ஹாலிவுட் ஜன்னல்: கனிந்த காதலின் சுவை

ஹாலிவுட் ஜன்னல்: கனிந்த காதலின் சுவை
Updated on
1 min read

சுமன்

சாதாரண வாழ்க்கையில் நாம் உணர நேரிடும் அசாதாரண தருணங்களைப் பதிவு செய்யும் திரைப்படங்களின் வரிசையில் வெளியாக இருக்கிறது ‘ஆர்டினரி லவ்’ திரைப்படம். டாம், ஜோன் இருவரும் மத்திம வயதைக் கடந்த ஜோடி. வயதைப் போன்றே அவர்களின் காதலும் கனிந்து இனிக்கிறது. தித்திப்பின் உச்சத்தில் விஷத்தின் கசப்பாய்ப் புதிய சங்கடமொன்றை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் என அறிந்ததும், கணவர் தவித்துப் போகிறார். கணவரைப் பிரியப்போகும் வேதனையில், மிச்சமிருக்கும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க மனைவி மறுகுகிறார். குணப்படுத்த முடியாத நோய்க்கு எதிரான போராட்டத்தில், அவர்களின் காதல் அதுவரை சந்தித்திராத அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது.

இந்தக் கனிந்த காதல் பயணத்தின் அருமையான தருணங்களைப்பதிவுசெய்ய முற்படுகிறது ‘ஆர்டினரி லவ்’ திரைப்படம். மணமாகி ஆண்டுகள் கழிந்ததில் தம்பதியரிடையே ஆழமாக வேரூன்றிய காதலின் உறுதி, அவர்கள் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் கதகதப்பான பொழுதுகள் எனச் சோகமான படத்தைக் கலகலப்பாகவும் சொல்ல முயல்கிறது திரைக்கதை. முதிர் ஜோடியின் போராட்டம் வாயிலாக, வாழ்க்கை குறித்தும், திருமண பந்தத்தின் நேசம் குறித்தும் ஏராளமான கேள்விகளைத் திரைப்படம் முன்வைக்கிறது.

முதிர்ந்த ஜோடியாக லியம் நீசன், லெஸ்லி மேன்வில் ஆகியோர் நடித்துள்ளனர். உடன் டேவிட் வில்மட், மேகி க்ரோனின் ஆகியோருடன், இந்திய வம்சாவளியரான அமித் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை லிசா பாரோஸ், க்ளன் லேபர்ன் இணைந்து இயக்கி உள்ளனர். ‘ஆர்டினரி லவ்’ காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in