காலத்தின் தேவை: ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே மதம்

காலத்தின் தேவை: ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே மதம்
Updated on
2 min read

ரிஷி

வரலாறு திரும்பிக்கொண்டே இருக்கிறது. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் காலத்தில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் 1943-ல் ‘டோண்ட் பி எ சக்கர்’ (Don't Be a Sucker) என்னும் ஒரு குறும்படத்தை உருவாக்கி வெளியிட்டிருந்தனர்.

ஜெர்மனியை ஹிட்லர் எப்படித் தன் முழு ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தார், அதற்குப் பயன்பட்ட உத்தி, மக்களுக்கு அது எவ்வளவு ஆபத்தானது உள்ளிட்ட பின்னணியை இந்தப் படம் மிகத் தெளிவாக விளக்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இந்தப் படம் சுற்றுக்கு விடப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆட்சியில் அமெரிக்காவைப் பார்க்கும்போது வரலாறு திரும்புகிறதோ என்ற எண்ணத்தை அது மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படத்தில் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர் ஒருவர், பொதுவெளியில் தன் நாட்டின் வேலைவாய்ப்புகளையும் வளங்களையும் அமெரிக்காவில் குடியேறிய பிற நாட்டினர் அனுபவித்துவருவதை ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

இந்த நாட்டிலுள்ள கறுப்பர்களையும் கத்தோலிக்கரையும் பிற நாட்டினரையும் ஃப்ரீமேசன் அமைப்பினரையும் வெளியேற்றாவிட்டால் இது நமக்கான நாடாக இல்லாமல் போய்விடும் என்றும் நாம் அவர்களை அழிக்காவிட்டால் அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என்றும் அச்சுறுத்துகிறார். அதன் பின்பு அவர் கூறிய உண்மைகளை விளக்கும் சிறு பிரசுரம் ஒன்றையும் விநியோகிக்கிறார். இதை ஃப்ரீமேசனான மைக் என்பவர் பெற்றுக்கொண்டு வாசிக்க முடிவெடுக்கிறார்.

அப்போது மைக் அருகே நின்றுகொண்டு இதைக் கவனித்த ஹங்கேரியில் பிறந்த, அமெரிக்கக் குடிமகனான பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் வாழும் அனைவரும் அமெரிக்கர்தான் என்றும் இதைப் போன்று பேச்சுக்கள் ஆபத்தானவை என்பதையும் மைக்கிடம் கூறுகிறார்.

1932-ல் ஜெர்மனியில் இதைப் போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்கிறார். நாஜிக்கள் மட்டுமே ஜெர்மனியில் இருக்க வேண்டும் யூதர்களும் கத்தோலிக்கர்களும் நமது வளத்தைச் சுரண்டுகிறார்கள். இப்படிப் பலவாறு பேசி நாட்டைத் துண்டாடினார்கள். மக்களைத் தூண்டிச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்தார்கள். மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்தார்கள்.

பின்னர் ஒவ்வொன்றாக அழித்தார்கள். சிறு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என ஒவ்வொன்றாக அழித்து ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே மதம் என்னும் சித்தாந்தத்தை வலிமைப்படுத்தினார்கள். இறுதியில் ஆட்சிக்கும் வந்தார்கள். ஆனாலும், அவர்கள் முன்மொழிந்த வளமான ஆட்சியை வழங்க இயலவில்லை. உண்மை அவர்களை உறுத்தியது.

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் உண்மையைப் பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் அடக்கினார்கள். லட்சக்கணக்கான புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தங்கள் நாட்டுப் பிரச்சினைகளை மறைக்க போர் வெறியைத் தூண்டினார்கள். இறுதியில் ஜெர்மனி வீழ்ந்தது. இதில் அதிக நஷ்டமடைந்தது நாஜிக்கள் வாக்களித்த பொன்னான ஜெர்மனி மலரும் என நம்பிய அப்பாவி ஜெர்மானியர்கள்தாம்.

இந்தப் படத்தில்,பேராசிரியர் ஒருவர் ‘அறிவியல் ரீதியாக ஒவ்வொருவரும் தனித்தனியான மனிதர்தான், ஒவ்வொருவரும் தனித் தனியான சிறப்புகளுடன் உள்ளனர், அதேநேரம் உயர்ந்த இனம் என எதுவும் இல்லை. எல்லா இனங்களிலும் மேன்மையான மனிதர்களும் கீழ்மையானவர்களும் உள்ளனர். மனிதர்களை இனரீதியாகப் பிரித்தல் சரியல்ல’ என்றும் விளக்குவார்.

மனிதர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். எல்லா வகையான மனிதர்களும் ஒருங்கிணைந்து வாழும் நாட்டை ‘ஒரே மதம் ஒரே கட்சி ஒரே நாடு’ எனப் பிரிக்க முயலும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டுகிறது 77 ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தின் தேவை கருதி உருவான, இன்றைய காலகட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தும் ‘டோண்ட் பி எ சக்கர்’. அப்படம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒன்று. அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகத்தில் படம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

‘டோண்ட் பி எ சக்கர்’ என்னும்
குறும்படத்தைக் காண செல்பேசியில் இணையச் சுட்டி: https://bit.ly/2QsIcPA

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in