ஜுன் பேட்டி

ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி யின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கவர்ந்து பின் கதாநாயகனாக மாறியவர் அல்லு அர்ஜுன். நடிப்பிலும் நடனத்திலும் தனக்கென தனிப் பாணியைப் பின்பற்றி டோலிவுட்டின் சாக்லேட் ஹீரோவாகத் தொடர்கிறார்.

சூப்பர் ஹிட் இயக்குநர்களின் பட்டியலில் தொடரும் த்ரிவிக்ரமுடன் அல்லு அர்ஜுன் கூட்டணி அமைத்திருக்கும் 'அலா வைகுந்தபுரம்லோ' என்னும் தெலுங்குப் படம் நாளை மறுநாள் ’சங்கராந்தி’ பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது. மொழி கடந்து தனக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் ‘இந்து தமிழ் திசை’க்கு ஹைதராபாத்தில் அளித்த பிரத்யேகப் பேட்டி இது..

இயக்குநர் த்ரிவிக்ரமுடன் இணைந்து ஏற்கெனவே ஹிட் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அவருடன் கூட்டணி. ஏன்?

சரியான நேரத்தில் நாங்கள் சந்தித்தோம். அவர் வேறு எந்தவொரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். எல்லாவற்றையும் வித்தியாசமாகப் பார்க்கும் இயக்குநர். குடும்பப் பொழுதுபோக்குப் படங்களுக்கெனத் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேர் சங்கராந்தி பண்டிகைக்குக் குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். அவர்களுக்காக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவுசெய்தோம். எங்கள் கதையும் அதற்குப் பொருத்தமாக இருந்தது. மாஸ் ஹீரோக்களை வைத்து கதையம்சம் உள்ள படத்தைத் தருவது கடினம். அதில் அவர் கெட்டிக்காரர்.

படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரல் ஆகியிருக்கின்றன. உங்களுடைய படங்களின் பாடல்கள் அனைத்தும் வெற்றியடைந்துவிடுவதில் இருக்கும் ரகசியம் என்ன?

எனக்கு எப்படியோ அமை கிறது. எல்லா நடிகர்களுக்குமே ஒரு பலம் இருக்கும். என் முக்கியமான பலம் பாடல்கள் என்று நினைக்கிறேன். ரசிகர்களிடம் பாடல்கள் மூலம் விரைவில் சென்றடைகிறேன். இசையமைப்பாளருக்கும் பெயர் கிடைக்கிறது. இந்த நடிகருக்குப் பாடல் முக்கியம், பாடல்கள் இவனது ஒரு பலம், நாம் சிறந்த இசையைத் தர வேண்டும் என இசையமைப்பாளர்களும் நினைக்கி றார்கள் போல. என்னைவிட அதிகப் பொறுப்புணர்வோடு இருக்கிறார்கள். அவர்கள் இசைக்குச் சிறந்த காட்சிகளைத் தர முயல்கிறேன்.

நடனத்துக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ளீர்கள். நடனம் தொடர்பான படத்தில் உங்களை எப்போது பார்க்கலாம்?

நடனத்தில் புதிதாகச் செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. பத்து புதிய யோசனைகள் இருந்தால், அதில் இரண்டு தான் திரையில் வரும். நடனத்தில் இன்னும் கூட மெனக்கெடல் வேண்டும் என்றே நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் நடனம் சம்பந்தமான படங்களில் நடிக்கும் விருப்பம் எனக்கு இல்லை. இது என் ரசனையே. சினிமாவில் நடனம் என்பது சின்ன அங்கமே. அது கதையில் தேவையற்ற கவனச் சிதறலை ஏற்படுத்துவதை விரும்ப மாட்டேன்.

இருமொழிப் படங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அது கண்டிப்பாகச் சாத்தியப்படும். நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் கடந்த ஆண்டு நடிக்க முடிவு செய்திருந்தேன். அது தற்காலிகமாகத் தள்ளிப்போய்விட்டது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தமிழிலும் கண்டிப்பாகப் படம் நடிக்க வேண்டும். ஒரு படம் என்றில்லை. இங்கும் அங்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய அளவில் நல்ல நடிகனாக இருக்க வேண்டும். அப்படி இருந்தாலே தேசிய அளவில் நாம் கவனிக்கப்படுவோம். ரஜினி சார் போல!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதே..

பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எல்லாம் அதிகாரபூர்வமாக முடிவானதும் அதைப் பற்றிப் பேசுகிறேன். அவருடன் படம் என்றால் கண்டிப்பாக அது தென்னிந்திய அளவில் பல மொழிகளில், அல்லது இந்தியிலும் சேர்ந்தேதான் எடுக்கப்படும்.

ஒரு பெரிய நடிகர் என்ற வகையில் உங்களைத் திரையில் வெளிப்படுத்தும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறீர்கள்?

சமூகத்தில் நடிகர்களுடைய தாக்கம் என்பது இருக்கத்தான் செய்கிறது. இளைஞர்கள், குடும்பங்கள், ஏன் குழந்தைகள்கூட சினிமாவைப் பார்த்துப் பின்பற்றுகிறார்கள். எனவே, முடிந்தவரை சிகரெட் பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்துவிடுவேன். தொடக்க காலத்தில் சிகரெட் பிடித்தபடியே நடித்து, ஆடியிருக்கிறேன். பின் எனது மகனே அதைச் செய்து காட்டியபோது அது தவறான முன்னுதாரணம் என்பது புரிந்தது. பாடல்களில் இப்படியான விஷயங்களை அடியோடு தவிர்ப்பேன். ஏனென்றால், குழந்தைகள் படங்களைப் பார்க்கவில்லை என்றால்கூட, டிவியில் பாடல்களைப் பார்ப்பார்கள். அதேபோல் பெண்களுக்கு எதிரான வசனங்களையும் தவிர்த்துவிடுவேன்.

படத்தின் வசூல் நிலவரங்களைத் தெரிந்துகொள்வீர்களா?

தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். சினிமா வியாபாரம் பற்றித் தெரிய வரும் என்றாலும் எனக்கு வசூல் நிலவரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருப்பதால் தெரிந்துகொள்வேன். எங்களுக்கான சந்தையைத் தாண்டி, பட்ஜெட் அதிகமாகும்போது இன்னும் மேம்பட்ட படங்களைத் தர முடியும். நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து படம் எடுக்க முடியும். வெளிநாடுகளில் போய் எடுக்கலாம். ‘சாஹோ’ மாதிரியான பட்ஜெட் இருந்தால் சிறந்த படங்கள் எடுக்க முடியும். அதற்காக எங்கள் சந்தையை விரிவுபடுத்த வேண்டும். இது சினிமாவின் மீது எங்களுக்கிருக்கும் அன்பால்தான்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x